For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ்

வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வைப்பீடுகளை தவிர்க்கும் வகையில் வங்கிகள் வட்டி விகிதத்தை கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அறிவித்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் எதிர்மறைத் தாக்கம் அனைத்துத் தளங்களிலும் வெளிப்படையாக தென்படத் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கையின் கடைசி காலத்தை கண்ணியமாக கழிக்க வேண்டும் என நினைக்கும் மூத்த குடிமக்களையும் இம்முடிவு பாதித்திருக்கிறது.

Banks should not reduce the interest rate: Ramadoss

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்றும், இந்த தாள்களை வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்குகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்தலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடமுள்ள மதிப்பிழந்த ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கிக் கணக்கில் செலுத்தத் தொடங்கியிருப்பதால் வங்கிகளின் பண இருப்பு அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் வரை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் இந்த வகையில் ரூ.1.50 லட்சம் கோடி கிடைத்திருக்கிறது.

வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வைப்பீடுகளை தவிர்க்கும் வகையில் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வைப்பீடுகள் மீதான வட்டியை 1.90% வரை குறைத்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத வகையில் ஓராண்டு வரையிலான வைப்பீடு மீதான வட்டி 4 விழுக்காடாகவும், ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரையிலான வட்டி 4.25 விழுக்காடு ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வைப்பீடுகளை கோடீஸ்வரர்களும், பெரு நிறுவனங்களும் தான் செய்வார்கள் என்பதால் இந்த முடிவு பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், சாதாரண மக்கள் செய்யும் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பீடுகள் மீதான வட்டி விகிதத்தையும் 0.10 விழுக்காடு முதல் 0.25 விழுக்காடு வரை வங்கிகள் குறைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை கடந்த சில நாட்களில் இந்த வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, அடுத்த சில வாரங்களில் சாதாரண வைப்பீடுகள் மீதான வட்டி 1% வரை குறைக்கப்படவிருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி, இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்த மாதத்தில் கடன் கொள்கையை அறிவிக்கும் போது வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டிக்குறைப்பு தொடர்பான வங்கிகளின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்களின் வைப்பீடுகளுக்கு வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 5% என்ற அளவுக்கு சுருங்கி விடும். இதனால் பொதுமக்கள், குறிப்பாக தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் வைப்பீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை வாழ்வாதாரமாக வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வங்கிகளைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீதான வட்டியும் பெருமளவில் குறைக்கப்படும் வாய்ப்புள்ளது.

வங்கிகளின் இன்றைய நிலையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இப்படி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் வணிக வங்கிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 6 லட்சம் கோடி குவிந்திருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வங்கிகளிலும் ஏற்கனவே இருப்பில் உள்ள தொகை சில லட்சம் கோடிகளாவது இருக்கும். அடுத்த சில மாதங்களுக்கு புதிதாக வழங்கப்படும் கடன்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செயல்படாமல் கிடக்கும் வைப்பீடுகளுக்கும் வட்டி வழங்குவது சாத்தியமற்றதாகும்.

தவிரவும் வைப்பீடு மீதான வட்டி குறைக்கப்படும் போது, வங்கிகள் வழங்கும் கடன்கள் மீதான வட்டி ஓரளவாவது குறையும் என்பதால், அது தொழில் வளர்ச்சிக்கும், வீடு வாங்க நினைப்போருக்கும் உதவியாக இருக்கும். ஆனாலும், இவை அனைத்தையும் தாண்டி வங்கி வைப்பீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் ஆதரவற்றோர், மூத்த குடிமக்கள், ஏழைகள் ஆகியோரின் நிலையை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிலோ அல்லது ஓய்வூதியம் இல்லாத பிற துறைகளிலோ பணியாற்றி ஓய்வு பெற்ற பல மூத்த இணையர்கள் தங்களிடமுள்ள வாழ்நாள் சேமிப்பான ரூ.10 லட்சத்தை வங்கியில் வைப்பீடு செய்திருப்பதாகக் கொள்வோம்.

ஆண்டுக்கு 8% வட்டி என்ற வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.6666 வட்டி கிடைக்கும். ஆனால், இந்த வட்டி விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டால் ரூ. 4166 ஆக குறைந்து விடும். முதிர்ந்த வயதில் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக அதிக செலவாகும் சூழலில் இந்த தொகை நிச்சயமாக போதுமானதல்ல. இருவருக்கே இந்த நிலை என்றால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தக் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, ஓய்வூதியமற்ற மூத்த குடிமக்கள், ஏழைக்குடும்பங்கள் உள்ளிட்டோரை சிறப்புப் பிரிவினராக அறிவித்து, அவர்களின் வைப்பீடுகளுக்கு மட்டும் இப்போதுள்ள வட்டி விகிதமே தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss has said, Banks Should not reduce the interest rate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X