2வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெ. அரசு போட்ட முதல் அவதூறு வழக்கு!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு முதல் அவதூறு வழக்கு நக்கீரன் இதழ் மீது பாய்ந்துள்ளது.
கண்டெய்னர் லாரிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த அவதூறு வழக்குப் பாய்ந்துள்ளது.

ஜெயலலிதா அரசு மீண்டும் அமைந்த பின்னர் ஊடகங்கள் மீது போடப்பட்டுள்ள முதல் அவதூறு வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மே 23ம் தேதியிட்ட நக்கீரன் பத்திரிக்கையில், கண்டெய்னரில் பணம் பதுக்கல்; மறைக்கப்பட்ட உண்மைகள். சிக்கிய ஆவணங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி பொய்யானது.
தமிழக மக்களின் பேராதரவுடன், நன் மதிப்பை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்று உள்ள ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியினால், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறான செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், செய்தியாளர் அருண் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும்.