For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்ணாசிரம, வடமொழி ஆதிக்க பா.ஜ.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய தருணம் இது… பெ. மணியரசன் அறைகூவல்

தமிழகத்தில் பாஜகவின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய தருணம் இது என்று பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தஞ்சை: வர்ணாசிரம, வடமொழி ஆதிக்கம் கொண்ட பாஜகவின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் உருவாவதை தடுக்க வேண்டிய நேரம் இது என்று தமிழ்த் தேசப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்து கடந்த 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து மறைந்த அவரது அதிகாரம் மிக்க பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் அதிமுகவில் தொண்டர்கள் யார் அடுத்த பொதுச் செயலாளர் என்று எதிர்ப்பார்த்திருக்க, அதன் தலைவர்களுக்குள் நீயான நானா போட்டியும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பாஜகவின் அதிகாரத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை பாஜக எடுத்து வருகிறது. பாஜகவின் இந்த முயற்சியை தமிழக மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவின் படுவேகச் செயல்

பாஜகவின் படுவேகச் செயல்

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக் கொள்ள பா.ச.க. தலைமை படுவேகத்தில் செயல்படுகிறது. இந்திய ஆட்சி அதிகாரத்தில் உள்ள அக்கட்சி, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க.வில் பொம்மை முதலமைச்சராக ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை வைத்துக் கொண்டு, தனது இந்துத்துவா கட்சியைத் தமிழ்நாட்டில் வெகுமக்கள் கட்சியாக மாற்றிட எல்லா முனையிலும் செயல்படுகிறது.

அதிமுகவின் தத்துவ கூட்டாளி பாஜக

அதிமுகவின் தத்துவ கூட்டாளி பாஜக

இன்று (8.12.2016) இந்து ஆங்கில நாளேட்டில், நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, அ.தி.மு.க. கூட்டணி பற்றிக் கூறிய செய்தி வந்துள்ளது. "தத்துவ வழியில் அ.தி.மு.க. பா.ச.கவுடன் நெருக்கமானது" என்று உரிமையுடன் கூறியுள்ளார். நேற்று (07.12.2016) இதே ஆங்கில இந்து இதழ், தனது ஆசிரியவுரையில், "செயலலிதாவின் மிக நெருங்கிய தத்துவக் கூட்டாளி பா.ச.க. (Her closest Ideological ally, the BJP) என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழகத்தில் இந்துத்துவா விரிவாக்க முயற்சி

தமிழகத்தில் இந்துத்துவா விரிவாக்க முயற்சி

அ.இ.அ.தி.மு.க.வில் நடைபெறும் அதிகாரப் போட்டியில் - பதவிப் போட்டியில் ஒரு தரப்பினரைக் கையில் எடுக்க பா.ச.க. முனைகிறது. வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல, இந்துத்துவா விரிவாக்கம் அதில் முதன்மை பெற்றுள்ளது!

இந்துத்துவாவிற்கு நெருக்கமானவர் ஜெயலலிதா

இந்துத்துவாவிற்கு நெருக்கமானவர் ஜெயலலிதா

செயலலிதா பா.ச.க.வின் தத்துவத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று வெங்கையா நாயுடு கூறுவதில் நமக்கொன்றும் மாறுபட்ட கருத்து கிடையாது. செயலலிதா இந்துத்துவாவுக்கு நெருக்கமானவர் என்பதை ஏற்கெனவே தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், பா.ச.க. ஆட்சி நடத்துவதுபோல் அப்படியே தமிழ்நாட்டில் அவர் ஆட்சி நடத்தவில்லை. தமிழ் இனத்தின் வரலாறும், அரசியல் சமூகச் சூழலும் அதற்கு முழுமையாக இடம் கொடுக்காது என்பதால், இந்துத்துவா கோட்பாட்டை இலை மறைவு காய் மறைவாகச் செயல்படுத்தினார் செயலலிதா. அதேவேளை தமிழ்நாட்டில் நிலவும் சமூகநீதிப் போராட்ட உளவியல் உணர்வுக்கு நேர் எதிராகப் போய்விடாமல், மாநில உரிமைகளை அவ்வப்போது வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவின் இந்துத்துவா உறவு

ஜெயலலிதாவின் இந்துத்துவா உறவு

இங்கு நாம் கூற வருவது செயலலிதா பற்றிய திறனாய்வன்று. இந்துத்துவா ஆற்றல்களின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் பற்றியே! இந்துத்துவா ஆற்றல்கள் செயலலிதாவுடன் தங்களுக்குத் தத்துவ உறவு உள்ளது என்று கூறிக்கொள்வது பொய்யன்று; உண்மையே!

பிரதமர் வேட்பாளராக ஜெ.வை நிறுத்த பாஜக முயற்சி

பிரதமர் வேட்பாளராக ஜெ.வை நிறுத்த பாஜக முயற்சி

சோ அவர்களின் மறைவையொட்டி ஆர்.எஸ்.எஸ். அதிகார இதழான "ஆர்கனைசர்" ஏட்டின் முன்னாள் ஆசிரியரும், இன்றைய பா.ச.க. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான சேசாத்திரி சாரி கூறியுள்ள செய்திகள், தமிழ் இந்து நாளேட்டில் இன்று (8.12.2016) வந்துள்ளன. அதில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. கூட்டணி சார்பில் இந்தியத் தலைமை அமைச்சர் வேட்பாளராக செயலலிதாவை நிறுத்தும்படி அத்வானியிடம் சோ கூறினார் என்று சாரி குறிப்பிடுகிறார்.

அதிமுகவை கைப்பற்ற பாஜக சதி

அதிமுகவை கைப்பற்ற பாஜக சதி

செயலலிதா இல்லாத நிலையில் அவரை மட்டுமே சர்வாதிகாரத் தலைமையாக ஏற்றுக் கொண்டிருந்த அ.தி.மு.க.வினர், குழுச் சண்டையில் சிக்கிச் சிதறும்போது, அ.இ.அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களில் பலரையும், வெகுமக்களில் கணிசமானோரையும் கூட்டணி என்ற பெயரிலோ அல்லது வேறு வடிவத்திலோ பா.ச.க. ஈர்த்துக் கொள்ளப் பார்க்கிறது.

இந்துத்துவா என்பது இனவாதம்

இந்துத்துவா என்பது இனவாதம்

இந்துத்துவா என்பது ஆரிய இனவாதம் - பார்ப்பனிய வர்ணாசிரம தர்மம் - இந்து மதவெறி ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அன்று; இந்துத்துவா வாதம் உள்ளிட்ட எல்லா வகை மதவெறிகளுக்கும் எதிரானது!

நம்பிக்கையற்ற தேர்தல் கட்சிகள்

நம்பிக்கையற்ற தேர்தல் கட்சிகள்

தமிழ்நாட்டில் பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, பா.ச.க.வுடன் கூட்டணி சேராத அ.இ.அ.தி.மு.க. பிரிவை ஆதரிப்பது பலன் தராது. ஒட்டுமொத்த அ.இ.அ.தி.மு.க.வும் பதவிக்காக - பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக - எந்தத் துரோகத்திற்கும் அணியமாக உள்ள பிரமுகர்களைக் கொண்ட கட்சி! தி.மு.க.வோ ஐந்தாண்டுகளுக்கு மேல் பா.ச.க.வுடன் நடுவண் அரசில் பதவிப் பங்கு பெற்று தமிழினத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுக்குத் துரோகமிழைத்த கட்சி. அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள ஓர் அணியை கூட்டாகச் சேர்த்துக் கொண்டு, அப்படியே பா.ச.க.வுடன் கூட்டணிக்குத் தூதுவிடத் தயங்காத கட்சி தி.மு.க. எந்தத் தேர்தல் கட்சியையும் நம்ப முடியாது.

பாஜகவை தடுக்க வேண்டிய தருணம்

பாஜகவை தடுக்க வேண்டிய தருணம்

தமிழர் வாழ்வுரிமை - இந்துத்துவா எதிர்ப்பு ஆகியவற்றில் மெய்யான அக்கறை கொண்டுள்ள கருத்தாளர்கள், இளையவர்கள் ஆகியோர் தமிழ்த்தேசியக் கருத்துகளைக் கையில் ஏந்தி, வர்ணாசிரம - வடமொழி ஆதிக்கம் கொண்ட இந்துத்துவா அரசியல் பீடமான பா.ச.க. ஆக்கிரமிப்பை எதிர்த்துக் கருத்துப் போர் புரிய வேண்டிய தருணமிது! நெருக்கடியான தருணமிது!

ஜெ.வை ஈழத்திற்கு ஆதரவாக பேச வைத்த தமிழ்நாடு

ஜெ.வை ஈழத்திற்கு ஆதரவாக பேச வைத்த தமிழ்நாடு

இன உணர்வுமிக்க அறிவாளர்களே, இளையோர்களே, நீங்கள் முயன்றால் முடியாததொன்றுமில்லை. தமிழீழத்தை எதிர்த்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கொலைக் குற்றவாளிக் கூண்டிலேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்ட செயலலிதாவை - விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்பதற்காகத் தமிழர் உரிமை கோரும் தலைவர்களைப் பொடாச் சட்டத்தில் சிறையில் போட்ட செயலலிதாவை - 2009இல் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் பேச வைத்தவர்கள் நீங்கள்! நளினியைத் தவிர மற்ற மூவர்க்கும் மரண தண்டனையை நீக்க முடியாது என்று எழுதிய கருணாநிதியை ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவாகத் திருப்பியவர்கள் நீங்கள்!

ஆரிய இனவாதத்திற்கு இடமில்லை

ஆரிய இனவாதத்திற்கு இடமில்லை

இன்னும் எத்தனையோ உள்ளன! இவ்வளவையும் அரசியல் பதவியை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யவில்லை. அரசியல் தலைவர்களையே அசைத்துக் காட்டும் மக்கள் கருத்துருவாக்கத்தின் வழியே சாதித்தீர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் - உங்கள் கருத்துப் போரைத் தொடங்குங்கள்! எந்த வடிவிலும் ஆரிய இனவாதம் - இந்துத்துவம் தமிழ்நாட்டில் காலூன்ற விடாதீர்கள் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார்.

English summary
After death Jayalalithaa, BJP is trying to stand in Tamilnadu, beware of it said P. Maniyarasan, Tamil Nationalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X