For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

புதுச்சேரியை விட தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியை விட தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தப் படிப்புகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.60 லட்சம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

 Anbumani Ramadoss has accused state government for five times extra charge of medical fee

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை என்பது பணம் கொட்டும் தொழிலாக நடைபெற்று வருகிறது. இதற்கு முடிவு கட்டும் நோக்குடன் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களையும் தமிழக அரசே ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் அரசே ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை அரசே நடத்துவது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். இதன்மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும்.

அதேநேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவற்றுக்கான கல்விக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பது முறையல்ல. இதைப் பயன்படுத்தி தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களின் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயித்திருக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஆண்டு கல்விக் கட்டணத்தை அறிவித்துள்ளன. ஒவ்வொரு படிப்புக்கும் அவற்றின் வகையைப் பொறுத்து ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ மேற்படிப்புக்கு ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ.60 லட்சம் கட்டணம் என்பது மிக மிக அதிகமாகும். கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ மேற்படிப்புக்கான கல்விக் கட்டணங்கள் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தன.

ஆனால், இப்போது நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதால், மருத்துவ இடங்களை விற்க முடியாது என்பதால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஆண்டு கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை. மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு அதிக அளவிலான கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதாலும், முதுநிலைப் படிப்பில் ஆசிரியர்& மாணவர் விகிதம் மிகவும் குறைவு என்பதாலும் கல்விக் கட்டணம் சற்று அதிகமாகத் தான் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது 6 முதல் 10 மடங்கு வரை கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை. கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ற வகையில் தான் கல்விக் கட்டணங்கள் நிர்ணயிக்கப் படுவதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் கூறுவதை ஏற்க முடியாது. உதாரணமாக தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சிறப்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை கொண்டது போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இக்கல்வி நிறுவனத்தில் சிகிச்சை சார்ந்த அனைத்து மேற்படிப்புகளுக்கும் ஆண்டுக் கட்டணமாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே ஏற்றுக் கொள்ள முடியாத, அளவுக்கு அதிகமான கட்டணம் தான்.

ஆனால், இந்த அளவுக்கு கட்டமைப்பு வசதி இல்லாத மற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதே படிப்புக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருகிறது. ஒரு படிப்பை ஒரு கல்வி நிறுவனத்தில் ரூ.20 லட்சத்திற்கு கற்றுத் தரும்போது, இன்னொரு கல்வி நிறுவனத்தில் அதற்கு ரூ.50 லட்சம், ரூ.55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டால், அதற்கு பெயர் அதிக லாபம் தேடும் வணிகம் என்பதைத் தவிர வேறென்ன? இதைத் தமிழக அரசு அனுமதிப்பது நியாயமா?

புதுச்சேரியில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு ஆகிய இரண்டுக்கும் அரசே கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. அங்கு சிகிச்சை சார்ந்த முதுநிலை படிப்புகளைப் பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.13 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை சாராத படிப்புகளைப் பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.5 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.5 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியை விட தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு 5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு ஆகிய இரண்டுக்கும் அரசால் நியமிக்கப்பட்ட குழு தான் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. எனவே, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய முறை, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய முறை ஆகியவற்றை பின்பற்றி தமிழகத்திலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கும் அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMk youth wing leader Anbumani Ramadoss has accused state government for five times extra charge of medical fee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X