For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாற்றின் குறுக்கே மேலும் 2 அணைகள்... தடுத்து நிறுத்த வைகோ வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து வரும் ஆந்திர மாநில அரசின் அடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

Andhra builds 2 more new barrage across Palar which has to be stopped- Vaiko

தமிழக வட மாவட்டங்களின் நீராதாரமான பாலாற்றில் ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காமல் வஞ்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆந்திர மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் தூரத்தில் 22 இடங்களில் ஆந்திர அரசு விதிமுறைகளை மீறி தடுப்பு அணைகள் கட்டி உள்ளது. பல இடங்களில் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியிலும் முனைப்பு காட்டி வருகிறது.

தமிழக மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி ஆந்திர அரசு, வாணியாம்பாடியை அடுத்த புல்லூர் அருகே ஆந்திர மாநிலத்தின் பெரும்பள்ளம் என்னும் இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளை செய்து வருகின்றது.

தற்போது மேலும் ஒரு பேரிடியாக பாலாற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. தற்போது தடுப்பணை உயர்த்தப்படும் பெரும்பள்ளத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் பெகிலிரேவு என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதாகக் கூறி, தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற 2 கண்மாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போன்று 10 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர எல்லையில் கங்குந்தி என்ற இடத்திலும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. பெகிலிரேவு பகுதியில் உள்ள அணை 7 அடி உயரத்திலும், கங்குந்தியில் உள்ள தடுப்பணை 25 அடி உயரத்திலும் கட்டப்பட்டு வருகிறது.

வேலூரில் உள்ள பாலாறு பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதையும், தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளனர். மேலும் புல்லூர் அருகே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலை கைப்பற்றுவதற்காக, தமிழ்நாட்டு பக்தர்கள் வழிபடுவதைத் தடுக்க ஆந்திர காவல்துறையினர் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து, பயிர் சாகுபடியை தடுக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டி வரும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து வரும் ஆந்திர மாநில அரசின் அடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko urges TN Government that to stop Andhra's plan to build 2 more new barrage across Palar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X