அய்யோ சாமீ.. இன்னுமொரு அதிமுக தர்மயுத்தமா? இன்னொரு நள்ளிரவு சமாதி டிராமாவா?

சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தமது தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு மதுசூதனன் எழுதியுள்ள கடிதம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தலைவர் இல்லாத அதிமுக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் மதுசூதனனின் திடீர் போர்க்கொடி வெளிப்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதிலேயே அதிமுக பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. மதுசூதனனை நிறுத்தவே கூடாது என்பதில் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக இருந்தார்.

போட்டியாளர்கள் களமிறக்கம்
மதுசூதனன் ஜெயித்துவிட்டால் நிச்சயம் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடியும் தருவார்; இதனால் தமக்கான முக்கியத்துவம் பறிபோய்விடும் என்பதுதான் ஜெயக்குமாரின் பதற்றமாக இருந்தது. இதனால் பாலகங்கா, ஆதிராஜாராம், கோகுல இந்திரா என பலரது பெயரும் அடிபட்டது.

தப்பிய டெபாசிட்
வேறுவழியே இல்லாமல் இன்னொரு தர்மயுத்தத்தைத் தவிர்க்க மதுசூதனனை வேட்பாளராக்கிவிட்டது அதிமுக. ஆனால் களத்தில் டெபாசிட்டை தக்க வைக்கவே பெரும் போராட்டம் மதுசூதனனுக்கு. அந்தளவுக்கு உள்ளடி வேலைகள் நடந்தது என்பது அதிமுகவில் உள்ள அனைவருக்குமே தெரிந்த கதைதான்.

7 நாட்கள் கெடு
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது திடீரென மதுசூதனன் போர்க்கொடி தூக்கியுள்ளார். தமது தோல்விக்குக் காரணமானவர்கள் மீது 7நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுசூதனனின் கோரிக்கை.

இன்னொரு தர்மயுத்தம்
நிச்சயம் இந்த 7 நாட்கள் அல்ல.. 70 நாட்களானாலும் அதிமுகவில் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் ஆர்கே நகர் தோல்விக்காக எடுக்கப்போவது இல்லை என்பது நாடறிந்த ஒன்று. அதனால் அனேகமாக அதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் இறுதி அத்தியாயத்தை எழுதும் வகையிலான இன்னொரு தர்மயுத்தம் நடக்கலாம். நள்ளிரவு சமாதி தியானங்கள் நடக்கலாம் என்பதுதான் யதார்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.