For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா.. ஸ்டாலினுக்கு அன்புமணி மீண்டும் காட்டமாக கடிதம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காக திமுக ஏதையாவது செய்திருப்பதாக நீங்கள் நினைத்தால், அதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் என்று, திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளும், அதிமுக அரசு கோமா நிலையில் இருப்பதாக கூறி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக, பாமக எம்.பி.யும் அக்கட்சியின் முதல்வர் பதவிக்கான வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ், ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி, அதிமுக மட்டுமல்ல, திமுகவும் சேர்த்துதான் தமிழகத்தை சீரழித்தது என்று கூறியிருந்தார்.

அன்புமணி ராமதாசுக்கு தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக முன்னாள் உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன் பதிலளித்தார். அதில், அன்புமணி, தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, பாமக கூட்டணி வைக்காத கட்சியில்லை என்பதுபோன்ற காரசார குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று மீண்டும், ஸ்டாலினுக்கே, நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புமணி கூறியுள்ளதாவது:

அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

தமிழ்நாட்டை சீரழித்ததில் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தாலோ, தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதாக அறிவித்திருந்தாலோ அது நாகரீகமான அரசியலுக்கு வழி கோலியிருந்திருக்கும்.

தோற்றவர் மூலம் பதில்

தோற்றவர் மூலம் பதில்

ஆனால், தளபதி என்று அழைக்கப்பட்டாலும் சட்டப்பேரவையில் எப்படி நீங்கள் பதுங்கிக் கொண்டு, மற்ற உறுப்பினர்களை பாய வைப்பீர்களோ, அதேபோல் இப்போதும் எனது கடிதத்திற்கு என்னால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மூலம் தரக்குறைவாக பதில் அளிக்க வைத்திருக்கிறீர்கள். ஒருவேளை அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான அவதூறுகளை எழுத உங்களுக்கு கூசியதால் கூட அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நான் உங்களைப் போன்றவன் அல்ல. அநாகரீக, லாவணி அரசியல் நடத்துபவனும் அல்ல. அதனால் தான் நானே மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

மக்கள் மனதில் உள்ளது

மக்கள் மனதில் உள்ளது

நான் தங்களுக்கு எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனதில் எழும் கேள்விகள் தான். இந்தக் கேள்விகளை எழுப்பியதற்காக பல்வேறு தரப்பு மக்களும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். அவர்களில் பலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், தி.மு.க. 21 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. நீங்கள் 5 ஆண்டுகள் மேயராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும், இரு ஆண்டுகள் துணை முதலமைச்சராகவும் இருந்தீர்கள்.

புகாருக்கும் பதில்தர முடியவில்லை

புகாருக்கும் பதில்தர முடியவில்லை

ஆனால், உங்களாலும், தி.மு.க.வாலும் இவற்றில் எந்த புகாருக்கும் பதில் கூற முடியவில்லை. இவை அனைத்தும் உண்மைகள்; இவற்றை மறுக்க முடியாது என்பதால்தான் அவற்றை விட்டு விட்டு தமிழகத்தின் நலனுக்கு தொடர்பில்லாதவை பற்றி ஆள் வைத்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நாகரீகமான முறையில் எப்படி பதில் கூறுவது என்பதை கருணாநிதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாகரீகமற்ற அரசியல்

நாகரீகமற்ற அரசியல்

நாகரீகமற்ற அரசியலை செய்து வரும் உங்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் குறைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது உங்களுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால், தரம் தாழ்ந்து விமர்சிப்பது எங்கள் வழக்கம் அல்ல. நாகரீகமான, வளர்ச்சி அரசியல் தான் எங்களின் கொள்கை. அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனவே, உங்கள் தரப்புக்கு நாகரீகமாக பதில் தருவதுதான் எனது இந்த கடிதத்தின் நோக்கம்.

பெரிய தவறு

பெரிய தவறு

அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததாக தி.மு.க. குற்றஞ்சாற்றியிருக்கிறது. இது உண்மைதான். இதைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கத் தேவையில்லை. உங்களுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்ததுதான் நாங்கள் செய்த மிகப்பெரியத் தவறு. இந்தத் தவறை ஒருபோதும் மீண்டும் செய்ய மாட்டோம். இதற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சி தவறை ஒப்புக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல.

அதிமுக, திமுக இல்லாத அரசு

அதிமுக, திமுக இல்லாத அரசு

அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி உங்கள் தலைவரை முதல்வராகவும், உங்களை துணை முதலமைச்சராகவும் அமர வைத்தது நாங்கள் செய்த இன்னொரு தவறு ஆகும். இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்காகவே தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

கொலை முயற்சி

கொலை முயற்சி

மாறிமாறி கூட்டணி அமைப்பதில் தி.மு.க.வின் மோசமான வரலாறு என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை 15 முறை மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொண்ட கட்சி தானே தி.மு.க. 1976 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தற்காக இந்திரா காந்தியை விதவை என்றும், வெளியில் சொல்லமுடியாத அநாகரீகமான வார்த்தைகளாலும் விமர்சனம் செய்ததுடன், மதுரையில் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை குண்டர்களை ஏவி கொலை செய்யவும் முயன்றது தி.மு.க.

காங்., பாஜவுடன் திமுக கூட்டணி

காங்., பாஜவுடன் திமுக கூட்டணி

அடுத்து நடந்த 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக..! என விளித்ததும் கருணாநிதி தான். 1998 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை பண்டாரங்களின் கட்சி என்று விமர்சித்த கலைஞர், 1999ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதும் டெல்லியிலிருந்த முரசொலி மாறன் மூலமாக துண்டு போட்டு அந்தக் கூட்டணியில் சேர்ந்தது உங்களுக்கு மறந்து போயிருந்தால் கலைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

விஜயகாந்த்தை விமர்சித்தீர்களே

விஜயகாந்த்தை விமர்சித்தீர்களே

அவ்வளவு ஏன்.... 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலுவை வைத்து, ‘‘கேப்டனா... அவன் எந்தக் கப்பலுக்குக் கேப்டன்? கடல்ல தண்ணில மிதக்கிற கப்பலை ஓட்டுறவன் கேப்டன். சதா தண்ணியில மிதக்கிறவன் கேப்டனா?'' என்றெல்லாம் யாரைப் பற்றி பேச வைத்து, அதை தங்களின் குடும்பத்தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வைத்து நீங்களும், கருணாநிதியும் ரசித்தீர்களோ, இன்று அவரை வீட்டிற்கு அழைத்து பரஸ்பரம் படத்தை மாற்றிக் கொள்ளும் ‘படம் காட்டும்' நிகழ்வுகள் எல்லாம் தமிழக நலனைக் கருத்தில் கொண்டவையல்ல. கூட்டணியை மட்டும் கணக்கில் கொண்டவை என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

திமுகவுக்கு விஜயகாந்த் தலைமை

திமுகவுக்கு விஜயகாந்த் தலைமை

விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயமாகும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுடனும் தி.மு.க. கூட்டணி அமைத்ததா... இல்லையா? தி.மு.க.வின் கூட்டணி வரலாறு இப்படி இருக்கும் போது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால் அது மார்பின் மீது தான் விழும் என்பதை தயவுசெய்து நீங்கள் உணர வேண்டும்.

தொண்டர்களை சுரண்டிய திமுக

தொண்டர்களை சுரண்டிய திமுக

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறி விட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது எப்படி? என்பது உங்கள் கட்டளைப்படி என்னிடம் கேட்கப்பட்டுள்ள இன்னொரு கேள்வி. மக்களும், கட்சியினரும் விரும்பியதால் அந்தப் பதவிக்கு வந்தேன். ஆனால், ஸ்டாலின் அவர்களே.... மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்... அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மருமகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர்.... இந்தியாவில் வேறு எந்தக் கட்சித் தலைமையாவது தொண்டர்கள் உழைப்பை இப்படி சுரண்டி பயனடைந்ததுண்டா?

என் பதவி, என் உரிமை

என் பதவி, என் உரிமை

நான் மாநிலங்களவை உறுப்பினராவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் உதவி செய்தவர் கலைஞர் என்று தி.மு.க. கூறியிருக்கிறது. எனக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. எனக்குக் கொடுத்தது சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்குவதற்கு பதிலாக 6 தொகுதிகள் மட்டும் வழங்கப்பட்டதால் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் 15 பேர் எனக்கு வாக்களித்தார்கள்.

ஒன்றுக்கு மூன்றுமுறை ஆதரவு

ஒன்றுக்கு மூன்றுமுறை ஆதரவு

அதன்பிறகு 2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஒருமுறை எங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை எங்களின் ஆதரவை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் எனக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை.

நிபந்தனையற்ற ஆதரவு

நிபந்தனையற்ற ஆதரவு

ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுநரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், உங்களை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான்.

108 ஆம்புலன்ஸ் திட்டம்

108 ஆம்புலன்ஸ் திட்டம்

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி செய்த சாதனைகள் என்ன? என்று தி.மு.க. வினா எழுப்பியிருக்கிறது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான். இந்தத் திட்டம் 22 மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் கோடிக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பான் கி மூனே பாராட்டினார்

பான் கி மூனே பாராட்டினார்

உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை (National Rural Health Mission) செயல்படுத்தியது நான் தான். இந்த திட்டத்தின் உதவியுடன் இந்தியாவின் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 50 விழுக்காட்டிற்கும் மேல் குறைத்ததும் நான் தான். இது மிகப்பெரிய உலக சாதனை என உலகெங்குமுள்ள மருத்துவ வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை அறிவித்ததற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் டெல்லியில் எனது அலுவலகத்துக்கே வந்து பாராட்டிச் சென்றார்.

புகைக்கு எதிராக நடவடிக்கை

புகைக்கு எதிராக நடவடிக்கை

சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளேன். புகையிலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தேன். பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதித்தேன், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிட வைத்தேன். இதற்கு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவற்றைச் செயல்படுத்தினேன்.

4 சர்வதேச விருதுகள்

4 சர்வதேச விருதுகள்

சுகாதாரத் துறையில் நான் படைத்த சாதனைகளை பாராட்டி 4 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2 ஐ.நா.வின் சார்பு அமைப்பான உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனரால் வழங்கப்பட்டவை ஆகும். மற்றொன்று உலகின் மிகப்பெரிய புகையிலை எதிர்ப்பு அமைப்பான அமெரிக்க புற்றுநோய் சங்கத்தால் வழங்கப்பட்ட லூதர் எல்.டெர்ரி விருது ஆகும்.

கிளிண்டன், ஜார்ஜ் புஷ் இணையான விருது

கிளிண்டன், ஜார்ஜ் புஷ் இணையான விருது

போலியோ நோயைக் கட்டுப்படுத்த நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரோட்டரி சங்கத்தின் போலியோ சாம்பியன் விருது வழங்கப் பட்டது. இது கெண்டுக்கி கர்னல் போன்று பணம் கொடுத்து வாங்கப்பட்ட விருது அல்ல. எனக்கு முன் இந்த விருதை ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பில் கேட்ஸ், டோனி பிளேர், கோஃபி அனான் ஆகியோர் தான் பெற்றுள்ளனர். இதுபோன்ற விருதுகளை நீங்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்த தலைவர்களாவது பெற்றிருக்கிறார்களா?

மது ஒழிப்பது மாநில அரசு வேலை

மது ஒழிப்பது மாநில அரசு வேலை

நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மதுவை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்களால் ஏவப்பட்டவர் கூறியிருக்கிறார். மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் புகையிலையை கட்டுப்படுத்த எனக்கு முழு அதிகாரம் இருந்தது. அதைப் பயன்படுத்தி புகையிலையைக் கட்டுப்படுத்தினேன். ஆனால், மது ஒழிப்பு மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநிலத்தில் ஆட்சி செய்த நீங்கள் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

பாமக-திமுக அடையாளங்கள் இவைதான்..

பாமக-திமுக அடையாளங்கள் இவைதான்..

தி.மு.க. சார்பில் கருணாநிதி 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மத்திய அரசில் தி.மு.க. 18 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறது. அக்கட்சி சாதித்தவை என்னவென்று சொல்ல முடியுமா? இப்போதும் மக்களுக்கு சேவை செய்கிற பெருமை மற்றும் உரிமையுடன் சொல்கிறேன்... 108 அவசர ஊர்தித் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், 4 சர்வதேச விருதுகள் போன்றவை பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளங்கள். ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், பதவிக்காகவும், ஊழலுக்காகவும் பேரம் பேசும் நீரா ராடியா ஒலிநாடா, நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விஞ்ஞான ஊழல் சான்றிதழ் ஆகியவையே தி.மு.க.வின் அடையாளங்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?

கட்டாயத்தில் கொடுத்தீர்கள்

கட்டாயத்தில் கொடுத்தீர்கள்

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கொடுத்ததாக நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். 8 ஆண்டுகளாக போராடி, 21 உயிர்களைத் தியாகம் செய்து தான் 20% இடஒதுக்கீடு பெறப்பட்டது. வன்னியர்களுக்கு மட்டுமின்றி 108 சமுதாயங்களுக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா (ராமதாஸ்) அவர்கள் தான் போராடி பெற்றுக் கொடுத்தார். நாங்கள் நடத்திய போராட்டத்தின் பயனை அடைந்ததில் உங்கள் சமுதாயமும் அடங்கும். இதற்காக நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவதூறு பரப்பக்கூடாது. அந்த இடஒதுக்கீட்டை கருணாநிதி மனமுவந்து தரவில்லை; தர வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. அந்த நேரத்தில் யார் முதல்வராக இருந்திருந்தாலும் இட ஒதுக்கீட்டை மறுத்திருக்க முடியாது.

ஒகனேக்கல் திட்டம்

ஒகனேக்கல் திட்டம்

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அப்படிப்பட்டது தான். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் காலம் காலமாக புளோரைடு மிகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலம் நீடிக்கிறது. இதுவரை 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் முந்தைய 4 முறைகளில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாமே? 19 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. போராடியதன் பயனாகத் தானே 2008 ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்திற்கு கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அந்தவிழாவில் கருணாநிதி பேசும்போது, இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணம் மருத்துவர் அய்யாவும், பா.ம.க.வும் தான் என்று கூறியது உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ. ஆனால், இந்த உண்மை கருணாநிதிக்குத் தெரியும்.

நீதி வெல்லும்

நீதி வெல்லும்

நான் ஊழல் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள்? காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல ஊழல் செய்தே பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு எல்லாமே ஊழலாகத் தெரிகிறது. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி புதுப்பிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அது ஊழல் வழக்கே இல்லை. அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் குற்றச்சாற்று. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள போதிலும், அதை மறைத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நீதி வெல்லும்.

நாங்க ஜெயிச்சிருக்கோம்

நாங்க ஜெயிச்சிருக்கோம்

தமிழகம் ஒன்றும் தைலாபுரம் அல்ல நீங்கள் ஆள்வதற்கு? என்று தி.மு.க. கூறியுள்ளது. நாங்கள் ஆட்சியைப் பிடிப்பது பகல் கனவா? என்பது இருக்கட்டும்... 66 ஆண்டுகள் ஆன உங்கள் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் துணையின்றி வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிக்க முடிவு செய்து என்பதையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை புறக்கணிக்க முடிவு செய்து விட்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

விவாதத்துக்கு தயாரா?

விவாதத்துக்கு தயாரா?

தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்டிப் படைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கிரகணங்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் போராடுகிறோம். அதற்காகத் தான் இரு கட்சிகளின் குறைகளையும் அம்பலப்படுத்துகிறோம். எங்களின் இந்தப் பணி தொடரும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்... நீங்கள் தயாரா?

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Anbumani Ramadoss writtern a letter to DMK leader Stalin for one again, and charging further against DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X