For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எசகுபிசகு நாஞ்சில் சம்பத் அவுட்.. தத்து பித்து சி.ஆர்.சரஸ்வதி தலை மீது கத்தி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், பதவி பறிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக யார் தலை உருளும் என்ற எதிர்பார்ப்பு ஊடக வட்டாரத்தில் உலாவி வருகிறது.

மதிமுகவில் இருந்து அதிமுக சென்ற நாஞ்சில் சம்பத்துக்கு, துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி, இன்னோவா கார் போன்றவை கொடுத்து அழகு பார்த்தார், ஜெயலலிதா.

இந்நிலையில், சமீபகாலமாக, நாஞ்சில் சம்பத்தின் பொதுக்கூட்ட கருத்துக்களும், பத்திரிகை பேட்டிகளும், சர்ச்சைக்குறியதாக மாறின. மிகவும் மெத்தனமாகவும், பொறுப்பற்றவகையிலும் அவரது பேட்டிகள் அமைந்தன.

அதிமுகவுக்கே எதிராக

அதிமுகவுக்கே எதிராக

அதன் உச்சகட்டமாக, கடந்த சனிக்கிழமை, காலை புதிய தலைமுறையின், அக்னி பரிட்சை நிகழ்ச்சியில், கண்டதையும் பேசினார் நாஞ்சில் சம்பத். அதில் பல கருத்துக்கள், அதிமுகவுக்கே எதிராக போனது.

பதவி பறிப்பு

பதவி பறிப்பு

இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களில், நாஞ்சில் சம்பத்தின் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியை பறித்து ஜெயலலிதா உத்தரவிட்டார். நாஞ்சில் சம்பத்தின் அந்த ஒரு பேட்டி மட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் வெளிப்படுத்தி வந்த கருத்துக்கள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி

நாஞ்சில் சம்பத்தின் தத்துபித்து, பேச்சுக்கள் குறித்து ஏற்கனவே வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்து வந்தனர். இதன் உச்சமாகவே, அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டார். அதேபோல சமூக வலைத்தளங்களால் கேலி செய்யப்பட்டுவரும் மற்றொருவர் சி.ஆர்.சரஸ்வதி.

தத்துபித்து பேச்சு

தத்துபித்து பேச்சு

நடிகையான சி.ஆர்.சரஸ்வதி, தற்போது, அதிமுக சார்பில், டிவி விவாதங்களில் பேசிவருகிறார். நாஞ்சில் சம்பத் எகத்தாளமாக பேசுவதில் ஃபேமஸ் என்றால், தத்துபித்தாக பேசுவதில் சி.ஆர்.சரஸ்வதி ஃபேமஸ். இதனால்தான், நெட்டிசன்கள் வலையில் விழுந்து வறுபடுகிறார்.

வருணபகவானை வம்புக்கு இழுத்தவர்

வருணபகவானை வம்புக்கு இழுத்தவர்

"வருண பகவான் சொல்லிக்கொண்டா வருகிறார். இவ்வளவு மழை பெய்யும் என்று யாருக்கும் தெரியாது" என்பது போன்றவையெல்லாம், இவரது அலட்சிய பேச்சுக்கு உதாரணங்கள். மக்கள் துன்பப்படும் நேரத்தில், எப்படி பேசுவது என்பது தெரியாமல் பேசுவதில், நாஞ்சிலாருக்கு உடன்பிறவா சகோதரி இந்த சரஸ்வதி.

மேலும் இருவர்

மேலும் இருவர்

இதுதவிர, ஆவடி குமார், காசிநாதபாரதி ஆகியோரும், அதிமுக சார்பில் டிவி சேனல்களில் பேசிவருகிறார்கள். ஆவடி குமாரும், காசிநாதபாரதியும் கூட சில நேரங்களில் தெரியாத்தனமாக வார்த்தையை விட்டுள்ளனர். ஆனால், தெரிந்தே எகத்தாளமாக பேசுவது அவர்களிடம் கம்மிதான்.

கேவலமான பணியாம்

கேவலமான பணியாம்

உதாரணத்திற்கு, வெள்ள பாதிப்பு குறித்த ஒரு உரையாடலின்போது, அதிமுக சார்பில் பேசிய காதிநாத பாரதி, "வேறு எந்த கட்சியாவது இப்போது ஆட்சியில் இருந்திருந்தால், இதைவிட கேவலமாக மீட்பு பணி நடந்திருக்கும்" என்று சொல்லப்போக, அப்படியானால், உங்கள் மீட்பு பணி கேவலம் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்தானே என சக அமர்வாளர்கள் கேலி செய்ய காசிநாதபாரதி முகமே கருத்துப்போனது.

இழுத்துவிடுவார்

இழுத்துவிடுவார்

ஆவடி குமார், கொஞ்சம் விவரமானவர். தனது பேச்சுக்கு நடுவே, அதிக நேரம் எடுத்துக்கொள்வார். ஆ... அது வந்து... என்பது போன்ற வரிகளை கொஞ்சம் நீட்டி முழக்குவது, பார்வையாளர்களுக்கு எரிச்சலை தந்தாலும், தத்து, பித்து கருத்துக்களை தவிர்க்க அந்த தந்திரம் உதவுகிறது.

கட்சிகளின் கட்டுப்பாடு

கட்சிகளின் கட்டுப்பாடு

திராவிட கட்சிகள், தங்கள் கட்சியினர் ஊடகங்களிடம் பேச கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. அதிமுக சார்பில் மேற்கண்ட நால்வரும், திமுக சார்பில், பிரசன்னா உள்ளிட்ட சிலரும் பேச அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் சார்பில், நிறைய தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்றுவருகின்றனர்.

ஆக மோசம் தேமுதிக

ஆக மோசம் தேமுதிக

தேமுதிக கட்சி இதில் மிகவும் மோசம். விஜயகாந்த்தை தவிர வேறு யாரும் ஊடகங்களின் விவாதங்களிலோ வேறு நிகழ்வுகளிலோ பேசக்கூடாது என்று கட்டளைபோடப்பட்டுள்ளதாம். விஜயகாந்த் பேசினாலும், பல நேரங்களில் கோர்வையின்றி, மனம்போன போக்கில் பேட்டி அமைகிறது. பல நேரங்களில், இக்கட்டான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பத்திரிகையாளர்களுடன் சண்டைபோடுவது, அநாகரீகமாக நடப்பது என அந்த கட்சி நகர்கிறது.

அம்மா புகழ்

அம்மா புகழ்

இதில் அதிமுகவின் சார்பில் விவாதங்களில் பேச வருவோருக்கு கட்டுப்பாடுகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. மாண்புமிகு, புரட்சித்தலைவி அம்மா, என்ற வார்த்தையை அடிக்கடி அவர்கள் உச்சரிக்க வேண்டியது கட்டாயமாம். மேலும், எதையும் தன்னிச்சையாக கூறிவிடவும் முடியாது. குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றபடி கருத்து கூற வேண்டியது அவசியம். பாஜக, காங்கிரஸ், திமுக, நாம்தமிழர், பாமக போன்றவற்றின் பிரதிநிதிகள் இதில் சுதந்திரம் பெற்றவர்கள்.

ஓவர் ரியாக்ட்

ஓவர் ரியாக்ட்

நாஞ்சில் சம்பத் பேட்டியின்போது, அதிமுகவுடன் கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வந்தால் நன்றாக இருக்கும், எவையெல்லாம் நன்றாக இருக்காது என்பதுபோன்ற கருத்துக்களையெல்லாம் பகிரங்கமாக பேசினார். பன்னீர்செல்வம்கூட இதை பேசமுடியாத ஒரு கட்சியில், நாஞ்சில் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்து மாட்டிக்கொண்டார். அதிகமாக பேசினால், கட்சியின் விவகாரங்கள் அம்பலமாவதோடு, ஆட்சியின் குளறுபடிகளும் வெளியில் வந்துவிடும் என்பதால், வாய்ப்பூட்டு போட்டபடி அதிமுக பங்கேற்பாளர்கள் பேசிவருகிறார்கள்.

தலைமீது கத்தி

தலைமீது கத்தி

தேர்தல் நேரம் நெருங்கிவரும் நிலையில், அதிமுக தனது இரும்புத்திரையை மேலும், கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே சி.ஆர்.சரஸ்வதி, ஆவடி குமார், காசிநாதபாரதி போன்றோர் இனிமேல், பேச்சை குறைக்க வாய்ப்புள்ளது. இல்லையேல், கட்சியில் இருந்து, நாஞ்சில் வரிசையில், அடுத்தடுத்து இவர்கள் தலைகளும் உருளும் அபாயம் உள்ளது. ஏனெனில் அங்கு தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டுள்ளது.

English summary
Aiadmk may tighter its iron screen further after Nanjil Sampath lost his post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X