For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சிக்கு வயது 1, ஆண்ட முதல்வர்கள் 3 மக்கள் அடைந்த பலன்கள்….?

அதிமுகவின் ஓராண்டு காலத்தில் 3 முதல்வர்கள் ஆண்டாலும் மக்களுக்கான பலன் என்ன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

அனைத்திந்திய அண்ணா திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால், இதுவரை மூன்று முதலைமச்சர்களைக் கண்டுவிட்டது தமிழகம்.

2016ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா திமுக மீண்டும் வெற்றி பெற்று செல்வி ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய ஆட்சியில் அவர் காட்டிய வேகம் 2016ம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகு காட்ட இயலவில்லை. அவருக்கு உடல்நலம் திருப்திகரமாக இல்லை எனப் பரவலாகப் பேச்சு இருந்தது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

Article on AIADMK one year old regime

இதையடுத்து 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதா பதவியில் இருந்த காலத்தில் மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பும், மெட்ரோ ரயில் ஒரு பிரிவைத் தொடங்கி வைத்ததும் குறிப்பிடத் தக்கவை. அதைத் தவிர குறிப்பிடப்படும் செயல்களில் அவரால் ஈடுபட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக சில மணி நேரத்தில் பதவியேற்றார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அத்தனை பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பொதுவாக பதவியில் இருக்கும் முதலமைச்சர் மறைந்துவிட்டால், அடுத்த சீனியர் அமைச்சர் இடைக்கால முதலமைச்சராகப் பொறுப்பேற்றதுதான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. அண்ணா 1969ம் ஆண்டு மறைந்த உடன் இரண்டாம் நிலையில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக இருந்தார். அதே போல் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி எம்ஜிஆர் மறைந்த பின் அதே நெடுஞ்செழியனே இடைக்கால முதல்வராக இருந்தார்.

இந்த இடைக்கால ஏற்பாட்டின்போது முதலமைச்சரை சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். காரணம், ஜெயலலிதா முதலமைச்சர் பதவியலிருந்து இறங்கிய இரு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி ஓ.பி.எஸ். முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் அவரையே சட்டப் பேரவை உறுப்பினர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர்.

டிசம்பர் 6ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை அவர் முதல்வராக இருந்தார்.

ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோதுதான் தண்ணீர்ப் பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டுப் பிரச்சினை பெரிதாக வெடித்தது. கச்சா எண்ணெய் கொண்டுவந்த கப்பல் துறைமுகத்தில் விபத்துக்குள்ளாகி, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அவர் வேகத்தையோ கோபத்தையோ காட்டாமல் சட்டப் பேரவையில் சட்டம் கொண்டுவந்து ஒருவழியாகச் சமாளித்தார். ஆந்திர பிரதேச முதல்வரைச் சந்தித்து தண்ணீர் கிடைக்கவும் வழி செய்தார்.

ஆனால், உட்கட்சிக்குள் ஏற்பட்ட சில மாற்றங்களால் அவர் பிப்ரவரி மாதம் பதவியிலிருந்து விலகினார். சசிகலா ஆதரவாளர் எனக் கருதப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அரசு அமைந்த பிறகு நிர்வாக நிகழ்வுகளை விட அரசியல் நிகழ்வுகளே அதிகம் நடைபெற்றன. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

ஆனால், நீட் தேர்வு, மீனவர் பிரச்சினை, தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது ஆகிய பிரச்சினைகள் அவருக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய நடிகர்கள் ஏதாவது காரணத்துக்காகத் தொடர்ந்து சின்னத் திரையில் தோன்ற இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு எபிசோடில் "இவருக்குப் பதில் இவர்" என அறிவித்துவிட்டு, கதையைத் தொடர்வார்கள்.

அதிமுக அரசு அமைந்து ஓராண்டை எட்டினாலும், "இவருக்குப் பதில் இவர்" என்பதைப் போல் முதலமைச்சர்கள் அமைந்துவிட்டனர். ஆனால், சின்னத் திரையில் கதை தொய்வின்றி நகரும். தமிழக அரசியலிலும் நிர்வாகத்திலும் அப்படியில்லை.

எடப்பாடி கே பழனிச்சாமியைப் பொறுத்தவரையில் அவர் ஆட்சியில் நீடிப்பதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை அனுசரித்து வருகிறார். ஏற்கெனவே, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பாஜகவின் ஆசிகள் உண்டு என்று அரசியல் நோக்கர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

சிலர் இவையெல்லாம் குடியரசுத் தலைவர் ஆட்சி வரையில் நீடிக்கும் அதற்குப் பின் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறும் என்று கூறுகிறார்கள்.

ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையுமா இணையாதா என்பது தீர்ப்பு வராத பட்டிமன்றம் போல நீண்டுகொண்டே இருக்கிறது. இதனிடையில் எடப்பாடிக்குப் புதிய தலைவலி தோன்றியிருக்கிறது.

சசிகலா குடும்ப ஆதிக்கத்தைப் பிரச்சினையாகக் காட்டி ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி என்று அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. பிளவுபட்ட கட்சி இணைவதற்கு சசிகலா குடும்பத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று ஓ.பி.எஸ். அணியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

தினகரன் இரட்டை இலைச் சின்னம் குறித்த புகாரை அடுத்து சிறையில் இருக்கிறார். சசிகலாவுடன், இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் சிறையில் இருக்கின்றனர்.

கைது ஆவதற்கு முன்பு தினகரன் கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இருந்தாலும் எடப்பாடி அணியினர் மீது ஓ.பி.எஸ். அணியினரின் சந்தேகம் நீங்கவில்லை என்பதால் இணைப்பு இழுத்தடிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் மூன்று மாத காலத்தில் பெரிதாக நிர்வாக மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படாவிட்டாலும், பள்ளிக் கல்வியில் "பிளஸ் 2" தேர்வி்ல் ராங்க்கிங் முறை கைவிடப்பட்டது வரவேற்கத் தக்கது. கல்வியாளர்கள் வரவேற்கிறார்கள். இப்போது, பிளஸ் 1 அதாவது 11ம் வகுப்புத் தேர்வையும் பொதுத் தேர்வாக நடத்தி, மொத்த மதிப்பெண் பெறுவதை 200 என்பதிலிருந்து 100 ஆக மாற்றியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

பொதுவாக, அதிகாரிகளின் யோசனைகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளின்படியே ஆட்சியாளர்கள் செயல்படுவார்கள். பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக இருக்கும் உதய சந்திரனை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசு சில முயற்சிகள் எடுத்து வருகிறது. வைகை அணையின் நீர் கோடையில் ஆவியாவதைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே. ராஜு அமைத்த தெர்மகோல் தீர்வு நகைப்புக்குரியதாகிவிட்டது. அதில் சில லட்சம் ஊழல் நடந்ததாகவும் புகார் உள்ளது.

உண்மையில், அமைச்சர் செல்லூர் ராஜு அந்த முயற்சியில் தோல்வியடைந்ததே கேலிக்கு காரணம். ஒருவேளை அதில் வெற்றியடைந்திருந்தால் பாராட்டப்பட்டிருப்பாரோ..

குஜராத் மாநிலத்தில் நீர் மீது தெர்மோகோல் அமைத்து நீர் ஆவியாவதைத் தடுத்ததுடன், அதன் மீது சூரிய மின்சக்திக்கான தகடுகளும் அமைக்கப்பட்டன. அதைப் பின்பற்றியே அமைச்சர் வைகை அணையில் தெர்மோகோல் அமைக்க முயன்றிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு யோசனையை அதிகாரிகள்தான் கூறியிருப்பார்கள். ஆலோசனை கூறிய அதிகாரிகள் குஜராத் செய்தது போல முழுமையாகவும், திட்டமிட்டும் செய்யவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அதிகாரிகளும் பொறியாளர்களும் கூறிய யோசனைகளை் கேட்டுத்தான் அமைச்சர் செய்திருப்பார். பள்ளிக் கல்வியில் மாற்றம் கொண்டுவரப்பட்டபோது, யாரும் அமைச்சர் செங்கோட்டையனைப் பாராட்டாமல், உதயசந்திரனைப் பாராட்டுகிறார்கள். அதே நிலையை செல்லூர் ராஜு விஷயத்தில் கடைப்பிடிக்காதது ஏன்... அதிகாரிகளை மறைத்துவிட்டு, அமைச்சரை மட்டும் சமூக வலைதளங்களில் கேலி செய்வது ஏன்...

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் ஆசிகளைப் பெற்றாலும் அவரது கட்சிக்குள் தலைவலி நீடிக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் அவரைச் சந்தித்து, சட்டப் பேரவை்க் கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆட்சி அமைத்தபோது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு முன் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ. களை கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டபோது, என்னென்ன பேரங்கள் நடந்தனவோ தெரியாது. ஒருவேளை, அதன் பின் விளைவாக அவரது கட்சியைச் சேர்ந்த 16 பேர் தனியாகக் கூடிப் பேசுவதும், பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதும் அவருக்குத் தலைவலிதான்.

அதிமுகவின் ஓராண்டு ஆட்சியில் எந்த முன்னேற்றமும் குறிப்பிடும்படியாக ஏற்படவில்லை. ஜெயலலிதா என்ற ஆளுமை மறைந்த பிறகு கட்சியில் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது கேள்விக் குறியாக உள்ளது.

கட்சி பிரிந்துள்ளது மட்டுமின்றி, ஆளும் தரப்பினரிடையிலும் கருத்து வேறுபாடுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பெரிய தொல்லையாகவே உள்ளன. அதனால்தான் சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அவர் பெரிதும் தயங்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இச்சூழ்நிலையில் அவரால் குறிப்பிடும் வகையில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வர இயலவில்லை என்பது ஏற்கத் தக்க கருத்து.

ஆந்திரப் பிரதேசத்தில் என்டிஆர் என்ற மக்கள் செல்வாக்குள்ள ஆளுமையை அடுத்து சந்திரபாபு நிர்வாகத்தைக் கையில் எடுத்த சமயத்தில் பெரிதாக அறியப்பட்டவராக இல்லை. ஆனால், காலப் போக்கில் அவர் மெல்ல மெல்ல தன்னை தலைமைக்கு உரியவராக ஆக்கிக் கொண்டார். அந்த மாநிலத்தில் நல்ல முன்னேற்றங்களுக்கு கால்கோள் பதிக்கிறார்.

ஜெயலலிதா என்ற ஆளுமைக்குப் பின் தன்னை தேர்ந்த தலைவராக உயர்த்திக் கொள்பவர்கள் அண்ணா திமுகவில் இல்லாதது அவர்களது பலவீனம்தான்.

ஜெயலலிதா தனது கட்சிப் பிரமுகர்களை விட அதிகாரிகளின் யோசனைகளுக்கே செவிமடுத்து வந்தார். அதிகாரிகளும் நல்ல யோசனைகளைக் கூறிவந்தனர்.

முந்தைய ஆட்சியில் சூரிய சக்தி மின்சாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற பல திட்டங்கள் அப்படித்தான் நடைமுறைக்கு வந்தன.

அது மட்டுமின்றி, நீட் தேர்வு, நதிநீர்ப் பிரச்சினை, ஜிஎஸ்டி ஆகிய பல விஷயங்களில் மாநிலங்களின் உரிமையை ஜெயலலிதா விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்றார். அது போன்ற வழிகளில் எந்தத் தலைவரும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக, மத்திய பாஜகவின் ஒட்டுபோல செயல்படுவதை மக்கள் ஏற்பார்களா என்பதை அறிய தேர்தலுக்காகத்தான் காத்திருக்க வேண்டும் போல தோன்றுகிறது.

ஆட்சிக்கு ஒராண்டு ஆகியிருக்கலாம். முதல்வர்கள் மூன்று பேரைக் கண்டிருக்கலாம். முன்னேற்றம் என்பது கேள்விக் குறியாகவே நீடிக்கிறது.

English summary
Columnist Paa Krishnan reviews the AIADMK one year old regime. He says that there is no full governance past one year in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X