For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு.. விறுவிறுவென தயாராகி வரும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: உச்ச நீதிமன்ற தடை யால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்ததால் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தை பொங்கல் நாளில் அவனியாபுரத்தில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் கவுதமன் போலீசின் தடியடிக்கு ஆளானார். ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றது. விடிய விடிய போராட்டம் நடத்தியவர்கள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சென்னை மெரீனா தொடங்கி தமிழகம் முழுவதும் புரட்சி வெடித்தது. மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய அறவழி போராட்டம் ஒரு வாரம் நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. அதே வேகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி 22ஆம் தேதி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க ஏற்பாடுகளும் நடந்தன.

ஜனவரி 23ஆம் தேதி பாலமேட்டிலும், 25ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி நடைபெற்றது. ஆனால் நிரந்தரச் சட்டம் கோரி முதல்வரை அலங்காநல்லூர் ஊருக்குள் விட மக்கள் மறுத்ததால் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது. மக்கள் விரும்பும் தேதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பினார்.

தேதி மாறிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

தேதி மாறிய ஜல்லிக்கட்டு போட்டிகள்

கடந்த 23ஆம் தேதியன்று அலங்காநல்லூர் மட்டுமில்லாது தமிழகம் முழுவதுமே போலீசார் வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1, பாலமேட்டில் பிப்ரவரி 2, அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஜல்லிக் கட்டு நடத்துவதாக அறிவித்து சம்பந்தப்பட்ட ஊர் கமிட்டி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகியுள்ளனர்.

தயாராகும் காளைகள்

தயாராகும் காளைகள்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக போட்டியில் பங்கேற்கும் வகையில் எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை. தற்போது போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளதால் காளைகளுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீச்சல்பயிற்சி, மணல் குவியல்களை தனது கொம்புகளால் குத்தி சரிக்கும் ஆக்ரோ‌ஷ பயிற்சிகள், வீரர்களின் பிடியில் இருந்து லாவகமாக தப்பி ஓடும் வகையில் ஓட்டப்பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சத்தான உணவுகள்

சத்தான உணவுகள்

தினமும் 3 வேளை பயிற்சிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படுவதால் காளைகளும் புது உற்சாகத்துடன் காணப்படுகிறது. தோட்டங்கள், பண்ணை வீடுகள், மைதானங்கள், புல்வெளிகள் ஆகியவற்றில் காளைகளை வைத்து பயிற்சி வழங்கி வருகிறார்கள். காளைகளின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் புண்ணாக்கு, பேரிச்சம் பழம், தவிடுகள், பருத்தி கொட்டை, தேங்காய் பருப்பு ஆகிய சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது.

1500 காளைகள் பங்கேற்பு

1500 காளைகள் பங்கேற்பு

அலங்காநல்லூர் போட்டியில் 550 காளைகள் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாலமேட்டில் 500 காளைகளும், அவனியாபுரத்தில் 450 காளைகளும் பங்கேற்கின்றன. திருச்சி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்கின்றன.

தயார் நிலையில் மாடுபிடி வீரர்கள்

தயார் நிலையில் மாடுபிடி வீரர்கள்

மாடு பிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு மாடு பிடிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடைத்துறையும், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், பீரோ, கட்டில், மின்விசிறி, சைக்கிள், பாத்திர வகைகள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
வாடிவாசல் தயார்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அலங்காநல்லூர் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களுக்கான கேலரிகள் அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் தனித்தனி கேலரிகள் அமைக்கப்படுகின்றன.

பாலமேடு, அவனியாபுரம்

பாலமேடு, அவனியாபுரம்

பாலமேட்டில் மஞ்ச மலைசாமி ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள சிவன் கோவில் பகுதியில் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு களைகட்ட தொடங்கி உள்ளது. பல சேட்டிலைட் சேனல்கள் இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் என்பதால் உலக அளவில் உள்ள தமிழக மக்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Alanganallur, Palamedu and Avaniyapuram are gearing up for Jallikattu. Alanganallur Jallikattu held on February 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X