For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி: அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை... வீடுகள் சூறை, பதற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற அதிமுக கிளைச்செயலாளர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் மற்றொரு பிரிவினரின் வீடுகளை சூறையாடியதால் பதற்றம் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சிபுதுமனை தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 54). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர் அப்பகுதி ஊர் தலைவராக இருந்து வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். பிச்சையா தினமும் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். அது போல் இன்று அதிகாலை 6 மணிக்கு இந்திரா நினைவு குடியிருப்பு அருகே வாக்கிங் சென்றார்.

AIADMK functionary hacked to death near Thoothukudi

அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம கையில் வைத்திருந்த அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களைக்கொண்டு பிச்சையாவை மடக்கி தாக்கினர். பிச்சையாவை பிடித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். சுதாரித்து கொண்ட பிச்சையா அவர்களிடம் இருந்து தப்பியோடினார்.

விரட்டி வெட்டிய கும்பல்

பிச்சையாவை விடாமல் விரட்டிய அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று மடக்கி அரிவாளால் வெட்டியது. இதில் பிச்சையாவின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

அலறி ஓடிய மக்கள்

அதிகாலையில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தவர்கள் யார்?

பிச்சையாவை கொலை செய்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.துரை நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

கல்வீசி தாக்குதல்

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிச்சையாவின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினர் வீடுகள் மீது கல்வீசினர். 10 வீடுகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

தேவாலயம் சூறை

அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். 2 டீக்கடைகளும் சூறையாடப்பட்டது. மேலும் அங்குள்ள காமராஜர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து எஸ்.பி.தலைமையில் அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கொங்கராயகுறிச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும் அரசு தேர்வுக்கு செல்ல தயாரான நிலையில் இருந்த மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பழிக்குப் பழி

பிச்சையா கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொங்கராயகுறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், பள்ளி தாளாளருமான தேவசகாயம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக பிச்சையா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்படை அமைப்பு

இதனிடையே கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி.துரை உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து கொலை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பதற்றம் எழுந்துள்ளது. சிலதினங்களுக்கு முன்னர் ஸ்ரீவைகுண்டம் அருகே புதியதமிழகம் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதற்றம் தீருவதற்குள் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An AIADMK functionary was on Tuesday hacked to death by a seven-member gang near his home in Srivaikuntam near Tuthookudi police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X