For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பு இல்லை என்ற 3 பிரதமர்களின் உறுதிமொழியை மோடி காப்பாற்றுவாரா? கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்தி மொழியைத் திணிக்கமாட்டோம் என்று நாட்டின் 3 பிரதமர்கள் தந்த உறுதிமொழியை பிரதமர் மோடி காப்பாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மொழிப் போர்த் தியாகிகள் நினைவு நாள் வீர வணக்க நாள் அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், தி.மு.க. பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப்போரில் தி.மு.க. ஈடுபட்ட வரலாற்றை நினைவுபடுத்தி வருகிறார்கள். அது போல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதிலும் வீரவணக்க நாள் கடை பிடிக்கப்படுகிறது.

மொழிப்போர் பொன்விழா

மொழிப்போர் பொன்விழா

1965ம் ஆண்டு தி.மு.க. நடத்திய அந்த மொழிப்போரின் 50ம் ஆண்டு நிறைவுதான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா. ஆனால் அதற்கு முன்பே 1937-38ம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கி விட்டது.அப்போது எனக்கு வயது 14 தான். அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையில் ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு தேரோடும் திருவாரூர் வீதிகளில் மாணவர் பட்டாளத்தை உடன் அழைத்துக் கொண்டு பேரணி நடத்தினேன். அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான்.

அன்று 1938ல்..

அன்று 1938ல்..

1938ல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்.

1963ஆம் ஆண்டில்..

1963ஆம் ஆண்டில்..

பின்னர் 1963ம் ஆண்டில் இந்திக்கு எதிராக நேரடிப் போராட்டத்தைத் துவக்க தி.மு.க. முடிவு செய்தது. 4-8-1963ல் சேலத்திலும், 25-8-1963ல் தஞ்சையிலும், 22-9-1963ல் திருநெல்வேலியிலும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன.

புறப்பட்ட ரயில்..

புறப்பட்ட ரயில்..

நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில்தான் அண்ணா, போராட்ட ரயில் புறப்பட்டு விட்டது, இந்தி ஆதிக்கம் நீடிக்கிற வரை இடையில் அது நிற்காது என்று முழக்கமிட்டார். இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தில் ஒரு கட்டமாகத் தான் திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு எதிரேயுள்ள திறந்த வெளியில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி என்ற கழகக் காளை தீக்குளித்து மாண்டார்.

தீக்குளிப்பு, கைது

தீக்குளிப்பு, கைது

அந்தத் தியாகச் சுடரின் திருவுருவப்படத்தினை 6-12-1964ல் திருச்சி தேவர் மன்றத்தில் நான் திறந்து வைத்தேன். அண்ணா 25-1-1965ல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்த மரணங்கள்..

தொடர்ந்த மரணங்கள்..

குளித்தலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளப் பயணம் செய்து கொண்டிருந்த என்னை இரவு ஒரு மணி அளவில் கரூர் பசுபதிபாளையத்தில் வழியில் வந்து கைது செய்தனர். மற்றும் தலைவர்களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஆண்டு குடியரசு தினம் துக்க நாளாக தி.மு.க. கடைப்பிடிக்கப்பட்டது. சிவலிங்கம் என்ற தோழர் சென்னையில் 26-1-1965லிலும், விருகம்பாக்கத்தில் அரங்கநாதன் என்ற தோழரும், கீரனூரில் முத்துவும் இந்தித் திணிப்பை எதிர்த்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

சிதம்பரம் துப்பாக்கிச் சூடு

சிதம்பரம் துப்பாக்கிச் சூடு

சிதம்பரத்தில் மாணவர்கள் மீது பாய்ந்த ஆட்சியினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ராசேந்திரன், இளங்கோவன் என்ற மாணவர்கள் பலியானார்கள்.

போராட்டம் வெடித்தது..

போராட்டம் வெடித்தது..

1965 பிப்ரவரி தொடக்கத்தில் நாங்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், 2ம் வாரத்தில் தமிழகத்தில் துப்பாக்கிக் குண்டுகளின் வெடிச் சத்தங்களே விண்ணைப் பிளந்தன. ஒரே நாளில் 9 இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

தனிமைச் சிறை

தனிமைச் சிறை

தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. மாயவரம் சாரங்கபாணி உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு கல்லூரிக்கு எதிரிலேயே கருகிச் செத்தான். இந்தப் பட்டியலில் அய்யம்பாளையம் வீரப்பன், ரங்கசமுத்திரம் முத்து, விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி போன்றவர்களும் இணைக்கப்பட வேண்டியவர்களாவர். 1965ம் ஆண்டு பிப்ரவரி 16. மறக்க முடியாத நாள். அன்று தான் என்னை சென்னையில் கைது செய்து, லாரியில் ஏற்றி பாளையங்கோட்டை வரை கொண்டு சென்று, தனிமைச் சிறையிலே அடைத்தார்கள்.

மாறன் கைது

மாறன் கைது

என்னைத் தொடர்ந்து 25-3-1965ல் சென்னையில் முரசொலி மாறன் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பாளைச் சிறையில் இருந்த என்னை வந்தடைந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த என்னைப் பார்க்க அண்ணா வருகிறார் என்று கூறினார்கள்.

யாத்திரை பூமி

யாத்திரை பூமி

அண்ணா சிறையில் என்னை வந்து பார்த்ததும், பேசியதும், அன்று நெல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், என் தம்பி, கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் இந்த இடம் தான் இனி எனக்கு யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி என்று கூறியதும், அதன் பிறகு காஞ்சி இதழில் என்னைச் சந்தித்தது பற்றி அண்ணா எழுதியதும், என்னாலோ, கழகத்தினாலோ மறக்கக்கூடிய நிகழ்ச்சிகளா? இவற்றை நினைவு கூர வேண்டிய நாள் தான் ஜனவரி 25, வீர வணக்க நாள்.

பிரதமர்கள் வாக்குறுதி

பிரதமர்கள் வாக்குறுதி

நம்முடைய போராட்டத்தின் விளைவாகத் தான் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாள் நேரு கூறும் போது, (இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரியாது ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன். மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக் கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விட மாட்டேன். அதை முடிவு செய்ய வேண்டியது இந்தி பேசாத மக்களே என்றார்.

நேரு அளித்த உறுதிமொழி

நேரு அளித்த உறுதிமொழி

மீண்டும் நேரு 1963ம் ஆண்டும் நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்றார்.

லால்பகதூர் உறுதிமொழி

லால்பகதூர் உறுதிமொழி

இதே உறுதிமொழிகளைத் தான் 1965ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, அதன் பின்னர் இந்திரா காந்தி ஆகியோர் தெரிவித்தார்கள். ஆனால் அந்த 3 பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவாரா? அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்தில்தான் இந்த ஆண்டு வீர வணக்க நாள் நடைபெறுகிறது.

மோடியையும் வலியுறுத்துவோம்

மோடியையும் வலியுறுத்துவோம்

அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டுமென்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமைய வேண்டுமென்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத் தான் நம்முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் நரேந்திர மோடியால் காப்பாற்றப்படுமா?

இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karuanidhi on Friday urged Prime Minister Narendra Modi to honour the promise made by his predecessors that Hindi won't be imposed on non-Hindi speaking people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X