23ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை.. அடுத்த நாளே வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள்..!

நாகை: ஒருவர் இறந்து முழுசா 1 நாள் கூட முடியல. அதுக்குள்ள அந்நபரின் வீட்டில் கொள்ளையடிக்க கிளம்பிவிட்டனர் ஆசாமிகள்.
சீர்காழி திரிபுரசுந்தரி நகரில் வசித்து வந்தவர் ரமேஷ்பாபு. வயது 45. இவர் ஒரு அதிமுக பிரமுகர். தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு வலதுகரமே இவர்தான். ஊருக்குள் பெரும் செல்வாக்கும், செழிப்பும் மிக்கவர். ஒப்பந்த தொழில், சவுடு மண் குவாரி தொழில் போன்றவற்றை செய்து, அதில் ஓஹோவென வளர்ந்து வந்தார். "மணல் பாபு" என்று சொன்னாலே ரொம்ப பிரபலம். நில வியாபாரத்திலும் சுற்றுவட்டார பகுதியில் இவரை தெரியாதவர்களே இல்லை.

அரிவாளால் வெட்டி கொலை
கடந்த 23-ம் தேதி, ஒரு வேலை விஷயமாக, தனது நண்பர் ஒருவரை பார்க்க சொகுசு காரில் கிளம்பி போய் கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் மணல்பாபு காரின்மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால் காரிலிருந்து பாபு தப்பி ஓட முயன்றாலும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் கொடுமையாக வெட்டி சாய்த்தது.

அமைச்சர் மணியன் ஆறுதல்
கோடியில் புரண்டு வாழ்ந்த மணல்பாபுவை அந்தநேரத்தில் காப்பாற்ற ஒருவரும் இல்லாததால் அங்கேயே உயிரிழந்தார். தகவலறிந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விரைந்து சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொழில் ரீதியான போட்டியா, அரசியல் ரீதியான போட்டியா, எதுவுமே தெரியவில்லை. எதற்காக பாபு கொல்லப்பட்டார் என விசாரணை ஒருபுறம் நடந்து வருகிறது.

மறுநாளே கொள்ளை முயற்சி
இந்நிலையில், எடமணல் ஊராட்சி வருஷபத்து கிராமத்தில் மணல் பாபுவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. பாபு உயிரிழந்ததை தொடர்ந்து சீர்காழி திரிபுரசுந்தரி நகரில்தான் அவரது குடும்பத்தார் தற்போது உள்ளனர். பாபு 23-ந் தேதி கொல்லப்பட்டார் என்றால் 24-ம் தேதி அதாவது மறுநாளே, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சில மர்மநபர்கள், வருஷபத்து கிராமத்து வீட்டின் கதவை உடைத்தனர். கொல்லைப்புறமாக நுழைந்த அவர்கள், வீட்டினுள் சென்று அங்கிருந்த ஒரு பீரோவையும் உடைத்தனர்.

ஏமாறிய திருடர்கள்
ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். பீரோ என்றில்லை, அந்த வீட்டிற்குள் அவர்கள் திருடி செல்ல ஒரு பொருளும் கிடைக்கவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒன்றுமே கிடைக்கவில்லையே என அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே மணல்பாபுவின் வேலைக்காரர்களில் ஒருவர் நேற்று இங்கு பார்த்தபோது, கொலைப்புற கதவு, பீரோ உடைக்கப்பட்டது கண்டு சீர்காழி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர்.