For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த 50000 பேர்... போர்கால அடிப்படையில் நடைபெற்ற மீட்புப்பணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தண்ணீர்தான். வெள்ளம் வடிந்தபாடில்லை... சென்னை புறநகர் மக்களின் துயர் தீர்ந்த பாடில்லை. ஆங்காங்கே கான்கிரீட் கட்டிடங்களின் மீது நின்று கொண்டு மீட்புக்குழுவினரை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பேரிடர் மீட்பு குழுவினரும், ராணுவத்தினரும், கடலோர காவல்படையினரும் மீட்டுள்ளனர்.

புதர்மண்டிய புறநகர் பகுதிகளில் சாலைகளும் தெரியவில்லை, மேடு பள்ளம் தெரியாமல் தண்ணீர் மட்டுமே கண்களில் தெரிய வெள்ளத்தில் சிக்கத் தவிக்கும் மக்களை மீட்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படகுகளில் பயணிக்கின்றனர் மீட்புக்குழுவினர். மீட்புப் பணிகளில் 6 கடலோரப் பாதுகாப்புப் படை, விமானப் படை, ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வெள்ளத்தில் உயிர் தப்பி வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

புரட்டிப்போட்ட கனமழை

புரட்டிப்போட்ட கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கிப் போட்டுள்ளது விடாமல் பெய்த பேய்மழை. சென்னை மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, வழிகின்றன. உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருவதால், நீர் வழித்தடங்கள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

வடியாத வெள்ளம்

வடியாத வெள்ளம்

மழை நின்றுவிட்ட நிலையிலும், ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு குறையாததால், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், ஒரு லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறியவர்களை தவிர, வீடுகளில் முடங்கிய, 50 ஆயிரம் பேர், வெளியேற முடியாமல் பரிதவிக்கின்றனர்.

போர்க்கால அடிப்படையில் மீட்பு

போர்க்கால அடிப்படையில் மீட்பு

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 வீரர்கள் 5 ரப்பர் படகுகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர காவல்படை ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் கடலோர காவல்படையைச் சேர்ந்த 20 நீச்சல் வீரர்கள் உள்பட 70 பேர் 5 பேப்பர் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு குழுவினர் செல்லமுடியாத இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

பாதிப்பு அதிகமுள்ள இடங்கள்

பாதிப்பு அதிகமுள்ள இடங்கள்

வேளச்சேரி, வில்லிவாக்கம், ஆர்.கே.நகர், கொளத்துார், கொரட்டூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அடையாறு, சைதாப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகள், அண்ணாநகர், அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் மொத்தம், 192 பகுதிகளில், ஒரு அடி உயரத்திற்கும் மேல், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளில் 30 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன.

14000 பேர் மீட்பு

14000 பேர் மீட்பு

வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர் போன்ற புறநகர்ப்பகுதிகளிலும் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றனர். புறநகர்ப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் தவித்த 14 ஆயிரம் பேர் நேற்றுவரை மீட்கப்பட்டு மழை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

38 படகுகளில் மீட்பு

38 படகுகளில் மீட்பு

தாம்பரம் பகுதியில் மட்டும் 11 இடங்களில் மீட்புபணி நடந்தது. இங்கு வெள்ளத்தில் தவித்தவர்கள் 24 படகுகளிலும், வேளச்சேரி பகுதியில் 14 படகுகளிலும் ஆக மொத்தம் 38 படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். மேற்கு தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், பொழிச்சலுார், சேலையூர் பகுதிகளில் மட்டும், 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

15 அடி உயர வெள்ளம்

15 அடி உயர வெள்ளம்

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் 15 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகள் நீரில் மூழ்கியதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேற்கு தாம்பரம் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. ராணுவ வீரர்கள் படகு, ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர்.

காஞ்சிபுரத்திலும் மீட்புப்பணி

காஞ்சிபுரத்திலும் மீட்புப்பணி

சென்னையின் புறநகர் பகுதியாக இருந்தாலும், சில பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. 90 படகுகள், 553 மீட்புக்குழு பணியாளர் மூலம், 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை, மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது சிரமமாக உள்ளது. ஏரி மற்றும் கால்வாய்களை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், தண்ணீர் வெளியேறுவது சிரமமாக உள்ளது.

வீடு திரும்புவது எப்போது

வீடு திரும்புவது எப்போது

வெள்ளத்தில் இருந்த மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. பல லட்சம் செலவு செய்து வீடு வாங்கியவர்கள் பலரும் இப்போது தவித்து வருகின்றனர். அதிக வசதி படைத்தவர்கள் உறவினர்களின் வீடுகளுக்கும், ஹோட்டல்களில் அறை எடுத்தும் தங்கியுள்ளனர். உறவினர்கள் அல்லாதவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் வடிந்தால் மட்டுமே அனைவரும் வீடு திரும்ப முடியும் என்பதால் எப்போது வெள்ளம் வடியும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

English summary
Army Personnel Rescuing Flood Affected People During Their Relief Operations In Rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X