• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு

By Mayura Akilan
|

சென்னை: கடமை தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

Vaiko

"ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது. ஆனால், பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா.வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன.

இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.

‘யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என்று கூறி இருக்கிறார்.

இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்லஸ் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இனக்கொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள ராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; அவர்கள் கண் எதிரேயே ஈழத்தமிழர்கள் குண்டுவீச்சுக்குப் பலியானதையும், உணவு இன்றிப் பட்டினியால் மடிந்ததையும், மருத்துவ சிகிச்சை இன்றியே பலர் சாக நேர்ந்ததையும் கண்டபின்னரும், மனசாட்சியைப் புதைத்துவிட்டுக் கடமை தவறினர் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சிங்கள அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து, ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி, தமிழர்கள் மரண ஓலம் எழுப்பிக் கொண்டு இருந்த இடங்களில் இருந்து ஐ.நா. வெளியேறிய கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்

களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அதுகுறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், வடக்கு மாகாண சபைத் தேர்தலை சிங்கள அரசு நடத்தியது. கொலைகார ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, துன்பத்தில் உழலும் ஈழத்தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்குகளைத் தந்து வெற்றிகளைத் தந்தனர். என்றாவது ஒருநாள் தங்களுக்கு நீதியும் விடுதலையும் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு உள்ள தமிழ் மக்கள், சிங்கள அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே, இந்தத் தீர்ப்பைத் தந்து உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும். கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.

சிரியாவில், அதிபர் பசார் அல் அஸ்ஷாத்தின் ராணுவம் டமாஸ்கசுக்கு அருகில் ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியது என்று ஐ.நா. மன்றத்தில் பலத்த விவாதம்; அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகள் சிரியா மீது போர் தொடுப்போம் என்று மிரட்டல்; ரசாயனக் குண்டுகளை ஒப்படைத்து விடுவேன் என்று சிரியா அதிபர் பசார் அறிவிப்பு என்பதையெல்லாம் எண்ணுகையில், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு, உலக நாடுகளின் மனசாட்சி, என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.

புதைக்கப்பட்ட உண்மைகள், ஒருநாள் வெளிவந்தே தீரும்; ஈழத்தமிழர்களுக்கு நீதியும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலும் மலர்வது காலத்தின் கட்டாயம் ஆகும் என்ற நம்பிக்கையோடு, உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், ஈழத்தமிழர் படுகொலை குறித்த நீதி விசாரணைக்கு, ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்; எந்தெந்த வழிகளில், இயலுமோ, அனைத்தையும் செய்வதற்கு தியாக தீபம் திலீபனின் 26 வது நினைவுநாளாகிய இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
MDMK chief Vaiko has blamed that UN chief Ban Ki Moon is also responsible for the Tamils' genocide in Sri Lanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more