For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களைத் தாக்கிய காவல் அதிகாரியை கைது செய்க: அன்புமணி

பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய திருப்பூர் நகர கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது கொடுரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை மதுக்கடைகளை காப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 Anbumani Ramadoss urges to arrest Police officer

சாமளாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், பாமக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கடந்த ஒன்றாம் தேதி மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சாமளாபுரத்தில் அத்தகைய மதுக்கடை ஒன்றை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது அதைக் கண்டித்து அங்குள்ள பொதுமக்கள் கடுமையாக போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். அதில் அப்பாவி ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது. மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் சிலர் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தி காயப்படுத்தியிருக்கின்றனர்.

காவல்துறையினரின் தடியடிக்கு நீதி கேட்ட பெண்களில் ஒருவரை திருப்பூர் நகர காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் என்பவர் கொடூரமான முறையில் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார். மேலும் பல பெண்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரால் தாக்கப்பட்ட பெண்களும், பொது மக்களும் செய்த குற்றம் என்ன? என்ற வினாவுக்கு அரசிடமும், காவல்துறையிடமும் விடை கிடையாது.

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகளும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் இந்தக் காரணத்தைக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று ஆணையிட்டுள்ளது.

அதன்படி கடந்த காலங்களில் பல மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக அவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைப்பதும், பெண்களை கன்னத்தில் அறைவதும் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகும். மக்களைக் காக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை காப்பாற்றுவதற்காக மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

இதையெல்லாம் மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். மதுவுக்கு எதிராக மீண்டும் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கும் முன் தமிழகத்தில் அகற்றப்பட்ட சாலையோர மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய திருப்பூர் நகர கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMk youth wing leader Anbumani Ramadoss urges to arrest Police officer who attacked women in Samalapuram near erode
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X