For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் மகாமகம்: சிவன் உருவாக்கிய ஆதிகும்பேஸ்வரர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: மகாமகம் திருவிழாவை முன்னிட்டு சிவ பெருமான் உருவாக்கிய ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்

மகாமக பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், ஹாளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய சைவ கோவில்களிலும், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் கோவில்களிலும் சிறப்பாக 10 நாள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

Adi Kumbeswarar Temple kumbakonam

இதையடுத்து 5ம் திருநாள் ஓலைசப்பரம், 7ம்திருநாள் திருக்கல்யாணம், 8,9ம் நாட்களில் திருத்தேரோட்டமும், 22ம்தேதி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.

ஆதிகும்பேஸ்வரர் வரலாறு

கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.

உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார்.

கும்பகோணம்

பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.

சிவன் உருவாக்கிய சிவலிங்கம்

சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.

அமுதத்தில் தோன்றிய இறைவன்

கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார் என்பது வரலாறு. ஆதியில் தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும் அமுதத்தில் தோன்றியதால் அமுதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தங்க கவசம்

இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன கும்பத்தின் வடிவம் உடையவர் என்பதால் எப்பொழுதும் தங்கக் கவசம் அணிவித்தே அபிஷேகம் நடைபெறுகிறது.

மூன்று கோபுரங்கள்

இந்த ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது. கிழக்கே உள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இந்த இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரம் கொண்டதாகும்.

அருள்மிகு மங்காம்பிகை

தனி சன்னதி கொண்டுள்ள அருள்மிகு மங்களாம்பிகை வரப்பிரசாதி. வழிபடுபவர்களுக்கு மங்களங்களைத் தருவதால் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

சக்தி பீடம்

அம்மன் சக்தி பீடங்களில் மந்திர பீடம் இங்குள்ளது. 72ஆயிரம் கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் உள்ளன. இதில் எழுந்தருளியவர் என்பதால் மந்திர பீடேஸ்வரி என்றும் போற்றப்படுகிறாள்.

சிற்ப வேலைப்பாடுகள்

கொடிக் கம்பம் அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சந்நிதி உள்ளது. இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் மட்டும் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது.

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்

நவராத்திரி மண்டப விதானத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களைச் சேர்த்து ஒரே கல்லில் சிற்பம் வடித்துள்ளனர். மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும் அதிலுள்ள சித்திரங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் காண கண் கோடி வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

48 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம்

வருகிற 20ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 1968ம் ஆண்டு நடந்த மகாமகம் பெருவிழாவின்போதுதான் 5 தேர்களும் ஓடியது. அதற்கு பிறகு இந்த ஆண்டுதான் தேரோட்டம் நடக்கிறது.

புனித நீராடல்

மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி 22ம் தேதி மகாமக குளத்தில் மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறுகிறது. அப்போது மகாமககுளத்தின் 4 கரைகளிலும் 12 சைவ கோவில்களின் சாமிகள் எழுந்தருள்வார்கள். அதன்பின்னர் நடைபெறும் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.

மகாமகம் தீர்த்தக்குளம்

மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இங்குள்ள திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி உள்ளிட்ட நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

English summary
Adi Kumbeswarar Temple is a Hindu temple dedicated to the deity Shiva, located in the town of Kumbakonam in Tamil Nadu, India. Shiva is worshiped as Adi Kumbeswarar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Mangalambigai Amman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X