For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்: நாளை மறுநாள் அனைத்து கட்சி போராட்டம்- ஸ்டாலின் உட்பட 7 கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் போராட்டம் நடைபெறும் என திமுக உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் நுழைத் தேர்வு விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து நாளை மறுநாள் அனைத்து கட்சி போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட 7 கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், சிபிஎம் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு வலுக்கட்டாயமாக ஒரு "நீட்"நுழைவுத் தேர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் திட்டம் போட்டு திணித்து, கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சீர்குலைத்து விட்டது. சமூக நீதியை சிதைத்து இருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சர்வாதிகாரம்

சர்வாதிகாரம்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக் கொண்டு சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு தமிழகத்தில் "நீட்" தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி, மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, மத்திய - மாநில உறவுகளையும், கூட்டாட்சி தத்துவத்தையுமே "கேலிப் பொருள்" ஆக்கிட முனைந்து செயல்பட்டு வருகிறது.

வருத்தமளிக்கிறது

வருத்தமளிக்கிறது

மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும் பா.ஜ.க.வின் இந்த ஆணவப் போக்கிற்கு, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு ஓங்கி குரல் கொடுக்காமல், பணிந்து துணை போகிறது. மாநில பாடதிட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் அரசு, மருத்துவர்களின் நலனை காற்றில் பறக்க விட்டு மத்திய - மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கை நடத்தியிருப்பதும், வாதிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது.

அதிமுக அரசின் படுதோல்வி

அதிமுக அரசின் படுதோல்வி

தற்காலிகமாக ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அறிவித்து, அந்த குறைந்தபட்ச விதிவிலக்கும் கிடைக்காத அளவிற்கு இன்றைக்கு மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்திருக்கும் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அதிமுக அரசின் நிர்வாக திறமை படுதோல்வியை சந்தித்துள்ளது.

24-ந் தேதி ஆர்ப்பாட்டம்

24-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஆகவே "நீட்" தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த துரோகத்திற்கு சம பங்குதாரர்களாக இருக்கும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து 24-8-2017ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" காலை 10 மணி அளவில் நடைபெறும். மாணவர்களும் - அனைத்து கட்சி தொண்டர்களும் - பொதுமக்களும் பங்கேற்று, "நீட்" தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும் வகையில் இந்த ஆர்பாட்டத்தை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
DMK and Political Parties have announced protest against NEET on 24th August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X