For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று நேற்றா நடக்கிறது இந்த "அடல்ட்ஸ் ஒன்லி" அரசியல்...!

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் இது ஒரு சித்து விளையாட்டு போல. ஒரு கட்சியைச் சேர்ந்தவர், இன்னொரு கட்சித் தலைவர்களை வசை பாடுவது.. அதுவும் ஆபாசம் மற்றும் வக்கிரம் கலந்து வசை பாடினால் கூடுதல் எபக்ட் கிடைக்கும்.. வசை பாடுவோரின் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கு. இன்று நேற்றல்ல.. ரொம்ப காலமாகவே தமிழகத்தின் "திராவிட அரசியல்" இதைத்தான் செய்து வருகிறது.. மக்களும் சளைக்காமல் பார்த்துத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, இன்ன பிற கட்சிகளாக இருந்தாலும் சரி, ஆபாசமாக பேசுவதற்கு ஊருக்கு ஒரு பேச்சாளர் இருப்பதை பார்க்கலாம். இவர்களது பேச்சைக் கேட்கக் கூடும் கூட்டம் பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருப்பார்கள். தப்பித் தவறி பெண்கள் யாரேனும் வந்து விட்டால், அம்மா போய்ருங்கம்மா, எங்க பேச்சையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்து விட்டு "பேச்சை"த் தொடருவார்கள்.

Adults Only politics rule Tamil Nadu

தீப்பொறி ஆறுமுகம் அப்படிப்பட்ட பேச்சாளர்தான். இவரது பேச்சில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஏ ரக நெடிதான் ஏகபோகமாக இருக்கும். இவரது கூட்டங்கள் எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி கூட்டம்தான். ஜெயலலிதாவை இவர் விமர்சிக்காத கீழ்த்தரமான வார்த்தைகளே தமிழில் கிடையாது. நம் தமிழா இது என்று மனம் வெறுத்துப் போகும் அளவுக்கு அப்படி விமர்சனம் செய்து பேசுவார் தீப்பொறியார்.

அதேபோல வெற்றிகொண்டான். இவரைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. இவரும் இன்னொரு தீப்பொறி திருமுகம்தான். இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள். இவர்களைப் போல கிட்டத்தட்ட எல்லாக் கட்சியிலும் யாரேனும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களது பேச்சைக் கேட்கவும் ஒரு கூட்டம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆக, தொடக்க நிலையிலேயே ஆபாசத்தையும், வக்கிரத்தையும் தொண்டர்கள் மனதில் ஊட்டி வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த அரசியல் கட்சியினர். தலைவர்களின் ஆதரவும் இவர்களது வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். இல்லாவிட்டால் தீப்பொறி ஆறுமுகமும், வெற்றிகொண்டானும் கடைசி வரை அவர்கள் இருந்த கட்சிகளின் தலைவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டிருப்பார்களா...?

இப்படி அடி மட்ட அளவில் இருந்து வந்த ஆபாசமும், வக்கிரமும், கோபமும், கொந்தளிப்பும் இன்று தலைவர்கள் அளவுக்கு வந்திருப்பதுதான் சற்று கவலை தருகிறது. முன்பு குத்தாட்டம் போடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். இன்று ஹீரோயின்களே குத்தாட்டம் போடுகிறார்கள் அல்லவா.. அதுபோலத்தான் இதுவும் ஒருவகை பரிணாம வளர்ச்சி.

திமுக தலைவரைப் பற்றி அசிங்கமாக, கேவலமாக பேசினால் அதிமுக தரப்பு அக மகிழ்கிறது. அதேபோல அதிமுக தலைமையை விமர்சித்துப் பேசினால் திமுக தரப்பு மகிழ்ச்சி அடைகிறது. இப்படித்தான் இன்றைய அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் தூற்றி, தூசி தட்டி தூர் வாரிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இது அரசியல் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களை தட்டி எழுப்பி ..டோய் தீயா இருக்கனும்டா என்று உசுப்பேற்றும் செயலாகும். கிட்டத்தட்ட அவர்களைத் தூண்டி விட்டு தூபம் போடும் செயல். இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லை... எல்லோருமே பாரபட்சம் இல்லாமல் இதைச் செய்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.

தனி நபர் தாக்குதல் மிக மிக சாதாரணம் தமிழக அரசியல் களத்தில். அவரது குடும்பத்தைப் பற்றி இவரும், இவரது குடும்பத்தைப் பற்றி அவரும் பேசாத தலைவர்களே கிடையாது.

முன்பு ஒழுக்கம் என்பது மிக முக்கியமான அளவுகோலாக அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கு வருவோருக்கும் இருந்தது. அக்காலத்து அரசியல் தலைவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால் இன்று அதெல்லாம் முக்கியமில்லை. அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை.

தனி மனித ஒழுக்கம், நேர்மை, தூய்மை, கடமை என்றெல்லாம் இன்று யாரும் மெனக்கெடுவதில்லை. நாலு பைட், 2 குத்துப் பாட்டு, 2 டூயட் என்று சினிமாவில் செய்வது போல, அரசியலுக்கு வந்தோமா, வாக்கு வங்கியை ஏற்படுத்தினோமா, கூட்டணி அமைச்சோமா, குப்பையை அள்ளினோமா என்று போக ஆரம்பித்து விட்டனர்.

நாலு நாலாந்தர பேச்சாளர்களை வைத்துக் கொண்டு கட்சி நடத்துவோரம் உண்டு. நல்ல தமிழ்ப் புலமை கொண்ட அல்லது இயல்பான பேச்சாளர்களைக் கொண்ட கட்சிகளும் உண்டு. ஆனால் வெல்வது அல்லது கவனிக்கப்படுவது என்னவோ அந்த நாலாந்தர பேச்சாளர்களைக் கொண்ட கட்சிகள்தான்.

இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இதுவரை தமிழகம் பல முதலமைச்சர்களைக் கண்டிருக்க வேண்டுமே...!

ஆண் பேச்சாளர்களுக்கு இணையாக பெண் பேச்சாளர்களும் வக்கிரமாக, ஆபாசமாக பேசுவதையும் தமிழ்நாடு கண்டுள்ளது. அனந்தநாயகி அதில் ஒருவர். அவரது பல பேச்சுக்களை பழைய காங்கிரஸார் மறந்திருக்க முடியாது.

ஏன். தமிழக சட்டசபையிலேயே கூட ஒரு மூத்த தலைவர் பேசிய பேச்சுக்கள் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டதே.. மறக்க முடியுமா அதை...

அரசியல் தூய்மையாக இருக்கிறது என்றால் தலைவர்களும் தூய்மையாக இருப்பார்கள்.. அவர்களது பேச்சுக்களும், செயல்பாடுகளும் தூய்மையாக இருக்கிறது என்றால் தொண்டர்களும் அதுபோலவே இருப்பார்கள்.. ஆனால் இன்று அப்படியா உள்ளது.

அடிமட்ட அளவிலிருந்து மட்டுமல்லாமல், தலைவர்கள் அளவிலும் தூய்மையும், வாய்மையும் இருந்தால் மட்டுமே ஆபாச, வக்கிரங்களுக்கு முடிவு காண முடியும்... அதுவரை இந்த "அடல்ட்ஸ் ஒன்லி" பேச்சுக்கள் தொடரத்தான் செய்யும்.

English summary
Tamil Nadu is witnessing a series of protest against a party leader for his alleged obscene speech. But this is not new to the state politics and the people of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X