• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை மன்னிக்கலாமா? பாரதிராஜா கொந்தளிப்பு

By Mathi
Google Oneindia Tamil News
  விஜயேந்திரரை மன்னிக்கலாமா? பாரதிராஜா கொந்தளிப்பு- வீடியோ

  சென்னை: தமிழ்ச் சோற்றை சாப்பிட்டுவிட்டு தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரை மன்னிக்கலாமா? என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

  இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்ட ஆடியோ ஒலிப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

  தமிழ் மொழியும் இனமும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? என சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.

  கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகா, கர்நாடகமாகவே இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  அகதியாக அவல வாழ்வு

  தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகிற வாழ்க்கைக்கே தடை என தமிழன் தன்னுடைய தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் அவலம் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

  மதவாதிகளே யோசியுங்கள்

  மதவாதிகளே யோசியுங்கள்

  ஆண்டாளைப் பற்றி பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிகமாக பேசிய மதவாதிகளே கொஞ்சம் யோசியுங்கள்! இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன். அந்த செம்மொழியை, மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?

  உயிரை குடிக்கும் கூட்டம்

  உயிரை குடிக்கும் கூட்டம்

  வாழ்வது தமிழ் மண். சுவாசிப்பது தமிழ்க் காற்று. சாப்பிடுவது தமிழ் சோறு. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேன் என்றும் தேசிய கீதத்துக்கு மட்டும் மரியாதை செய்வேன் என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா? அறிவார்ந்த தமிழ்க் கூட்டமே! நம் முதுகின் மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லை என்றால் உன் உயிரையும் மொழியையும் அழித்து இனத்தையும் அழித்து இங்கே வாழும் ஒரு கூட்டம்.

  பழித்தது இல்லை

  பழித்தது இல்லை

  இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு. எந்தத் தமிழனாவது புரியாத மொழியில் ஏன் மந்திரம் சொல்கிறாய்? தமிழில் சொல் என்று போராடியிருக்கிறானா தமிழன்? சமஸ்கிருதத்தை அவமதித்திருக்கிறானா இல்லை? நாங்கள் எல்லாம் மொழிகளையும் ஒன்று என நினைக்கிறோம். மதிக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு எங்களை புறக்கணிக்கிறீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததும் இல்லை. பழித்ததும் இல்லை.

  தமிழ்த் தாய் உயிர் மூச்சு

  தமிழ்த் தாய் உயிர் மூச்சு

  நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றை தின்றுவிட்டு எங்கள் தமிழை நீசபாஷை என்று கூறினீர்கள். வருணாசிரமம், மனுதர்மம் என மனிதர்களைப் பிரித்த இந்துமதவாதிகளே! இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கிறீர்களா? நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த் தாய்வாழ்த்து. அதுதான் எங்கள் உயிர் மூச்சு. தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழமாட்டியா?

  தமிழகம் ஏற்காது

  தமிழகம் ஏற்காது

  தமிழ் நீசபாஷை. சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரீகம் கூட மறந்தது ஏன்? தள்ளாத வயதிலும் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார், கடவுள் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டிலே உண்டு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து உணர்ந்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது.

  தமிழால் ஒன்று சேர்

  தமிழால் ஒன்று சேர்

  பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது.. சிறுத்தையே வெளியில் வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கிட புலியெனச் செயல் செய்ய புறப்படு வெளியில்... என்று பாடியவர் பாரதிதாசன். தமிழா! தமிழால் ஒன்றுபடு! நீறு பூத்த தமிழ் சமுதாயத்தை ஒன்று கேட்டுக் கொள்கிறேன்! ஒன்று சேர்! ஒற்றுமைப்படு! தமிழால் இனத்தால் ஒன்றுசேர்! தமிழ் வாழ்க!!

  இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

  English summary
  Director Bharathiraja has condemned Kanchi Mutt seer Vijayendrar on Tamilanthem row.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X