For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தருமபுரிக்கு வரவேண்டாம்… அன்புமணியை எச்சரித்த காவல்துறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தருமபுரி: காவல்துறையினரின் எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தருமபுரி தொகுதி எம்.பி அன்புமணியை தற்போதைக்கு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயை அடுத்த நத்தம் கிராமத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதான 6 பேரும் ஆயுதங்களை கையாள பயிற்சிப் பெற்றவர்கள் என்றும், சிலரை இலக்கு வைத்து அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் போலீஸார் வட்டாரத்தில் கூறப்பட்டது. கைதானவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Avoid visiting Dharmapuri, police warns Anbumani Ramadoss

இளவரசன் நினைவு தினம்

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் காதல் திருமண விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 4ம் தேதி அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஊர்வலம், அமைதிக்கூட்டம் நடத்த பலதரப்பினர் அனுமதி கோரினர்.

6 பேர் கைது

ஆனால் அதற்கு அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம், தருமபுரி தாலுகாவில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நத்தம் காலனியைச் சேர்ந்த அதியமான், சந்தோஷ், அசோக்குமார், ஊர்த்தலைவர் சக்தி, பெரியவர் துரை ஆகியோரை கைது செய்தனர்.

22 பேர் ஆயுதப் பயிற்சி

நத்தம் காலனியைச் சேர்ந்த 22 இளைஞர்கள் தேடப்படும் நக்சலைட்டுகளான காளிதாஸ், சந்திரா ஆகியோரிடம் பயிற்சி எடுத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்களைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சமாதி அருகே வெடிகுண்டு

அதோடு மட்டுமல்லாது இளவரசன் சமாதி அருகே 2 நாட்டுத் துப்பாக்கி, மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு நக்சலைட் ஆதரவு நோட்டீஸ் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எம்.பி.அலுவலகம் திறப்பு

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி எம்.பி அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதில் தருமபுரி லோக்சபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு அலுவலகத்தை திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை எச்சரிக்கை

இந்நிலையில் அனுமதிக்கும்வரை சில நாட்களுக்கு தருமபுரிக்குள் வர வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸுக்கு தகவல் கூறப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் எம்.பி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய அலுவலகம்

முன்னாள் லோக்சபா எம்.பி தாமரைச்செல்வன் முயற்சியால், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்.பி. அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திக்கும் மையம் அமைக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அந்த புதிய அலுவலகம் திறக்கப்படும் முன்பாகவே தேர்தல் நடைபெற்று அன்புமணி வெற்றிபெற்றார்.

6 சட்டமன்ற தொகுதிகளிலும்

நாடாளுமன்ற உறுப்பினருக்கான தலைமை அலுவலகமாக இந்த அலுவலகத்தை செயல்படுத்த பாமக-வினர் திட்டமிட்டு வந்தனர். மேலும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் எம்.பி அலுவலகங்களை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் போலீஸார் எச்சரிக்கை விடுத்ததால் எம்.பி அலுவலகத்தை திறந்து வைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க.வினர் தெரிவித்தனர்.

நத்தம் காலனி மக்கள்

கைது நடவடிக்கை தொடர்வதால் நத்தம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து இது பற்றி முறையிட்டனர்.

"கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டவர்களை ஆயுதங்கள் பதுக்கியதாக பொய்ப்புகார் கூறி காவல் துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், கிராமத்துக்குள் திடீரென நுழையும் போலீஸார் முரட்டுத் தனமாக நடந்து கொள்கின்றனர் என்று கூறினர்.

ஊரைவிட்டு வெளியேறுவோம்

அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் உள்நோக்கத்துடன் போலீஸார் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். கைது நடவடிக்கை தொடர்ந்தால் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை திரும்பக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறுவோம்," என்றும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் விவேகானந்தன் கூறினார். மேலும் நத்தம் மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் முறையிட்டுள்ளனர்.

English summary
Sources say that the police have warned PMK leader Anbumani Ramadoss not to visit Dharmapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X