For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வயக்காட்டு பொம்மைகள், கொத்தடிமைகள்.. இது சட்டசபையா, குழாயடியா? ராமதாஸ் சீற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜனநாயக நாணயத்தின் இரு பக்கங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது என்பதால், அதைப் பயன்படுத்தும் வகையில் அவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, தி.மு.க. உறுப்பினர்களை குறிக்கும் வகையில், சட்டசபையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அக்கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினரைக் குறிப்பிடும் வகையில், இந்த அவையில் 131 கொத்தடிமைகள், 131 சோற்றால் அடித்த பிண்டங்கள் இருக்கிறார்கள் என்று கூறியதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கவலையளிக்கிறது

கவலையளிக்கிறது

தமிழக சட்டசபை வரலாற்றில் அண்மைக் காலத்தில் முதல் முறையாக நேற்று சட்டசபை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பது அப்படி ஒன்றும் மாபாதகம் இல்லை என்றாலும், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் தான் கவலையளிப்பவையாக உள்ளன.

நாடாளுமன்றத்தில் காரணம் இருக்கும்

நாடாளுமன்றத்தில் காரணம் இருக்கும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக திகழும் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதும், அதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களால் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற போதிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் அமளிகளின் பின்னணியில் வலுவான காரணங்கள் இருக்கும்.

காரணங்கள் ஏற்க முடியாதவை

காரணங்கள் ஏற்க முடியாதவை

பல நேரங்களில் அவை நாட்டு நலன் சார்ந்தவையாகவும், மக்கள் நலன் காப்பவையாகவும் இருக்கும். ஆனால், தமிழக சட்டசபையில் நேற்று நடந்த அமளி மற்றும் அவை ஒத்திவைப்புக்கான காரணங்கள் ஏற்க முடியாதவையாகும்.

சர்ச்சைக்குரிய பேச்சு

சர்ச்சைக்குரிய பேச்சு

சின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, தி.மு.க. உறுப்பினர்களை குறிக்கும் வகையில், சட்டசபையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் குறிப்பிட்டது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முக ஸ்டாலின் பதில்

முக ஸ்டாலின் பதில்

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அக்கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் தனபால் மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினரைக் குறிப்பிடும் வகையில், இந்த அவையில் 131 கொத்தடிமைகள், 131 சோற்றால் அடித்த பிண்டங்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

முற்றுகையிட்டு போராட்டம்

முற்றுகையிட்டு போராட்டம்

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டன. அப்படியானால் தங்களைப் பற்றி அதிமுக உறுப்பினர் கூறிய வார்த்தைகளையும் நீக்க வலியுறுத்தி, அவைத் தலைவர் தனபாலை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த அமளியின் போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இருதரப்புக்கும் பெருமை கிடைத்திருக்கும்

இருதரப்புக்கும் பெருமை கிடைத்திருக்கும்

சட்டசபையில் நேற்று ஆயத்தீர்வை மற்றும் மின்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், அது குறித்தும், மின்வாரியத்தின் கடன்சுமை அதிகரித்திருப்பது குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி, அதனடிப்படையில் பயனுள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தால் இருதரப்புக்கும் பெருமை கிடைத்திருக்கும்.

கண்டிக்கத்தக்கது

கண்டிக்கத்தக்கது

ஆனால், அது குறித்து பேசாமல், தி.மு.கவினரைப் பார்த்து 89 வயக்காட்டு பொம்மைகள் என்று அதிமுக உறுப்பினர் கேலி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன் கண்டிக்கத்தக்கதுமாகும். தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்பே அவைத்தலைவர் தாமாக முன்வந்து அந்த வார்த்தைகளை நீக்கியிருக்க வேண்டும். அது தான் அவர் அமர்ந்திருக்கும் இருக்கைக்கும், அவரது பதவிக்கும் பெருமை சேர்த்திருக்கும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

குழாயடி சண்டைக் களம்

குழாயடி சண்டைக் களம்

அத்தகைய சூழலில் தி.மு.க. உறுப்பினர்கள் அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்து விட்டு, அவை நடவடிக்கை தொடர அனுமதித்திருந்தால் அது அவர்களுக்கு நற்பெயர் தேடித் தந்திருக்கும். ஆனால், மு.க.ஸ்டாலின் தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதையும் மறந்து விட்டு அதிமுக உறுப்பினர்களை கொத்தடிமைகள்; சோற்றால் அடித்த பிண்டங்கள் என கூறியது தான் அவையை குழாயடி சண்டைக் களமாக மாற்றிவிட்டது.

சட்டசபையின் மாண்பு குலைந்துவிட்டது

சட்டசபையின் மாண்பு குலைந்துவிட்டது

அதிமுக உறுப்பினர் திமுகவினரையும், மு.க.ஸ்டாலின் அதிமுகவினரையும் விமர்சித்ததால் அவர்கள் பரஸ்பரம் அவமதித்துக் கொள்ளவில்லை. மாறாக, எல்லா உறுப்பினர்களையும் அவதூறு பெயர் சூட்டி அழைத்ததன் மூலம் சட்டசபையின் மாண்பையும், மதிப்பையும் குலைத்துள்ளனர்.

அண்ணா உணர்த்தியிருக்கிறார்

அண்ணா உணர்த்தியிருக்கிறார்

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த இரு திராவிடக் கட்சிகளின் வழிகாட்டியான அண்ணா அவரது செயல்பாடுகள் மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்.

கிண்டலுக்கு சாமர்த்திய பதில்

கிண்டலுக்கு சாமர்த்திய பதில்

1962-ம் ஆண்டில் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவரால் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு சாமர்த்தியமாக பதிலளித்த அண்ணா, ‘‘நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே அக்குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன்'' என்றார். அதைக்கேட்டு காங்கிரசார் வாயடைத்தனர்.

நாட்கள் எண்ணப்படுகின்றன

நாட்கள் எண்ணப்படுகின்றன

அண்ணாவின் அந்த சாமர்த்தியம் அவரது கட்சியில் அவர் வகித்த அதே பதவியில் வீற்றிருக்கும் ஸ்டாலினுக்கு இல்லாமல் போனது துரதிருஷ்டம் தான். முதல்வர் ஆன பிறகும் அறிஞர் அண்ணா நிதானம் தவறியதில்லை. ஒருமுறை அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரை நோக்கி ஆவேசமாக பேசிய வினாயகம் அவர்கள், ‘‘உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன'' என்றார்.

பக்குவமாய் கூறி பதற்றத்தைத் தணித்தார்

பக்குவமாய் கூறி பதற்றத்தைத் தணித்தார்

வினாயகம் அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் அண்ணாவின் பதவிக்காலத்தை மட்டுமின்றி, அவரது வாழ்நாளையும் குறிப்பிடுபவை என்பதால் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா அவர்கள்,‘‘ ஆமாம். ஆனால், எனது அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன'' என்று பக்குவமாக கூறி பதற்றத்தைத் தணித்தார். அண்ணாவின் அந்த பக்குவம் அவரது பெயரால் கட்சி நடத்துபவர்களிடம் இல்லாதது சோகம் தான்.

கதையை சுட்டிக்காட்டிய அண்ணா

கதையை சுட்டிக்காட்டிய அண்ணா

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, பந்தல்கால் மரங்களை அவற்றுக்கான குழியில் நடும் பணியில் ஈடுபட்டிருந்த
யானை, ஒரு குழியில் பூனை படுத்திருந்ததைப் பார்த்து அதில் மரக்கம்பத்தை இறக்காமல் திரும்பி விட்ட கதையை சுட்டிக்காட்டிய அண்ணா, ‘‘எதிர்க்கட்சிகள் குழிக்குள் பூனைக்குட்டி போல இருக்கின்றோம். ஆளுங்கட்சி என்ற மரத்தை பூனை மீது நடாத யானையைப் போல் சபாநாயகர் இருந்து எதிர்க்கட்சி மீது பரிவு காட்ட வேண்டும்'' என சபாநாயகருக்கான இலக்கணத்தை கூறினார். ஆனால், அந்த இலக்கணம் ‘அம்மா' புகழ் பாடும் அவைத் தலைவருக்கு இல்லாமல் போய்விட்டது.

நாணயத்தின் இரு பக்கங்கள்

நாணயத்தின் இரு பக்கங்கள்

‘‘ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்து போயிருக்குமேயானால் அந்த நாணயம் செல்லாக் காசாகி விடும்'' என்பதும் அண்ணா உதிர்த்த முத்துக்கள் தான்.

நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்

நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்

ஆனால், தமிழகத்தில் அந்த நாணயத்தின் இருபக்கமும் சிதைந்து போனதால் ஜனநாயகம் செல்லாக்காசாகி விட்டது என்பது தான் உண்மை. ஜனநாயக நாணயத்தின் இரு பக்கங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மதிப்பிடும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது என்பதால், அதைப் பயன்படுத்தும் வகையில் அவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss urges Tamilnadu Government that assembly session to be broadcasted lively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X