• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுபான்மையினர் வாக்குக்காக ஜெயலலிதா வேடமிடுகிறார்: தமிழருவி மணியன் பேட்டி- தொடர்ச்சி..

By Mayura Akilan
|

-ஜெயலட்சுமி

தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவுக்கு எதிராக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தட்ஸ்தமிழுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் தொடர்ச்சி...

தேர்தலுக்குப் பின் பாஜக-அதிமுக கை கோர்த்தால்:

தேர்தலுக்குப் பின் பாஜக-அதிமுக கை கோர்த்தால்:

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜக, அதிமுக இணைய வாய்ப்புள்ளதா?

தமிழருவி மணியன்: இன்றைக்கு எல்லாமே சந்தர்ப்பவாத அரசியலாகப் போய்விட்டது. நாளை தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா பிரதமராகும் சூழல் ஏற்பட்டு பாஜக ஆதரவு கொடுக்க முன்வந்தால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?. அதேபோல பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவதற்கு ஜெயலலிதா ஆதரவினை கேட்கும் பட்சத்தில் முக்கிய அமைச்சரவையை தருகிறோம் என்று கூறினால் அவர் வேண்டாம் என்று கூறிவிடுவாரா?

மனித நேய மக்கள் கட்சிக்கு இது தெரியாதா?:

மனித நேய மக்கள் கட்சிக்கு இது தெரியாதா?:

இடதுசாரிகள் அதிமுக உடன் இருக்கின்றனர். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்று ஜெயலலிதா வேடமிடுகிறார். அதேபோல இன்றைக்கு மதவாத சக்திகளைப் பற்றி பேசும் கருணாநிதி 99ல் வாஜ்பாஜ்க்கு ஆதரவு கொடுத்தவர்தானே. அவரது கட்சியினர்தானே பாஜக ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் பதவி வகித்தனர். இன்றைக்கு அவருடைய கூட்டணியில் இருக்கும் திருமாளவன், மனித நேய மக்கள் கட்சியினருக்கு இது தெரியாதா?

உங்களது பாதையில் தெளிவு இல்லையே?:

உங்களது பாதையில் தெளிவு இல்லையே?:

கேள்வி: முன்பு காங்கிரஸ், பின்னர் லோக்சக்தி, தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாடு... உங்களது பாதையில் தெளிவு இருப்பதாக கருதுகிறீர்களா...

தமிழருவி மணியன்: மாணவப் பருவத்திலேயே பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி அம்மையார் உடைத்த போது அப்போது காமராஜரின் பின்னாளில்தான் நின்றேன். காமராஜரின் மறைவிற்குப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தேன். ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தியை தொடங்கியபோது அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக பொறுப்பேற்றேன்.

ராமகிருஷ்ண ஹெக்டே:

ராமகிருஷ்ண ஹெக்டே:

பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.

ஒரிஸாவில் கிருஸ்தவர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது தமிழகத்தில் இருந்து முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான். அப்போது எனக்கும் ராமகிருஷ்ண ஹெக்டேவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அதிலிருந்து விலகினேன்.

மூப்பனார்:

மூப்பனார்:

மூப்பனார் ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தேன். அப்போது அவரிடம் இரண்டு வரங்களைக் கேட்டேன். ஒருபோதும், திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கக் கூடாது என்பதுதான் அது. ஆனால் 1996ல் திமுக உடன் கூட்டணி வைத்த மூப்பனார், 2001ம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்தார். பின்னர் அவரது மறைவிற்குப் பின்னர் ஜி.கே. வாசன் கட்சியினை அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் நான் காங்கிரசில் இருந்து விலகினேன். 2009ம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கத்தினை தொடங்கி மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். என்னுடைய பாதை தெளிவானதாகத்தான் இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு பாஜக என்ன செய்துவிட்டது?:

ஈழத் தமிழர்களுக்கு பாஜக என்ன செய்துவிட்டது?:

கேள்வி: சாஞ்சிக்கு ராஜபக்சே வந்த போது பாஜகவும் காங்கிரஸைப் போல் ஈழத் தமிழருக்கு துரோகம் செய்கிறது என்கிறார் வைகோ.. இலங்கைக்குப் போய் வந்த சுஷ்மா ஸ்வராஜோ, தமிழர்கள் நல்ல முறையில் வாழ்கின்றனர் என்றார்.. பாரதீய ஜனதாவைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் பெரிய அளவில் எந்த பங்களிப்பையும் செய்ததும் இல்லை.. இது யதார்த்தம்.. இந்த யதார்த்தை மீறி பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் தீர்வு தர முடியும் என்று எதன் அடிப்படையில் நம்புகிறீர்கள்?

யஷ்வந்த் சின்கா:

யஷ்வந்த் சின்கா:

தமிழருவி மணியன்: நிச்சயம் நான் நம்புகிறேன். அதற்காகத்தான் வைகோவும், நானும் சேர்ந்து இந்த முடிவினை எடுத்திருக்கிறோம். காங்கிரசைப் பொருத்தவரை, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களாகட்டும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாகட்டும் தனி ஈழம் பற்றி பேசியதில்லை. ஆனால், பாஜகவில் உள்ள தலைவர் யஷ்வந்த் சின்கா, ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தனி ஈழம்தான் தீர்வு என்று கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடுகிறது. ஆனால் பாஜக எங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். வைகோ, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதும் இந்த நம்பிக்கையில்தான்.

மோடிக்கு இவ்வளவு ஆதரவு தெரிவிப்பது ஏன்?:

மோடிக்கு இவ்வளவு ஆதரவு தெரிவிப்பது ஏன்?:

கேள்வி: மோடிக்கு இவ்வளவு தீவிரமாக நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்?

தமிழருவி மணியன்: மோடியின் மீது காதல் ஒன்றுமில்லை. மோடி தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் எழுதினேன். ஆனால் அவர் நடந்த சம்பவங்களுக்கு தன்னளவில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின மக்கள் மத்தியில் மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

‘குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதன் பின்னர் நடைபெற்ற தொடர் கலவரங்களைப் பற்றி பேசி காங்கிரஸ் கட்சியினர்தான் மோடியைப் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துக்கின்றனர்.

காங்கிரஸ் வீட்டுக்கு அனுப்ப பாஜகவை ஆதரிக்கிறேன்:

காங்கிரஸ் வீட்டுக்கு அனுப்ப பாஜகவை ஆதரிக்கிறேன்:

என்னைப் பொருத்தவரை நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன். காங்கிரஸ் வீட்டுக்கு போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்காக பாஜகவை ஆதரிக்கிறேன். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மோடி பிரதமராக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நான் அதை வழி மொழிகிறேன்.

வைகோவுடன் முரண்பாடு:

வைகோவுடன் முரண்பாடு:

கேள்வி: வைகோவை மிகவும் மதிக்கிறீர்கள்.. வைகோ தமிழக முதல்வராக வேண்டும் என்கிறீர்கள்.. வைகோவிடம் இருந்து நீங்கள் முரண்படும் புள்ளி ஏதாவது உண்டா?

தமிழருவி மணியன்: வைகோ தமிழ் தேசியம் பேசுகிறார். நான் இந்திய தேசியம் பேசுகிறேன். நாம் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிந்தால் பின்னர் சாதியத்தின் பெயரால் தமிழகம் பல துண்டுகளாக சிதறுண்டு போகும். எனவேதான் நான் தமிழர்களின் நலனுக்காக இந்தியா உடன் தமிழகம் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் புள்ளிதான் எங்களுக்கு இடையேயான முரண்பாட்டினை ஏற்படுத்துகிறது.

ஆம் ஆத்மி:

ஆம் ஆத்மி:

கேள்வி: நீங்கள் ஏன் எந்தக் கட்சியும் சாராமல், மக்களுக்காகவே கட்சி தொடங்கி போராடி வெற்றியும் பெற்ற கெஜ்ரிவால் பக்கம் நிற்கக் கூடாது. ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்படக் கூடாது?

தமிழருவி மணியன்: காந்தியும், காமராஜரும்தான் என் தலைவர்கள். கெஜ்ரிவாலுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது காந்திய மக்கள் இயக்கம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஆம் ஆத்மி தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் டெல்லியில் 28 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார் கெஜ்ரிவால்.

சினிமாவை பார்த்துவிட்டு...:

சினிமாவை பார்த்துவிட்டு...:

அவர் ஏதோ சினிமாவை பார்த்துவிட்டு தெருவில் இறங்கி மக்கள் மன்றம் நடத்துகிறார். ஒரே நாளில் அது சினிமா ஸ்டண்ட் என்பது புரிந்துவிட்டது.

டெல்லியில் வெற்றி பெற்றதை வைத்து மட்டும், ஆம் ஆத்மி தமிழ்நாட்டில், செடியாகக் கூட வளரவில்லை. அதற்குள் இரண்டு கோஷ்டி உருவாகி மாறி மாறி பேட்டி கொடுக்கின்றனர். இதில் எந்த அணியில் சேர வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஆனால் காந்திய மக்கள் இயக்கத்தில் உட்கட்சிப் பூசல் இல்லை. எனவே எங்களிடம் இருந்துதான் கெஜ்ரிவால் கற்றுக் கொள்ளவேண்டுமே தவிர, கெஜ்ரிவாலைப் பார்த்து காந்திய மக்கள் இயக்கமோ, நானோ கற்றுக் கொள்ளவேண்டியியது ஒன்றுமில்லை.

கிழட்டு புலி:

கிழட்டு புலி:

கேள்வி: லோக்பால் மசோதாவிற்கு அண்ணா ஹசாராவின் உண்ணாவிரதம் பற்றி காந்தியாவாதியான உங்களின் கருத்து?

தமிழருவி மணியன்: காந்தி ஒரு போதும் இன்ஸ்டண்ட் உண்ணாவிரதம் இருந்ததில்லை. ஆனால் அன்னா ஹசாரே அடிக்கடி இன்ஸ்டண்ட் உண்ணாவிரதம் இருந்துள்ளார். கூரிய நகங்களும், எதிரிகளைக் குத்திக்கிழிக்கக் கூடிய பற்களும் கொண்ட கம்பீரம் கொண்ட ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரிதான் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது, பற்களும், நகங்களும், பிடுங்கப்பட்ட கிழட்டு புலி. இதனை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டார்.

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கம், ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

காங்கிரசின் உள்குத்து:

காங்கிரசின் உள்குத்து:

தமிழருவி மணியன்: ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களில் போட்டியிடுவதற்குக் காரணமே காங்கிரசின் உள்குத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது

ஏனெனில் கட்சி தொடங்கி ஒரு வருடத்திற்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தலில் 300 தொகுதிகளில் எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டதில்லை. இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் ஓட்டுக்களைப் பிரிப்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இது மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கச் செய்யும் முயற்சி என்றே நான் கருதுகிறேன். எனக்கு கெஜ்ரிவால் மீது முழுமையான நம்பிக்கை இல்லை.

பழ. நெடுமாறன்:

பழ. நெடுமாறன்:

கேள்வி: காங்கிரஸை விட்டு விலகி ஈழத் தமிழர் அரசியல் பேசும் தமிழருவி மணியன், காங்கிரஸை விட்டு விலகி ஈழத் தமிழர் அரசியல் பேசி வரும் பழ. நெடுமாறன்.. இணைந்த செயல்பாடு அரிதாக இருக்கிறதே..?

தமிழருவி மணியன்: பழ. நெடுமாறன் ஈழத் தமிழர்களுக்காக தன்மை அர்ப்பணித்துக் கொண்ட முனிவர். 100 சதவிகிதம் ஈழத் தமிழர்களுக்காகவே போராடுகிறார். நான் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், அவர்களின் நலனோடும் சேர்த்து ஈழத் தமிழர்களின் நலனுக்காகவும் போராடுகிறேன். இருவரும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளில் இணைந்து செயல்பட்டிருக்கிறோம்.

ராஜிவ் காந்தி படுகொலை- புலிகள் செய்த வரலாற்றுப் பிழை:

ராஜிவ் காந்தி படுகொலை- புலிகள் செய்த வரலாற்றுப் பிழை:

கேள்வி: ராஜிவ் காந்தி படுகொலை பற்றி இப்போதைய உங்கள் கருத்து?

தமிழருவி மணியன்: அப்போது மட்டுமல்ல இப்போதும் சொல்வேன், ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப் புலிகள். அதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து வந்தது இல்லை.

விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுப் பிழைதான் ராஜீவ் காந்தி படுகொலை. இந்த கொலையில் சிஐஏவோ, இந்திய அரசியல் கட்சித் தலைவரோ இருப்பார்கள் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் ஒன்றும் கூலிப்படையினர் இல்லை. அது தியாகம் செரிந்த வேள்விப்படை.

அவர்கள் செய்த தவறு இந்தியாவில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது. இலங்கையில் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்தது. இந்த இரண்டுதான் அவர்களுக்கு எதிரானதாக திரும்பிவிட்டது.

கருணாநிதியின் சோர்வறியா உழைப்பு:

கருணாநிதியின் சோர்வறியா உழைப்பு:

கேள்வி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருவரிடம் பிடித்தது, பிடிக்காதது?

தமிழருவி மணியன்: கருணாநிதியின் சோர்வறியா உழைப்பு.... 90 வயதிலும் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனடியாக களத்தில் இறங்கி போராடுகிறார். கருணாநிதி சிறந்த எதிர்கட்சித் தலைவர்... ஆனால் மிக மோசமான முதலமைச்சர்.

பணிவு இல்லாத ஜெயலலிதா:

பணிவு இல்லாத ஜெயலலிதா:

ஜெயலலிதாவின் பலமும், பலவீனமும் அவருடைய முரட்டுத்தனம்தான். சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ஆளுமை இருக்கிறது.

ஆனால் பணிவு இல்லை. ‘உழு கலப்பையைப் போல தாழ்ச்சிக் கொள்' என்று பைபிளில் ஒரு வாசகம் உண்டு. ஆனால் ஜெயலலிதாவிடம், பதவியில் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி பணிவு என்பதே கிடையாதே. சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகளை எப்படி மாற்ற முடியாதோ அதே போல ஜெயலலிதாவின் குணநலன்களை மாற்ற முடியாது.

(<< பாஜக கூட்டணி.. விஜய்காந்த் மெளனம் சாதிப்பது ஏன்?: தட்ஸ்தமிழுக்கு தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Gandhiya makkal iyakkam leader Tamilaruvi Manian speaks about Jayalalithaa, Karunanidhi and Narendra Modi in ths exclusive interview with oneindia Tamil
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more