For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1.15 கோடி சொத்துக்குவிப்பு ... 21 ஆண்டுகளுக்குப் பின் சிறை செல்லும் மாஜி அமைச்சர் அரங்கநாயகம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை செல்லப் போகிறார் மாஜி அமைச்சர் அரங்கநாயகம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு விடாது கறுப்பாய் விரட்டி மாஜி அமைச்சர் அரங்கநாயகத்தை சிறைக்குள் தள்ளியுள்ளது. 1991-1996 வரை அமைச்சராக இருந்த அரங்கநாயகம் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.15 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோமதிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரங்கநாயகம், கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளிலிருந்து நான்கு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். எம்.ஜி.ஆர். அமைச்சர்களில் அரங்கநாயகமும் முக்கியமானவர்.

Aranganayagam goes to jail after 21 years

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் 1991ஆம் ஆண்டு அமைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் இவர் கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். கல்வி அமைச்சர் என்றாலே அரங்கநாயகம் என்று சொல்லும் அளவிற்கு அவரது பெயர் மனதில் பதிந்திருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா மீது 1996ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே போல 1991 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அரங்கநாயகம் ரூ.1.15 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

21 ஆண்டுகால வழக்கு

இந்த வழக்கில், அரங்க நாயகத்தின் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தானபாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மனு தாக்கல்

இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்றும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அரங்கநாயகம் உட்பட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர், வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று மற்றொரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

விடுவிக்க மறுப்பு

இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரங்கநாயகம் உட்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரங்கநாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே, இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. எனவே, வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

3 ஆண்டு சிறை தண்டனை

வழக்கை விரைந்து விசாரிக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு 1996ம் ஆண்டு பதிவானது. 21 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோமதிநாயகம் உத்தரவிட்டுள்ளார். மனைவி, மகன்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக டூ திமுக டூ ஓபிஎஸ்

அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட அரங்கநாயகம் கடந்த 2006ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது ஓபிஎஸ் அணியில் இணைந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாது விரட்டிய வழக்கு

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் அதே கால கட்டத்தில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார் அரங்கநாயகம்.

English summary
Former minister Aranganayagam is going to jail after 21 long years in DA case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X