For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் துடிப்பதா? அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் துடிப்பதா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் வழக்கு விசாரணையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி அளித்துள்ள பதில்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கும் ஜனநாயக விரோத நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

 Anbumani Ramadoss insists election comission to transfer the RK Nagar money distribution case to CBI investigation

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல் ஊழல்களில் மிக மோசமானது இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் ஊழல் தான். எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு பதவியேற்றிருந்த நேரத்தில், அதற்குக் காரணமாக தினகரனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முகாமிட்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.

வாரி இறைக்கப்பட்ட பணம்

ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.5,000 வரை பணமும், பல ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வாரி இறைக்கப்பட்டன. இதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நேரத்தில் தான் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

சிக்கிய ஆதாரங்கள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் வினியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அவற்றின் அடிப்படையில் தான் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை கோரித் தான் வழக்கு

ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகவும் உள்ளது. அதற்கு வசதியாக இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

வியப்பாக உள்ளது

ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எந்த அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றும்படி தேர்தல் ஆணையமே நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தேர்தல் ஆணையம் மனு செய்திருப்பது வியப்பளிக்கிறது.

ஆணையர் தகவல்

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆணையம் கூறுகிறது. இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றத்தை, காவல்துறை நடவடிக்கைகளில் குறுக்கிடாமல், தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

என்ன முன்னேற்றம்?

மனுவில் அவர் கூறியுள்ள தகவல்களை நினைத்து அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? என்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தெரிவிக்கவில்லை.

கைகோர்த்து செயல்படுகின்றனர்

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையிலான 7 குழுக்கள் தான் இந்த பணத்தை வினியோகித்ததாகவும், இக்குழுக்களில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்ததாகவும் கூறிய வருமானவரித் துறை அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தது. அதன்படி பணம் கொடுத்தது தொடர்பான வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அனைத்து அமைச்சர்களையும் எதிரிகளாக காவல்துறை சேர்த்து விசாரணையை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்குகளின் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதுமட்டுமின்றி, இந்த வழக்குகளின் விசாரிக்கும் காவல்துறை இயக்குனருக்கு எடப்பாடி அரசு தான் சட்டவிரோதமாக 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது.

கேலிக்கூத்து

இத்தகைய சூழலில் இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிப்பது என்பதும், இந்த வழக்குகளை ஆயிரம் அடி ஆழத்தில் குழி தோண்டி புதைப்பது என்பதும் ஒன்று தான். இதைக்கூட உணராமல் இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி லகானி கூறுவது கேலிக்கூத்தாகும்.

காப்பாற்ற முயற்சியா?

தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பு என்றாலும் கூட தேர்தல் அதிகாரி லகானி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரி தான். அந்த நெருக்கடி காரணமாக தேர்தல் முறைகேடு வழக்கிலிருந்து முதல்வர் மற்றும் அமைச்சர்களை காப்பாற்ற இப்படி ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறாரா? என்ற ஐயம் எழுகிறது.

சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை தேவை

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஊழல்களுக்கும் தாய் தேர்தல் ஊழல் தான். எனவே, அந்த ஊழல் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முறைகேடு வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அனைத்து அமைச்சர்களை அந்த வழக்குகளில் சேர்த்து அவற்றை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMK youth wing leader Anbumani ramadoss says that Election Comission should take action to investigate R.K.Nagar by election money distribution issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X