For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலை வழக்கில் ஆர்.டி.ஐ மூலம் அடுக்கடுக்கான கேள்விகள்.. ஆடிப்போன காவல்துறை! பதிலை பாருங்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

எனவே, அதுகுறித்து அறிந்து கொள்ள ஆர்டிஐ மூலம் வக்கீல் பிரம்மா பல கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், இந்த கேள்விகளுக்கு காவல்துறை பதில் அளிக்க மறுத்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advocate filed RTI in swathi murder case

சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ம் தேதி ஒரு நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கை, போலீசாரின் பேட்டி போன்றவை பாமரர்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. சுவாதி கொலை வழக்கில் தொடரும் மர்மம்.. என்று ராம்குமார் கைதான மறுநாளே, முதன்முதலாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன்பிறகு இந்த சந்தேகம் பல மட்டத்திலும் வலுக்க தொடங்கியது. இந்நிலையில், ராம்குமார் விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ஆர்.டி.ஐ மூலம் ஜூலை 8ம் தேதி பத்து கேள்விகள் கொண்ட மனுவை நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்பினார். அதற்கு நேற்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கேள்விஅந்த கேள்விகள் விவரம்:

I நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, மீனாட்சிபுரம் பகுதியில் ராம்குமார் என்ற குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு உள்ளிட்ட விவரம் தர வேண்டும்.

a) தனிப்படை போலீஸ் நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸாரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது எனில் அவர்களின் பெயர், பணிபுரியும் இடம், பணி பொறுப்பு விவரம் அளிக்க வேண்டும்.

b) தனிப்படை போலீஸ் சென்னையில் உள்ள போலீஸாரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது எனில் அவர்களின் பெயர், பணி பொறுப்பு, பணிபுரியும் இடம் விவரம் தர வேண்டும்.

c) தனிப்படை போலீஸார் எத்தனை மணிக்கு மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்றார்கள். அவர்கள் சென்ற வாகன எண், அதன் ஓட்டுநர் பெயர் விவரம் அளிக்க வேண்டும்.

d) சென்னை தனிப்படையினர் குற்றவாளியை கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளருக்கு எத்தனை மணிக்கு தகவல் கொடுத்தார்கள். எந்த தேதியில் கொடுத்தார்கள் என்ற விவரம் தர வேண்டும்.

e) குற்றவாளியை பிடித்தவுடன் அருகில் உள்ள எந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். எத்தனை மணிக்கு எந்த நாள் என்ற விவரம் அளிக்க வேண்டும்.

f) அந்த காவல் நிலையத்திலிருந்து மொத்தம் எத்தனை காவலர்கள் தனிப்படை போலீஸாருடன் சென்றார்கள். சென்றவர்களின் பெயர், காவலர் எண், பணி பொறுப்பு விவரம் அளிக்க வேண்டும்.

g) குற்றவாளியை பிடித்தவுடன் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன் தொடர்பான கோப்புகளின் நகல் தர வேண்டும்.

h) குற்றவாளியை எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவ குறிப்புகளின் நகல் தர வேண்டும்.

i) குற்றவாளி கைது செய்யப்பட்ட போது அவரின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் ஆவணத்தின் நகல் அளிக்க வேண்டும்.

j) குற்றவாளி தற்கொலை முயற்சி செய்ய முயன்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நபரின் பெயர், பணி பொறுப்பு, புகார் கொடுக்கப்பட்ட நாள், நேரம், காவல் நிலையம் இடம் விவரம் தர வேண்டும்.

k) குற்றவாளி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை பதிவு செய்த அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு விவரம் அளிக்க வேண்டும்.

II குற்றவாளியிடம் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிபதி பெற்ற வாக்குமூலத்தின் நகல் தர வேண்டும்.

a) குற்றவாளி திருநெல்வேலியிலிருந்து சென்னை தனிப்படை காவலரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் நகல் தர வேண்டும்.

b) குற்றவாளி போலீஸாரால் சுற்றி வளைத்தப்பிறகு பிளேடால் கழுத்தை வெட்டி கொண்டார். அந்த படம் வாட்ஸ்அப்பில் எந்த போலீஸ் மூலம் அனுப்பப்பட்டது. அனுப்புவதற்கு அனுமதி கொடுத்த அலுவலர் பெயர், பணி பொறுப்பு அளிக்க வேண்டும்.

c) குற்றவாளி வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் தர வேண்டும்.

d) குற்றவாளி பயன்படுத்திய பிளேடு சாட்சி ஆவணமாக யாருடைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அளிக்க வேண்டும்.

e) குற்றவாளியை சுற்றி வளைத்தபோது அதில் இடம்பெற்றிருந்த போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும்.

f) குற்றவாளி பிளேடால் தன்னை அறுத்துக் கொண்டபோது தடுக்க முயன்ற போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு அளிக்க வேண்டும்.

g) குற்றவாளியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடைபெற்ற உடனேயே அதன் தொடர்பான வீடியோ ஆதாரத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட அனுமதி வழங்கியதன் நகல் தர வேண்டும்.

h) குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது வீடியோவை பரவ செய்த போலீஸார் அல்லாமல் வேறு நபர்கள் யாரெல்லாம் குற்றவாளியை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற விவரம் அதில் எத்தனை பேர் வீடியோ பதிவு செய்தார்கள் என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

அவரின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாலும், தங்கள் கேள்விக்கு தரப்படும் பதில்கள் காவல்துறை விசாரணைக்கும், குற்ற வழக்கு தொடர்வதற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதாலும் ஆர்.டி.ஐ பிரிவு 8 (ஐ) எச் 2005-இன் படி தங்கள் கேள்விக்கு பதில் தர சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதால் பதில் தர இயலாது என கூறியுள்ளார்.

ஆனால், "570 கோடி ரூபாய் வழக்கில் சி.பி.ஐ விசாரித்து வரும் வழக்கில் கூட ஆர்.டி.ஐ.க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராம்குமார் வழக்கில் ஆர்.டி.ஐ.யில் தகவல் தர மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் கொடுப்பதால் வழக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. தகவல் என்பது எழுத்து வடிவில் உள்ளது. அதை யாராலும் மாற்ற இயலாது. வழக்கின் போக்கை பற்றி கேட்கவில்லை. நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றிதான் தகவல் கேட்டுள்ளேன். காவல்துறை விவரம் தர மறுத்துள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்" என்று வழக்கறிஞர் பிரம்மா கூறுயில் கூறியுள்ளார்.

English summary
Advocate filed RTI in swathi murder case but police refused to answer it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X