For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகருக்கு ஏன் அருகம்புல் பிடிக்குது தெரியுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள இந்த நிலையில் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

Arugampul is a sacred grass lord GaneshaArugampul is a sacred grass lord Ganesha

அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும் உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதி பொருள் உள்ளன.

அருகம்புல் வாதபித்த ஐயமோடீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகையிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை இது அகத்தியர் பாடல்.

அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.

எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம். அவனது தொல்லை தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று, அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர். சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது.

Arugampul is a sacred grass lord GaneshaArugampul is a sacred grass lord Ganesha

தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், "ஆனைமுகக் கடவுளே! இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும்,'' என வேண்டினர்." "அப்படியே ஆகட்டும்'' என்று விநாயகரும் அருள் புரிந்தார்.

அருகம்புல்லிற்கும், விநாயகருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. நம் முன்னோர் நமக்கு கட்டிய வெப்பம் குறைக்கும் வழி .

அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.

போகாத தோஷவினை போகப் பிணியகன்று
தேகாதி யெல்லாஞ் செழிக்கவே ஸ்ரீ வாகாய்
அடர்தந்தை பிள்ளைக் கணியா தலாலத்
திடமாங் கணபதிபத்ரம்
இவ்வாறு தேரையர் குணபாடம்பகுதியில் அருகின் பலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மாவு போன்று வெண்மையாக உறையும். இந்த மாவுப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

கண் நோய் அகல

கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும். பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர்பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார்.

நினைவாற்றல் சக்தி

குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்தாக உள்ளதால் இதை குருமருந்து என்றும் கூறுகின்றனர். ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சக்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

பெண்களுக்கு மருந்து

அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும். நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும். அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

ரத்தம் சுத்தமாகும்

நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது. உடல் இளைக்க தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.

அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும்.

•அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
மருத்துவ குணங்கள்:
• அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
•உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
•வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
•நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
• நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

•நகரங்களில் அருகம்புல் சாறு தாயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் நாட்டு மருந்து கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

English summary
Durva is a sacred grass. The word Durva is a combination of two words ‘duhu’ and ‘avam’. Duhuavam means that which is far away and brought closer. This implies that drive brings the distant pure spiritual or pavitrakas of Lord Ganesha closeness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X