For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்ற நீதிபதி, ஐஏஎஸ் உள்ளிட்ட 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து ஏன்? - பின்னணி

ஓய்வு பெற்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளிட்ட 11 பேரை நியமித்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி குறித்து சரிவர விசாரிக்கப்படவில்லை. அவர் மீது சில மாறுபட்ட கருத்து இருந்ததால், 58 வயதுக்கு பின்னர் நீதிபதி பணியை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அப்படிப்பட்ட நபர் இதுபோன்ற பதவிக்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், பொறியியல் கல்லூரி முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி, மாடசாமிஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர்.

Back ground story of HC quashes appointment of 11 TNPSC members

இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், தகுதியில்லாத நபர்களை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தமிழக அரசு அவசர கதியில் நியமித்துள்ளது. இதில் பலர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். ஒரு சாதியை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களது நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

11 பேர் நியமனம்

ஜனவரி 31ம் தேதி டி.என்.பி.எஸ்.சி புதிய உறுப்பினராக 11 பேரை அதிமுக அரசு நியமனம் செய்தது . இந்த 11 பேரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் முதல்வருக்கு விசுவாசமாக இருந்ததால் நியமிக்கப்பட்டார்கள் என்றும் மேலும் இந்த 11 பேருக்கு நிர்வாக திறன் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் விவரம்:

நேர்மையான நபர்கள்

அரசு பணிக்கு நேர்மையானவர்கள், திறமையானவர்களை தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் பணியாகும்.

அப்படிப்பட்ட தேர்வு பணியை மேற்கொள்ளும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர், உறுப்பினர்கள் ஒழுக்கமுள்ள, நேர்மையான நபர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. அப்படிப்பட்ட பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது முறையான விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால், 11 உறுப்பினர்கள் நியமனத்தில் அவர்களது பயோடேட்டா மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு அம்சத்தையும் பரிசீலிக்கவில்லை.

அவசரகதியில் நியமனம்

இந்த 11 உறுப்பினர்கள் பதவி 2013ம் ஆண்டு முதல் காலியாக இருந்தது. 3 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவசர கதியில் இந்த காலிப்பணியிடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 11 நபர்களை தேர்வு செய்து, அவர்களது பயோடேட்டாவை மட்டுமே பெற்று, அவர்களை இப்பதவிக்கு நியமனம் செய்துள்ளனர்.

ஆளுநர் நியமன உத்தரவு

இந்த சுயவிவர குறிப்பை மட்டுமே பிரதான ஆவணங்களாக பரிசீலனை செய்து, தமிழக ஆளுநரும் நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார். வேறு எந்த ஒரு ஆவணங்களும் இந்த நியமனத்தில் பரிசீலிக்கப்படவில்லை. அதுவும் இந்த பரிசீலனை ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. மறுநாள் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 பேரையும் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் நியமனம்

அரசு விடுமுறை நாட்களில் இந்த நடவடிக்கை எல்லாம் நடந்துள்ளது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், 11 உறுப்பினர்களும் பிப்ரவரி 2ஆம்தேதி அவசரமாக பதவியையும் ஏற்றுக்கொண்டனர். 11 பேர் குறித்து போலீஸ் ரகசிய விசாரணை உள்ளிட்ட அனைத்து பணிகளும் 24 மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி

முன்னாள் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி குறித்து சரிவர விசாரிக்கப்படவில்லை. அவர் மீது சில மாறுபட்ட கருத்து இருந்ததால், 58 வயதுக்கு பின்னர் நீதிபதி பணியை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி வி ராமமூர்த்தி பெயரை மீண்டும் பரிசீலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.

அரசாணை ரத்து

எனவே 11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. இவர்களது நியமனம் செல்லாது. இந்த நியமனத்தை ரத்து செய்கிறோம். இவர்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமித்து கடந்த ஜனவரி 31ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுநர் ரோசய்யாவினால் நியமனம் செய்யப்பட்ட 11 உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A district judge, a private college teacher and an electricity board engineer, who were among 11 persons appointed to the constitutional post of Tamil Nadu Public Service Commission members, paid the price for being part of a sham, when the Madras high court quashed their appointments on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X