For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதிகள் சின்ஹா, பாத்திமாபீவி, கட்ஜூ, கர்ணன்... சர்ச்சை நீதியரசர்கள்

இந்தியாவில் நீதியரசர்கள் சர்ச்சைகளில் சிக்குவது என்பது அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இருந்தே தொடர் கதையாகி வருகிறது.

Google Oneindia Tamil News

பா. கிருஷ்ணன்

நீதித் துறை ஜனநாயகத் தூண்களில் முக்கியமானது. நீதித்துறையின் காவலர்களாக இருப்பவர்கள் நீதியரசர்கள். சமூகத்தில் மிகவும் மதிக்கத் தக்க நிலையில் இருப்பவர்கள். அவர்களும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதை பல சம்பவங்கள் காட்டுகின்றன.

கடந்த சில வாரங்களாகச் சர்ச்சைக்கு ஆளாகியிருப்பவர் கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் 6மாத சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

Article on Controversial Judges

எனினும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது முதல் நீண்டகாலமாகவே கர்ணன் பல சர்ச்சைகளில் சம்பந்தப்பட்டவராக இருந்து வருகிறார். சக நீதிபதிகளுக்கும் அவருக்கும் 2011ம் ஆண்டு முதல் முரண்பாடுகள் தோன்றின.

பல நீதிபதிகளுக்கு எதிராக நேரடியாகப் புகார் கூறி வந்தார். இதனால், அவரை மாற்றும்படி நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன் விளைவாக, 2016-ஆம் ஆண்டு அவர் கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தனது பணியிடை மாற்றத்தை ரத்து செய்வதாக திடீரென்று அவர் அறிவித்தார். எனினும், அத்தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. நீதிபதிகளுக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய அவர் உத்தரவிட்டதால், உச்ச நீதிமன்றம் அவருக்குப் பணிகளைத் தரவேண்டாம் என உத்தரவிட்டது. பிறகு அவர் மன்னிப்புக் கோரினார்.

எனினும் சர்ச்சையை சர்ச்சையை நிறுத்தாத அவர் பல நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 13ம் தேதி அவருக்கு உத்தரவிட்டது. ஆஜராக மறுத்தார் கர்ணன். உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளும் தன் முன்பாக ஏப்ரல் 28-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலப் பரிசோதனை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு அவர் ஒத்துழைக்காமல் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டதுடன் பிடிஆணையும் பிறப்பித்தார். இதன் விளைவாக இப்போது நீதிமன்ற அவமதிப்பு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சர்ச்சைக்குப் பெயர் போனவர். பதவியில் இருந்தபோதே, சில தீர்ப்புகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நீதிபதி பதவியில் இருந்தபோது, கருணைக் கொலையை ஆதரித்துக் கருத்து கூறிய அவர், அதற்கு ஒரு சட்டம் தடையாக இருப்பதாகக் கூறினார். அது போல் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யலாம் என்றும் ஒருமுறை கூறியுள்ளார்.

2007ம் ஆண்டு மார்ச் மாதம் கால்நடைத் தீவின வழக்கில் இன்னொரு நீதிபதியுடன் தீர்ப்புக் கூறிய மார்க்கண்டேய கட்ஜு, "நாட்டைக் கொள்ளையடிக்க எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து அவர்களுக்கு மரணதண்டனை தரவேண்டும்" என்று கோபமாகக் கூறினார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், சில கசப்பான உண்மைகளைக் கூறுவதால் சர்ச்சை ஆளாகிவிட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

ஒரு கட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர் கூறியதற்கு நீதிமன்றத்தில் விவாதிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியது.

சௌம்யா என்ற கேரள பெண் 2011ம் ஆண்டு ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, கோவிந்தசாமி என்பவர் அவரிடம் கொள்ளை அடித்ததுடன், பாலியல் பலாத்காரம் செய்து, ரயிலிலிருந்து கொடூரமாகக் கீழே தள்ளியிருக்கிறார். அதில் சௌம்யா பின்னர் இறந்துவிட்டார். இது தொடர்பான வழக்கில், திருசூர் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து, அதை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால், மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்ற பெஞ்ச் கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கட்ஜு தனது ஃபேஸ்புக்கில் விமர்சித்தார். "அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் பெரும் தவறு செய்துவிட்டனர். கேள்விப்பட்ட தகவலை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை மாணவர்களே அறிவர்" என்று பதிவிட்டிருந்தார். இதையே விவாதிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.

தெற்காசிய ஊடக ஆணையத்தின் கூட்டத்தை அடுத்து நிருபர்களிடம் பேசுகையில், "நாட்டில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள்" என்று விமர்சித்தார். ஹிந்துக்களில் 80 சதவீதம் பேரும், முஸ்லிம்களில் 80 சதவீதம் பேரும் மதவாதிகளாக இருக்கின்றனர் என்பது இவரது சர்ச்சைக்குரிய கருத்து.

ஒரு முறை ஒடிஷா மக்களைப் பற்றிக் கடுமையாகக் கூறியது அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் கொண்டுவிட்டது. பிறகு மன்னிப்புக் கோரினார்.

ஒரு முறை லாகூர் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த கோபால் தாஸ் என்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று, பாகிஸ்தான் அரசு விடுவித்தது.

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படத்தை வெளியிடும்படி திமுக விடுத்த கோரிக்கையை அவர் கடுமையாக குறை கூறினார்.

தமிழக ஆளுநராக இருந்த எம். பாத்திமா பீவி அதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டது சர்ச்சைக்கு ஆளானது. இவரை விட மூத்த நீதிபதிகள் இருந்ததே அதற்குக் காரணம்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது முஸ்லிம் பெண்கள் தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது. அது சர்ச்சைக்குள்ளானது. அதைத் தணிக்கவே இவர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது

பாத்திமா பீவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு 2001ம் ஆண்டு தேர்தலை அடுத்து ஜெயலலிதாவுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜெயலலிதாவை முதல்வராக்கியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், பின்னர் இவர் பதவியிலிருந்து விலகினார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த கர்நாடக குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் செயல்பாடுகள் எதுவும் சர்ச்சைக்கு ஆளாகவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்கு அவர் சிறைத் தண்டனை விதித்ததால், தமிழகத்தில் அவரைக் கண்டித்து அதிமுகவினர் கருத்துகளைத் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி. ராமசாமிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் (Impeachment) கொண்டு வரப்பட்டது 1993ம் ஆண்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அத்தீர்மானம் நிறைவேறவில்லை.

ஆனால், இந்திய அரசியல் சாசனம் இயற்றி, நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1949ம் ஆண்டு கண்டனத்துக்கு ஒரு நீதிபதி ஆளாகியிருக்கிறார். நீதிபதி சின்ஹா என்ற அவர் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார். அதன் பிறகு, 1991ம் ஆண்டு வரையில் யாரும் கண்டனத்துக்கு ஆளாகவில்லை.

பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்யா 1995ம் ஆண்டு அவர் தாதாக்களுடன் தொடர்புள்ள பதிப்பகத்துக்கு நூல் எழுதுவதற்காக ரூ. 70 லட்சம் பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது. அதையடுத்து அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

கோல்கத்தாவில் மும்பை தாதாக்குளுடன் தொடர்புள்ள கடத்தல்காரர்களுக்கு அடிக்கடி முன்ஜாமீன் இடைக்கால அளித்துவந்தார் நீதிபதி அஜீத் சென்குப்தா. கடைசியில் அவர் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ். ஆனந்த் ஒரு முறை தனது மனைவி, மாமியாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கும்படி கீழமை நீதிமன்றத்திடம் செல்வாக்கு செலுத்தியதாகப் புகார் எழுந்தது. ராஜஸ்தான் நீதிபதி அருண் மதன் பாலியல் தொல்லை காரணமாகப் பதவி இழந்தார்.

ஜோத்பூர் நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த புகாரினால் அவர் மீது முன்னாள் உச்ச நீதின்ற தலைமை நீதிபதி ஜேபி பட்நாய்க் தலைமையிலான குழு விசாரணையை நடத்தியது. அதையடுத்து அருண் மதன் பதவி விலகினார்.

நீதிபதிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் நடந்திருக்கின்றன.

கனடா மோன்டானா நீதிமன்றத்தின் நீதிபதி ஜீ டாட் பாஹ் என்பவர் பாலியல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் குறித்து கூறியது விரசமாகக் கருதப்பட்டது. 2013ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது, அந்தப் பெண் தனது முழங்கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளாதது ஏன் என்று கேள்வி கேட்டது பெரிய சர்ச்சையானது. 2014ல் ஓய்வுபெற்ற அவர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதைப் போல் அமெரிக்கா கலிபோர்னியா நீதிமன்றத்தில் நீதிபதி ஆரான் பெர்ஸ்கி பாலியல் வழக்கை விசாரித்தார். நினைவிழந்த நிலையில் இருந்த பெண்ணை மிருகத் தனமாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்குக் குறைவான தண்டனை விதித்ததால் அவரை நீதிபதி பதவியிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ளும்படி பிரசாரமே நடத்தப்பட்டது.

நீதிபதிகள் இயந்திரங்கள் அல்லர். அவர்களும் மனிதர்களே என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதுண்டு. எனினும், அவர்களுக்குத் தேவை சுயக் கட்டுப்பாடு. எந்த வேறுபாட்டுக்கும் இடம் தராமல் செயல்பட வேண்டும். காரணம், அந்தப் பதவியின் மாண்பும் கௌரவமும். இல்லையென்றால் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய்விடும் ஆபத்து உண்டு.

English summary
Columnist Paa Krishnan recalls several controversial instances in the light of recent news on Justice Karnan. Such controversies nothing new to many countries, he recollects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X