For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் பிளஸ் டூ வினாத்தாள் அனுப்பிய விவகாரம் - டி.இ.ஓ., உட்பட நால்வர் சஸ்பெண்ட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பிளஸ் டூ வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி ப்ளஸ் டூ கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை ‘வாட்ஸ் அப்' மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் ‘வாட்ஸ் அப்' மூலம் அனுப்பப்பட்டது.

Action against DEO for paper leak

4 ஆசிரியர்கள் கைது

இவர்கள் நால்வரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆவார்கள். இது தொடர்பாக ஆசிரியர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

தற்போது இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாவட்டத்தில் உள்ள சில தேர்வு மையங்களை, நேற்று பார்வையிட்டு, தேர்வுப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தனியார் பள்ளிகளில்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு பள்ளி தேர்வு மையம் மற்றும் தர்மபுரியில், பச்சமுத்து, செந்தில், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் மற்றும் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உட்பட, ஆறு பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தேன். ஓசூரில், கடந்த 18ஆம் தேதி, பிளஸ் 2 கணித தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியான சம்பவம் தொடர்பாக, போலீசார், தனியார் பள்ளியை சேர்ந்த, மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய, நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

துறை ரீதியான விசாரணை

இது தொடர்பாக, போலீசார் தரப்பு விசாரணை முடிந்த பின், எங்கள் தரப்பு விசாரணையை துவங்குவோம். வரும் 31ஆம் தேதி வரை, பிளஸ் டூ தேர்வு நடப்பதால், தேர்வு முடிந்த பின், கல்வித் துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டு, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும்.

உதவியவர்கள் யார்?

மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சிறையில் உள்ளதால், அவர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள், யார் யார் என்பது தெரியவில்லை. அவர்களிடம், போலீசார் விரிவான விசாரணை நடத்தினால் தான், எல்லாம் தெரியும். இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது.

உத்தரவு இன்றி பணி

தனியார் பள்ளிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்படலாம்; அதில் தவறு இல்லை. ஆனால், சரியான உத்தரவு நகல் இல்லாமல், தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய விவகாரம் குறித்தும், ஆள் மாறாட்டம் நடந்ததா என்பது குறித்தும், கல்வித் துறை தரப்பில் விசாரணை நடத்தப்படும்.

டி.இ.ஒ சஸ்பெண்ட்

ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், அரசு பள்ளி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கூண்டோடு இடமாற்றம்

இந்தநிலையில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய வேறு பள்ளிகளைச் சேர்ந்த 68 ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார். அவர்களுக்கு பதிலாக நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வுக்கு ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி தேர்வு அறைகளுக்கு தலா இருவர் வீதம், 88 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

புதிய ஆசிரியர்கள் நியமனம்

மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள அதே ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு பள்ளியில் 25 தேர்வு அறைகளுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த 50 ஆசிரியர்கள் அங்கிருந்து மாற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு பதிலாக 50 கண்காணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீதியுள்ள பிளஸ் 2 தேர்வுகளை, எவ்வித முறைகேடும் இல்லாமல் நடத்த, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய, 35 குழுக்களை அமைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

யார் யாருக்கு தொடர்பு

இதனிடையே வினாத்தாளை பிரதி எடுத்து அனுப்பியது, விடைகளை தயார் செய்து, அந்த நகலை பிரதி எடுத்து ‘வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியது என்று இந்த விவகாரத்தில் சுமார் 20 முதல் 30 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வர் மீதும், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The District Education Officer, Hosur, and four others were suspended here in connection with last week’s arrest of four school teachers, including two invigilators, for sharing Plus Two question paper over a social network platform from the examination hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X