For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்... கண்டனக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், சென்னையில் நாளை நடைபெற உள்ள கண்டனக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்கள் 80 பேருக்கும் சபாநாயகர் ஒரு வாரம் தடை விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் திமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Apprise people on what is happening in Tamil Nadu Assembly: Karunanidhi

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தானும் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளுங்கட்சி உறுப்பினர்களோ, அமைச்சர்களோ ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், உண்மைக்கு மாறாகவும் பேசி, அதுபற்றி எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் நேரத்தில், சபாநாயகர் நடவடிக்கை குறிப்பை படித்து பார்த்து விட்டு தீர்ப்பு வழங்குவதாக கூறுகிறாரே தவிர, எந்த தீர்ப்பும் கூறுவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினால், சபாநாயகர் தடுக்கிறார்.

அதே நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் கண்டுகொள்வதில்லை. "நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்ற கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்" என்று 2016 தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது.

தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச்செல்லும் விதம்-அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை-ஆகியவற்றின் காரணமாக, சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பிரச்சினைகளை பேசுகிறார்கள் என்பதை முழுவதுமாக தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு. எனவே எந்த சாக்குபோக்கும் சொல்லி இனியும் காலம் கடத்தாமல் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து மக்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளா?

17-8-2016 அன்று பேரவையிலே அப்படி ஒன்றும் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர் தேவையில்லாமல் வீண் வம்பு வளர்க்கும் வகையில், "நமக்கு நாமே" பற்றி பேசியிருக்கிறார். மானியக்கோரிக்கை மீது பேசுகின்ற உறுப்பினர் அதைப்பற்றித்தானே பேசவேண்டும். அதை விட்டுவிட்டு, மு.க.ஸ்டாலின் நடத்திய "நமக்கு நாமே" பயணம் பற்றி எதற்காக பேசினார்? அவசர அவசரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.

ஒரு வார காலம் இடைநீக்கம் செய்து உடனடியாக தீர்மானம் படிக்கப்படுகிறது என்றால், இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளா என்று நினைக்கத்தோன்றுகிறது. அதுவும் ஒரு வார காலம் இடைநீக்கம் எதற்காக என்று நினைக்கும்போது, காவல்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது, அதைச் சந்திக்க இயலாது என்பதற்காகத்தானா என்றும் எண்ணிடத்தோன்றுகிறது.

திமுகவின் கண்டன கூட்டம்

காவல்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சிகள் பேச இடம் தந்துவிடக்கூடாது என்று நினைத்தால், அதைவிட வெட்கக்கேடான ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆகிய 3 பேரின் கூட்டுச்சதி இது என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது சரி என்றே தோன்றுகிறது. இதையெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் எடுத்துக் கூறுவதற்காகத்தான் வருகின்ற 22-ந் தேதியன்று (நாளை) "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த கூட்டத்தில் நானும், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் உரையாற்றவிருக்கிறோம். 25-ந் தேதியன்று மதுரையிலும், 26-ந் தேதியன்று திருச்சியிலும் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பேசவிருக்கிறார்கள். மேலும் விரிவாக பேரவை நிகழ்ச்சிகள் குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கமளிப்பார்கள். அந்த கூட்டங்களை சிறப்பாக நடத்தித்தர வேண்டுமென்றும், தமிழக சட்டமன்றத்தில் என்னதான் நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்கிட வேண்டுமென்றும் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க சலிப்பின்றி போராடுவோம்' என இவ்வாறு அதில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The Former CM said he would address a public meeting along with leaders including his son and Leader of the Opposition M K Stalin on democracy in the assembly on August 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X