For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை வரப் போகிறது,, ரோடுகளை சரி செய்யுங்கள்... ஜெ.வுக்கு அன்புமணி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மாநகரில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. சென்னையில் அதிக எண்ணிக்கையில் விபத்துக்கள் நடப்பதற்கு மோசமான சாலைகள் தான் காரணமாக உள்ளன. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், உடனடியாக சென்னை மாநகர சாலைகளையும், தமிழகத்தின் பிற சாலைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதசல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை நகர சாலைகள் மழைக்காலத்தில் கடும் பாதிப்பை சந்திக்கும் என்பதால் இப்போதே சரி செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி எழுதியுள்ள கடிதம்:

கவனத்தை ஈர்க்கும் கடிதம்

கவனத்தை ஈர்க்கும் கடிதம்

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கிய பணிகள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

போர் முடிந்ததைப் போல

போர் முடிந்ததைப் போல

தலைநகர் சென்னை மாநகரின் சாலைகள் பலவும், போர் நடந்து முடிந்த பகுதி போல காட்சியளிக்கின்றன. தமது ஒவ்வொருநாள் பயணத்தையும் சாகசப் பயணமாக மேற்கொள்ளும் நிலைக்கு சென்னைவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். சாலைப் பள்ளங்கள், குழிகள், பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழிகள், மழை நீர் வடிகாலில் உள்ள ஓட்டைகள் - என பலவிதமான பள்ளம் மேடுகளைக் கடந்து பயணிக்கும் அவல நிலையில் சென்னையில் மக்கள் உள்ளனர். இருசக்கர வாகனங்களிலும், நடந்தும், மிதிவண்டியிலும் செல்லும் பொதுமக்களும் பெரும் ஆபத்தை தினமும் எதிர்கொள்கின்றனர்.

அதிக சாலை விபத்து சென்னையில்தான்

அதிக சாலை விபத்து சென்னையில்தான்

இந்தியாவிலேயே மிக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் நகரமாக சென்னை உள்ளது. 2014 ஆம் ஆண்டில் சென்னை நகரில் 9465 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1046 பேர் உயிரிழந்தனர்; 9255 பேர் காயமடைந்தனர். இவ்விபத்துகளுக்கு மோசமான சாலைகள் தான் முதன்மைக் காரணம். இந்தியாவில் மிக அதிக வாகன அடர்த்தி நிலவும் நகரம் சென்னை தான். இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மிக அதிகமாக உள்ள நகரமும் சென்னைதான்.

குடும்பத்தோடு போக முடியவில்லை

குடும்பத்தோடு போக முடியவில்லை

குழந்தைகளுடனும், குடும்பத்தினரோடும் பலர் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். ஏராளமான பெண்கள் இருசக்கர வாகங்களை பயன்படுத்துகின்றனர். இவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் சவாலான பயணமாகவே உள்ளது. மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டினால் கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானம் ஏற்படும். முதுகு தண்டுவடம் பாதிக்கும். தோள்பட்டை வலி வரும். சென்னையில் தற்போது இளைஞர்கள் கூட இந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். சாலைப் பள்ளங்களால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துகள், காயமடைதல், உடல்நலக் கேடுகள், உயிரழப்பு என பல பாதிப்புகள் வழக்கமாகியுள்ளன.

எங்கு குழி இருக்கிறது என்றே தெரியாமல்

எங்கு குழி இருக்கிறது என்றே தெரியாமல்

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சாலைப் பள்ளங்களால் ஏற்படும் ஆபத்துகள் மேலும் அதிகமாகும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் எங்கே குழி இருக்கிறது என்று தெரியாமல் பயணிக்கும் மக்கள் விபத்துகளுக்கு ஆளாக நேரிடும். மழைக் காலத்தில் சாலைப் பள்ளங்கள் கொலைக் களங்களாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரப்போகும் இந்த ஆபத்தினைத் தடுக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

தவறான வேகத்தடைகளால் விபத்துகள்

தவறான வேகத்தடைகளால் விபத்துகள்

கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் சாலைப் பள்ளங்கள் மற்றும் தவறாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் காரணமாக தமிழ்நாட்டில் 636 பேர் உயிரிழதுள்ளதாக இந்திய அரசின் சாலை விபத்து அறிக்கை 2014 கூறுகிறது. இந்த மரணங்கள் அனைத்தும் தமிழக அரசின் கடமை தவறுதலால் நிகழ்ந்தவையே ஆகும். இதுபோன்ற பாதிப்புகள் இந்த ஆண்டு நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்; இது அரசின் கடமையுமாகும்.

உயிர் வாழும் உரி்மையை உறுதி செய்யுங்கள்

உயிர் வாழும் உரி்மையை உறுதி செய்யுங்கள்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள உயிர்வாழும் உரிமையில், தரமான சாலைக்கான உரிமையும் அடங்கும். எனவே, குண்டு குழிகள் இல்லாத தரமான சாலையை அமைத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

தரமான சாலைகள் மக்களின் அடிப்படை உரிமை

தரமான சாலைகள் மக்களின் அடிப்படை உரிமை

சாலையில் பள்ளங்கள் இருப்பது குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம் 20.05.2015 ஆம் நாள் அளித்த தீர்ப்பில் "தரமான சாலைகள், மக்களின் அடிப்படை உரிமையாகும். மக்களுக்கு தரமான சாலையை ஏற்படுத்தி தருவது மாநில அரசாங்கத்தின் சட்டரீதியான கடமை. இந்த அடிப்படை உரிமை வழங்கப்படவில்லை என்றால் அதற்கான இழப்பீட்டை கேட்க மக்களுக்கு உரிமையுண்டு.

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

சாலைகளிலும் தெருக்களிலும் உள்ள பள்ளங்கள், குழிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்தி, புகார்கள் மூலம் கண்டறியப்படும் சாலைக் குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசலும், மக்களுக்கு தொந்தரவும் மட்டும் ஏற்படுவதில்லை. கூடவே, உயிரிழப்பும் நேர்கிறது. எனவே, கடமைத் தவறும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" - என்று ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு மராட்டிய மாநிலத்திற்கானது என்றாலும் - அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தமிழகத்திற்கும் பொருந்தும்.

ஊழலே முக்கியக் காரணம்

ஊழலே முக்கியக் காரணம்

சென்னை மாநகரின் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதற்கு ஊழலே மிக முக்கிய காரணம். சென்னை மாநகரின் சாலை மேம்பாட்டுக்காக கடந்த நான்காண்டுகளில் சுமார் 1500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. சாலைகளை மேம்படுத்துவதாகவும் செப்பனிடுவதாகவும் சென்னை மாநகராட்சி கூறுகிறது.

பள்ளத்தில் மறைந்து கிடக்கும் ஊழல்கள்

பள்ளத்தில் மறைந்து கிடக்கும் ஊழல்கள்

ஆனால், சென்னையின் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்திய சாலைகள் அமைப்பு (Indian Road Congress) வகுத்துள்ள விதிமுறைகளின் படி, உண்மையாகவே தரமாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் - இதுபோல் சேதமடைய வாய்ப்பே இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களில் அவற்றில் பள்ளம் ஏற்படுவதற்கு ஊழல் தான் காரணம்.

சரியான கலவை இல்லை

சரியான கலவை இல்லை

சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தார் மற்றும் சரளைக் கல் ஆகியவை சரியான அளவில் கலக்கப்படாததும் அவை சரியான தரத்தில் இல்லாததும் தான் சாலைகளின் மோசமான தரத்திற்கு முதன்மைக் காரணம் ஆகும். பல நூறு கோடி பணம் ஒதுக்கப்பட்டும் தரமான சாலை அமைப்பதற்கு அந்தப் பணம் செல்லவில்லை... அவை ஆளும் கட்சியினரின் பைகளுக்கே செல்கிறது. இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆள் நுழைவு குழி மட்டம்

ஆள் நுழைவு குழி மட்டம்

சென்னையின் பெரும்பாலான சாலைகளில், சாலை மட்டமும் குடிநீர் வாரியத்தின் ஆள்நுழைவு குழி மட்டமும் சமமாக இல்லை. தனித்தனியாக இயங்கும் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் - சென்னை சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலை மட்டத்தை விட உயரமாக

சாலை மட்டத்தை விட உயரமாக

எடுத்துக்காட்டாக, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்துள்ள சாலைகளின் நடுவே உள்ள ஆள்நுழைவு குழிகள், சாலை மட்டத்தில் இருந்து ஒரு அடி வரை கீழே இறங்கி உள்ளன. சில இடங்களில் சாலை மட்டத்தை விட உயரமாக உள்ளன.

கூட்டு முயற்சி இல்லை

கூட்டு முயற்சி இல்லை

இதே போன்று சாலையோர நடைபாதைகளில், குடிநீர் வாரியத்தின் கழிவு நீர் அல்லது மழை நீர் வடிகால் அமைப்புகளாலும் மின்வாரியத்தின் மின்சார பெட்டிகளாலும், பல இடங்களில் தடைகளும் ஓட்டைகளும் உள்ளன. சாலைகளின் நடுவேயும், சாலை ஓரங்களிலும் ஏற்படும் இத்தகைய கேடுகளை தீர்ப்பதில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டு முயற்சி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆந்திராவைப் பாருங்கள்

ஆந்திராவைப் பாருங்கள்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கூட ஆந்திர பிரதேசத்தின் சாலைகளை பள்ளமில்லாத வகையில் சீரமைக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு 29.9.2015 ஆம் நாள் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சாலைகளில் பள்ளம் ஏற்படுவதை கவனித்து செப்பனிட வேண்டும்; பொது மக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பள்ளங்களை சீரமைக்க வேண்டும்; தரமற்ற சாலைகளுக்கு காரணமான சாலைப்பணி ஒப்பந்தக் காரர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு ஆணையிட்டிருக்கிறார். இத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை. மழைக்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்க்கால அடிப்படையில்

போர்க்கால அடிப்படையில்

குழிகள், ஆள்நுழைவு குழிகள், வடிகால் குழிகள் உட்பட சாலைகளில் உள்ள அனைத்து பள்ளங்களையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். பருவ மழையில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்ட பின்பு சரி செய்யலாம் என்று அரசாங்கம் காத்திருக்கக் கூடாது. தமிழக மக்களில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது என்பதை உணர்ந்து, மழைக்கு முன்பாகவே பள்ளங்களை சீர் செய்ய வேண்டும்.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைப் போல

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைப் போல

மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போன்று, குழிகள், ஆள்நுழைவு குழிகள், வடிகால் குழிகள் உட்பட சாலைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து சரிசெய்யும் நோக்கில் பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் செய்வதற்கான அமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு புகாரையும் கவனித்து குறைகளை உடனுக்குடன் களைய வேண்டும்.

மழை நீர் வடிகால்கள்

மழை நீர் வடிகால்கள்

மழைநீர் வடிவதற்காக ஏற்படுத்தப்பட்ட வடிகால் அமைப்புகள் பல இடங்களில் உடைந்துள்ளன. இந்தக் குழிகளில் ஆட்கள் விழும் ஆபத்தும் உள்ளது. இதே போன்று மின்சார வாரியத்தின் இணைப்புகளும் பெட்டிகளும் கூட ஆபத்தான நிலையில் உள்ளன. இவை அனைத்தையும் கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

பள்ளிகளைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில்

பள்ளிகளைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில்

பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி, பள்ளங்கள், குழிகளை அகற்றியும், தரமான நடைபாதைகளை அமைத்தும் - பள்ளிக்குழந்தைகளின் உயிர்க்காக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல குழந்தைகள் நடந்தும் மிதிவண்டியிலும் தனியாக பள்ளிக்கு வருவதால் இது மிக அவசியமாகும். பள்ளிப்பகுதிகளில் சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுக்களை அமைத்திட வேண்டும்.

வேகத்தடுப்புகளில் கருப்பு வெள்ளை வண்ணம்

வேகத்தடுப்புகளில் கருப்பு வெள்ளை வண்ணம்

சென்னை நகரின் குடியிருப்பு பகுதிகளில் வேகத்தைக் குறைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான ‘Traffic Calming' திட்டங்களை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இவற்றுக்காக அமைக்கப்படும் வேகத்தடுப்புகளில் முறையாக கருப்பு வெள்ளை வண்ணம் பூசியும், முறையான அறிவிப்பு பலகைகள் வைத்தும் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவலம் தடுக்கப்பட வேண்டும்

அவலம் தடுக்கப்பட வேண்டும்

சென்னையில் பெய்யும் ஒருசில மணி நேர மழையில் கூட, சாலைகள் கால்வாய்கள் போன்று மாறி விடுகின்றன. இந்த அவலம் தடுக்கப்பட வேண்டும். மழை நீர் வடியும் வசதிகளை உடனடியாக சீரமைத்து, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

உத்தரவிடுங்கள்

உத்தரவிடுங்கள்

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இதேபோன்ற சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK leader Anbumani Ramadoss has written to CM Jayalalitha to make the roads ready to face Rainy season
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X