• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீட் சர்ச்சை: ஆடைக் கட்டுப்பாடு தேவை...இவ்வளவு அராஜக கெடுபிடி அவசியம்தானா?

|

பா. கிருஷ்ணன்

சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு எழுத தேர்வு அறைக்கு வந்த மாணவர்கள் மீது கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது நாடெங்கும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கேரளத்தில் ஒரு தேர்வுக் கூடத்துக்கு வந்த மாணவியின் உள்ளாடையைக் கூட அகற்றும்படி உத்தரவிட்டது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 103 மையங்களில் 11.35 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

இவ்வாறு கட்டுப்பாடுகளால் மாணவர்கள் படும் அவதி மட்டுமே பெரிதாக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதமே வெளியிடப்பட்டுள்ளது. ஊடகங்களில் அவை வெளியானதுடன் அனைத்துத் தேர்வர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டன.

இதை யாரும் தற்போது நினைவுகூரவில்லை. காரணம், நீட் தேர்வு தேவையா இல்லையா என்பது குறித்து அரசியல்வாதிகள் காரசாரமாக விவாதிப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

நீட் தேர்வு இந்த முறையும் தமிழகத்தில் நடைபெறாது என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ... தேர்வு நடந்தால்தானே ஆடைக்கட்டுப்பாடு குறித்த சர்ச்சை எழும் வாய்ப்பு தோன்றும் என நினைத்திருக்கலாம்.

தொப்பி, ஜீன்ஸ், ஜாக்கெட், ஷூ, முழுக்கைச் சட்டை, ஜாக்கெட், ஸ்கார்ப் போன்றவற்றை அணிந்துகொண்டு தேர்வுக் கூடத்திற்கு வரக்கூடாது என்று ஜனவரியில் வெளியான சுற்றறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர் சல்வார் கமீஸ், கை வளையல், தாலி போன்றவற்றை அணிவதற்குத் தடை ஏதுமில்லை. கறுப்புக் கண்ணாடி, சேலை, வேட்டி, தலைமுடிக்கான கிளிப், கைவிரல் மோதிரம், கைக்கடிகாரம், முழுக் கைச் சட்டை, டீ ஷர்ட் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஒரு விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை. மாணவர்கள் தேர்வு எழுதும்போது "பிட்" எனப்படும் விடைகள் குறிப்பிடப்படும் துண்டுத் தாள்களை ஆடைகளில் மறைத்து வைத்து, தேர்வுக்கூடத்தில் எழுதுவதைக் கட்டுப்படுத்த, முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சிதான் இந்த ஆடைக் கட்டுப்பாடு என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

முக்கியப்பிரமுகர்களின் கூட்டத்திற்குச் செல்லும்போதோ, அவர்களைச் சந்திக்கும்போதோ காவல் துறையினர் பார்வையாளர்களைத் தீவிரமாகச் சோதனை செய்வது வழக்கம். சில சமயம் பென் டிரைவ், டேப்லட், கைபேசி போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது.

இவை சில சமயம் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது. அதைப் போல் தேர்வுக் கூடத்தில் மாணவர்கள் பிட் அடித்து அந்த மாணவரிடம் சோதனை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதனால் தேவையற்ற பல அலைச்சலில் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் நேரத்தைச் செலவிடுவதை இத்தகைய சோதனைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆடைக் கட்டுப்பாடு குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழாமல் இல்லை.

2014ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம், அவர் வேட்டி அணிந்திருந்தார் என்பதுதான். அதுபோல சில அமைப்புகளில் வேட்டி அணிந்து வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

ஆனால், அச்சம்பவத்தை அடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதற்கு எதிராகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். வேட்டி அணிவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டால், அந்த சங்கமோ, நிறுவனமோ நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடுமை காட்டினார்.

அதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பெண்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற ஆடைகளையோ ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி போன்ற ஆடைகளையோ அணிவதற்குக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இந்த ஆடைக் கட்டுப்பாடு 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலில் இருக்கிறது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. தேர்வுக் கூடத்திற்கு வரும் மாணவ, மாணவியருக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்ததில் தவறில்லை. ஆனால், கெடுபிடி என்ற பெயரில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது போன்ற சம்பவங்கள் வரம்பு மீறியதாகவே தோன்றுகிறது.

தேர்வுக் கூடத்திற்கு வரும் மாணவர்கள் ஆடைகளில் மட்டுமல்ல, நடத்தையிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தாக வேண்டும். பிட் அடிப்பது, காப்பி அடிப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்த கெடுபிடி காட்டுவதில் தவறு எதுவும் இருக்காது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவர் பணியில் ஈடுபடும் கனவுடன்தான் தேர்வுக் கூடத்திற்கு வருகிறார். அவ்வாறு தேர்வில் வென்று, எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளையும் முடித்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து மருத்துவத் தொழிலில் ஈடுபடப் போகும் அவர்கள் வெள்ளை நிற கோட் அணிந்துதான் மருத்துவ சேவையை ஆற்றமுடியும். ஆபரேஷன் செய்ய நேர்ந்தால், முகமூடியும் கையுறையும் அணிந்துதான் பணியாற்ற முடியும். அங்கே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டாலும் அதற்கேற்ப ஆடைகளை அணிவது அவர்களது அடையாளத்தைக் காட்டுகிறது. ஏன் அரசியல்வாதிகளே கூட வடமாநிலங்களில் பைஜாமா, ஜிப்பா போன்றவற்றையும், தென் மாநிலங்களில் வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிவதை மரபாகக் கடைப்பிடிக்கிறார்கள். அதுவே ஒரு வகையில் மறைமுகமாக ஆடைக்கட்டுப்பாடு ஆகிவிடுகிறது.

எப்படியாக இருந்தாலும், செயலிலோ, கட்டுப்பாட்டிலோ எவ்வித தவறுமில்லை. அதைக் கடைப்பிடிப்பதில் இருக்கும் வரம்பு மீறல் மட்டுமே சர்ச்சைக்கு ஆளாகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Columnist Paa Krishnan comments on the alleged harassment in examination halls in the name of dress code, where NEET exam was conducted. While accepting that the dress code were already announced, the harsh approach in implementation could have been avoided.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more