அதிமுக - அமமுக குழப்பம்.. அமைச்சர்கள் ரியாக்ஷன்!!

அதிமுக - அமமுக இடையேயான குழப்பம் குறித்து அமைச்சர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுக - அமமுக இடையேயான குழப்பம் குறித்து அமைச்சர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தன்னை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டது உண்மைதான் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ஓபிஎஸ் முயற்சி செய்ததாகவும் தினகரன் கூறினார்.
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அதிமுக அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் தங்கமணி
இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறியதாவது,
தினகரனின் பொய் பிரச்சாரத்தை தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

பிரித்தாளும் செயல்
அணிகள் இணைப்புக்கு முன் தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கலாம். தன்னுடைய 20 ரூபாய் நோட்டு வேலை செய்யாத காரணத்தால் தினகரன் இதுபோன்ற பிரித்தாளும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பிரிக்க முடியாது
இதுகுறித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்திருப்பதாவது, ஒற்றுமையாக இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்கிறார். சகோதரர்களை போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை வழி நடத்துகிறார்கள். சகோதரர்களை பிரிக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சி செய்து வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனிடையே டிடிவி தினகரனை இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.