• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘அம்மா’வும், ஆளுநர்களும்!

By R Mani
|

-ஆர்.மணி

தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவின் பதவிக் காலம் வரும் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. 2011 ம் ஆண்டு மே மாதம் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியபோது ஆளுநராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா.

அந்தாண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி ரோசய்யா தமிழக ஆளுநராக பதவியேற்றார். அடிப்படையில் காங்கிரஸ்காரர். ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவர். பழுத்த அரசியல்வாதி. தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றதிலிருந்து இதுவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவருக்கு அரசயில் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எந்த உரசலும், பிரச்சனையும் இல்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ரோசய்யா ஆளுநராக நியமிக்கப் பட்ட காலம் மத்தியில் மன்மோஹன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த காலம். திமுக இந்த அரசில் வலுவானதோர் அங்கமாக இருந்தது. 2013 மார்ச் வரையில் இந்த கூட்டணியில் திமுக இருந்தது. ஆனால் தமிழக ஆளுநர் நியமனத்தில் எந்த சிக்கலும் அப்போது எழவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Amma and TN Governors

ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் தமிழக அரசியிலின் மிக முக்கியமானதோர் காலகட்டம். 2014 ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் நாள், முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களுர் பரப்பனஹாரா சிறையில் அடைக்கப் பட்டார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பதவியில் இருக்கும் போதே ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்ப பட்டது அதுதான் முதன் முறை. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. எட்டு மாதங்கள் ஓபிஎஸ் முதலமைச்சராக தமிழகத்தை ஆண்டார்.

ஓபிஎஸ் எப்படி ஆண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். எதிர்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. ஆளுநர்களிடம் புகார்களும், கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன. அரசியல் சாசனத்திற்கு வெளியில் இருக்கும் 'சில சக்திகள் தான்' (Extra constitutional authorities) தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பதாக பிரதான எதிர்கட்சியான திமுக வெளிப்படையாகவே குற்றஞ் சாட்டியது. காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்கள் அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் ஆளுநர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எதிர்கட்சிகளின் கோரிக்கைகள், குற்றச் சாட்டுகள், மனுக்கள் மீது எடுக்கவில்லை.

2011 - 2016 காலகட்டத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது தொடர்ச்சியாகவே நடந்தது. இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் நீக்கப் படுவதும், புதியவர்கள் சேர்க்கப்படுவதும், நீக்கப்பட்டவர்களே மீண்டும் சேர்க்கப்படுவதும் என்று இந்த 'பரமபத விளையாட்டு' 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரையிலும் கூட நடந்தது. குறைந்தபட்சம் 15 முறைகளுக்கு மேல் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. எத்தனை பேர் அமைச்சர்கள் ஆனார்கள், நீக்கப் பட்டார்கள், மீண்டும் அமைச்சர்கள் ஆனார்கள் என்பதற்கெல்லாம் எந்த கணக்கும் இல்லை ... 'வருவதும போவதும் வரைமுறையன்று' என்பதுதான் அஇஅதிமுக அமைச்சர்களைப் பொறுத்த வரையில் எழுதப்படாத விதி.

Amma and TN Governors

இதில் முகம் சுழிக்காமல் ஆளுநர் ரோசய்யா இந்த அமைச்சரவை மாற்றங்களுக்கு ஒத்துழைத்தார். அரசியல் சாசனத்தின் படி அவரால் மாநில முதலமைச்சரும், அமைச்சரவையும் கொடுக்கும் பரிந்துரைகளை புறந்தள்ள முடியாது. ஆனால் வரம்பின்றி நிகழ்ந்த அமைச்சரவை மாற்றங்களுக்கு ஆளுநர் ரோசய்யா தார்மீக ரீதியிலும், அரசியில் ரீதியிலும், கிஞ்சித்தும் அதிருப்தி காட்டவில்லை. அந்த வகையில் ஜெயலலிதா அரசுடனான ஆளுநரின் நிர்வாக மற்றும் அரசியல் உறவு ஆச்சரியமானதுதான்.

இன்று புதிய ஆளுநராக யார் வருவார் என்றெல்லாம் யூகங்கள் கிளம்பி விட்டன. கர்நாடகாவை சேர்ந்த டி.எச். ஷங்கரமூர்த்தி நியமிக்கப்பட விருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இதற்கு சாத்தியமில்லை, காரணம் காவிரி பிரச்சனை போன்ற முக்கியமான பிரச்சனைகள் நிலுவையில் உள்ள சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக ஆளுநராகும் வாயப்பு வழங்கப் படாது. புதன்கிழகை காலையில் வந்த 'டெகான் கிரானிக்கிள்' ஆங்கில நாளிதழில் ரோசய்யாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்று செய்தி வந்துள்ளது. ஜெயலலிதா ரோசய்யாவின் பதவிக் காலம் தொடர்வதையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, ஜெயலலிதாவின் விருப்பத்தை மீறி எவரையும் தமிழக ஆளுநராக மோடி அரசு நியமிக்காது என்பதுதான். காரணம் ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டு இங்கு ஒருவரை ஆளுநராக நியமித்தால் அதற்கான விலையானது மோடி அரசுக்கு அதிகப்படியானதாக இருக்கும். 2017 ஜூலையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இதில் அஇஅதிமுக வின் 131 எம்எல்ஏ க்கள் மற்றும் 50 எம் பிக்களின் ஆதரவு மோடி அரசுக்கு முக்கியமானது. அதிலும் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் எம் பி க்கள் மட்டுமே வாக்களிப்பதால் அஇஅதிமுக வின் 50 எம் பிக்கள் ஆதரவு மிக, மிக முக்கியமானது. ஆகவே புதிய ஆளுநர் நியமனத்தில் ஜெயலலிதாவின் மனங் கோணாமால் நடந்து கொள்ள வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் மோடி அரசுக்கு இருப்பதுதான் யதார்த்தம்.

Amma and TN Governors

ஜெயலலிதா வுக்கும் ஆளுநர்களுக்குமான உறவு, மோதல் என்பது சுவாரஸ்யமானது.

1991 ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரான போது முதல் இரண்டாண்டுகள் ஆளுநராக இருந்தவர் பீஷ்ம நாராயண் சிங். ஜெயலலிதா கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்த பல ஊழல் வழக்குகளின் பிள்ளையார் சுழி யே ஆளுநர் பீஷ்ம நாராயண சிங்கிடம் இருந்துதான் துவங்கியது. ஆம். 1993 ம் ஆண்டில் அப்போதய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பீஷ்ம நாராயண் சிங்கிடம் ஒரு மனுவை கொடுத்தார். அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா அப்போது பங்குதாரர் ஆக இருந்த 'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனம் 'தமிழ் நாடு பாட நூல் நிறுவனத்தின்' புத்தகங்களை அச்சிடுகிறது. அரசு பதவியில் இருப்பவர்கள் அரசுடன் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாதென்ற விதியைச் சுட்டிக் காட்டி, ஜெயலலிதா வை எம்எல்ஏ பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் சுவாமியின் கோரிக்கை.

இந்த மனுவை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் அனுப்பவில்லை. இதனை எதிர்த்து ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்குக்கு, இந்த விஷயத்தில் முறையான உத்திரவினை வழங்க வலியுறுத்தி ரிட் மனு ஒன்றினை (Writ of mandamus) சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் 1993 ஏப்ரலில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அப்போதய முதலைமச்சர் ஜெயலலிதாவும் ஒரு வாதியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்குதான் ஜெயலலிதா சந்தித்த ஏராளமான வழக்குகளுக்கு முன்னோடி. ஆனால் சுவாமியின் மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானது. சுவாமியின் மனு ஆளுநரால் பின்னர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் நடக்கவில்லை என்பது வேறு கதை.

பீஷ்ம நாராயண் சிங் மாற்றப்பட்டு 1993 மே 31 ம் தேதி சென்னா ரெட்டி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார். சென்னா ரெட்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். சென்னை ரெட்டியை ஆளுநராக நியமிப்பதற்கு முன்பாக மத்திய அரசு உங்களைக் கலந்து ஆலோசித்ததா என்று கேட்கப் பட்டதற்கு 'இல்லை' என்று ஜெயலலிதா பதிலளித்தார்.

1995 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை ரெட்டி அனுமதி அளித்தார். சுதந்திர இந்தியா கண்டிராத நிகழ்வு இது. பதவியிலிருக்கும் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர அனுமதி கொடுக்கப் பட்டது அதுதான் முதன்முறை.

இந்த விவகாரம் உச்சத்தில் இருக்கும் போது 1995 ஏப்ரல் 26 ம் தேதி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, "நான் ஏன் ஆளுநரை சந்திப்பதில்லை என்று கேட்கிறார்கள். ஆளுநர் பதவியேற்ற பின்னர் சில முறைச் சந்தித்தேன். ஒரு முறை ஆளுநர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். அதனால் தான் நான் ஆளுநரை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்," என்று கூறினார். இது அவைக் குறிப்பில் இன்றளவும் உள்ளது.

அடுத்தது ஃபாத்திமா பீவி. 2001 ம் ஆண்டு மே 12 ம் தேதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகளில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காரணம் டான்சி மற்றும் பிளசண்ட் ஸ்டே ஊழல் வழக்குகளில் அவர் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அடுத்த நாள் மே 13 ம் தேதி காலையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜெயலலிதா வை சட்டமன்றக் கட்சித் தலைவராகld தேர்ந்தெடுத்தது. உடனே ஆளுநர் ஃபாத்திமா பீவியைச் சந்தித்த ஜெயலலிதா ஆட்சியைமைக்க உரிமை கோரினார். ஃபாத்திமா பீவி யும் அவசர அவசரமாக அன்று மாலையில் நடந்த பதவியேற்பில் ஜெயலலிதா வுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை எதிர்த்து திமுக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப்டம்பர் 21, 2001 ல் ஜெயல லிதா முதலமைச்சராக பதவியேற்றது செல்லாதென்று அறிவித்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு முன்னரே ஃபாத்திமா பீவியை அப்போதைய வாஜ்பாய் அரசு பதவி நீக்கம் செய்து விட்டது. காரணம் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப் பட்டபோது நடந்த அத்துமீறல்களை தடுக்கத் தவறியதாக எழுந்த குற்றச்சாட்டுதான். இதுவும் ஒரு வரலாற்று நிகழ்வுதான். அரிதினும் அரிதாகவே ஆளுநர்கள் டிஸ்மிஸ் செய்யப் படுவார்கள். ஃபாத்திமா பீவி யின் டிஸ்மிஸை தேனொழுகும் வார்த்தைகளில் மத்திய அரசு வருணித்தது. "தமிழக ஆளுநர் ஃபாதிமா பீவி ஆளுநராக பணியில் தொடருவதற்கான தன்னுடைய சம்மதத்தை குடியரசுத் தலைவர் திரும்ப பெற்றுக் கொண்டார்".

ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெ அரசுக்கான உறவு வலுவான உறவுதான். ஜெ அரசை அடியொற்றித்தான் ஆளுநரும் நடந்து கொண்டிருக்கிறார். இதுவரையில் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசியல்வாதிகள், ஊடகங்களுக்கு எதிராக 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருக்கின்றன. ஆளுநர் ரோசய்யாவே கடந்த மே மாதம் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக ஒரு அவதூறு வழக்கினை தாக்கல் செய்தார். தமிழகத்தின் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் மீதும் இளங்கோவன் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தியதால் இந்த வழக்கு போடப்பட்டது. 'நாட்டில் முதன் முறையாக ஆளுநர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்,' என்று செய்தி வெளியிட்டது 'டெகான் கிரானிக்கிள்' ஆங்கில நாளிதழ்.

ஆகவே ஜெயலலிதா வுக்கும் ஆளுநர்களுக்குமான நிர்வாக, அரசியல் உறவு என்பது சுவாரஸ்யமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள், அதிகார வரம்புகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட நீதிபதி சர்காரியா கமிஷன் ஒரு மாநிலத்தில் ஆளுநரை நியமிப்பதற்கு முன்பாக அந்த மாநிலத்தின் முதலமைச்சரை மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் கலந்தாலோசனை என்பது அரிதினும் அரிதாக வே மத்திய அரசால் மேற்கொள்ளப் படுகின்றது. ஜெயலலிதா வின் தயவு மோடி அரசுக்கு தேவையாக இருப்பதால் தற்போது பாஜக அரசு அடக்கி வாசிக்கிறது. இல்லையென்றால் டில்லியில் கெஜ்ரிவாலுக்கும், உத்திர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவுக்கும், காங்கிரஸ் ஆளும் வட கிழக்கு மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கும் நடப்பதுதான் தமிழ் நாட்டில் ஜெயலலிதா வுக்கும் நடந்து கொண்டிருக்கும்.

எது எப்படியோ, தற்போது பல மாநிலங்களிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் மோடி அரசால் செந்தமிழ் நாட்டில் அந்தத் திருப்பணியில் ஈடுபட முடியவில்லை. அதற்கு காரணம் 'அம்மா வின் ஆளுமைதான்'.

தற்கு பெயர்தான் 'கெட்டதிலும் ஒரு நல்லது' என்பதோ?

English summary
Columnist R Mani remembers the relationship of Jayalalithaa with the Governors of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X