For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு விளம்பரங்களில் முதல்வர்கள் படத்துக்கு தடை: கருணாநிதி எதிர்ப்பு - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அரசு விளம்பரங்களில் முதல்வர் படங்கள் இடம் பெற கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த உத்தரவை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்று உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் படங்களையும், ஜனாதிபதியின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதல்வர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.

Ban on CM photos in govt. ads snatches state rights: Karunanidhi

இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப்பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சமமான அந்தஸ்து தான். இன்னும் சொல்லப்போனால் மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதல்வருக்குத் தான் பொதுமக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். பிரதமரும் பெரும்பான்மை அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுபவர் தான். அதைப் போலவே ஜனாதிபதியும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர் தான். மாநிலங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஆதரவோடு தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படங்கள் இடம்பெறுவதற்கு என்ன அடிப்படைக் காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் மாநில முதல்வர்களின் படம் இடம் பெற வேண்டும் என்பதற்கும் உண்டு. கல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கொட்டி விளக்குவதைக் காட்டிலும் உருவப்படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை வெளியிடுவதன் வாயிலாகவே விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இந்திய ஜனநாயகத்தில் மத்திய நிர்வாகத்தின் உருவகமாக பிரதமரையும், மாநில நிர்வாகத்தின் உருவகமாக முதல்-அமைச்சரையும் முன்னிலைப்படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும். எனவே அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதல்-அமைச்சர்களின் படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான் என்னுடைய கருத்தாகும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்படும் ஊடக விளம்பரங்கள் ஆளுங்கட்சியின் புகழ்பாடும் வகையிலும், பிரசாரம் செய்யும் வகையிலும் தான் அமைகின்றன.

ஆளுங்கட்சிகள் தங்களின் இல்லாத பெருமைகளை அரசு செலவில் பிரசாரம் செய்வதற்கான கருவியாகவே அரசு விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்வதைவிட அரசுத்திட்டங்களின் மூலம் தங்கள் புகழ் பாடிக்கொள்வதையே ஆளுங்கட்சிகள் வாடிக்கையாகக்கொண்டிருக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டு அரசு விளம்பரங்கள் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு விளம்பரங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு திட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அரசு செலவில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திற்கும் தனி நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்களைக் குறிக்கும் பெயர்களையோ சூட்டக்கூடாது.

ஏற்கனவே அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு அனைத்துத் திட்டங்களும் அரசுத்திட்டங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேவையான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
DMK chief M. Karunanidhi on Thursday said the Supreme Court verdict on banning photos of Chief Ministers in government advertisements amounts “to snatching away the rights of states” as the constitution gives “equal status” to Prime Ministers and Chief Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X