For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிராக போராட தமிழக பாஜக தலைவர்கள் முன்வருவார்களா?: டாக்டர் ராமதாஸ்

மத்திய அரசுக்கு எதிராக போராட தமிழக பாஜக தலைவர்கள் முன்வருவார்களா என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ராமதஸ் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வருவார்களா என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்காமல் போனதற்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியுமே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்புகளும கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ''தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படாத நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் வெறுமையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும், வழக்கமான உற்சாகமும், கொண்டாட்டமும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

காவல்துறை அடக்குமுறை

காவல்துறை அடக்குமுறை

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். இதனால் ஒட்டுமொத்த மதுரை மாவட்டமே ஒரு வாரத்திற்கு திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பொங்கல் விழா என்பது மணமக்கள் இல்லாத மணமேடை போன்று வெறுமையாக கடந்து செல்கிறது. மேற்கண்ட மூன்று நகரங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் முயன்ற போதிலும், அதை அடக்குமுறை மூலம் காவல்துறை தடுத்து விட்டது.

இன்று ரொக்கம்.. நாளை கடன்..

இன்று ரொக்கம்.. நாளை கடன்..

அலங்காநல்லூரிலும் இன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தியுள்ள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த 3 ஆண்டுகளாக இல்லாமல் போனதற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை தான் காரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழின விரோதிகளுக்கும், ‘இன்று ரொக்கம்... நாளை கடன்' என்பது போல அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் வசனம் பேசி ஏமாற்றிய தமிழின துரோகிகளுக்கும் என்ன தண்டனை தருவது?

திமுக, காங்கிரஸ்தான் காரணம்

திமுக, காங்கிரஸ்தான் காரணம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கவலை அடைந்துள்ள நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாற்றி லாவணிக் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே காரணம் என்பதை மறைத்துவிட்டு, மக்களை ஏமாற்ற முயல்வது தான். கடந்த காலங்களில் பலமுறை சுட்டிக்காட்டியதைப் போலவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் காரணமாக இருந்தவை திமுகவும், காங்கிரசும் தான். எத்தனை நாடகங்களை நடத்தினாலும், எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் இதை மறைக்க முடியாது.

துரோகம் இழைத்த திமுக

துரோகம் இழைத்த திமுக

2007-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்போட்டியை தொடர்ந்து நடத்த வசதியாக 2009-ஆம் ஆண்டில் திமுக அரசு சட்டம் இயற்றியது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றிருந்தால் ஜல்லிக்கட்டை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்க முடியாது. ஆனால், அதை செய்யாமல் துரோகமிழைத்தது திமுக அரசு. அதுமட்டுமின்றி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் 11.07.2011 அன்று காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டார்.

மவுனியாக இருந்த திமுக

மவுனியாக இருந்த திமுக

அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏற்பட்டிருக்காது. மேலும், ஜல்லிக்கட்டு கொடூரமான பொழுதுபோக்கு என்று மன்மோகன்சிங் கூறியிருந்தார். ஜெய்ராம் ரமேஷ் இன்னும் ஒருபடி மேலே போய் ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு எனக் கூறி தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்தார். இத்தனை துரோகங்களையும் திமுக தட்டிக் கேட்காமல் மவுனியாக இருந்தது. இவ்வளவு பாவங்களுக்கும் அலங்காநல்லூரிலும், சென்னையிலும் போராட்டம் நடத்துவதன் மூலம் பாவ விமோசனம் பெற முடியும் என திமுக நினைத்தால் அது சாத்தியமில்லை.

பாஜகவும் நம்பிக்கை துரோகம்

பாஜகவும் நம்பிக்கை துரோகம்

அதேநேரத்தில் திமுக, காங்கிரஸ் செய்த பாவங்களை சுட்டிக்காட்டி அதிமுகவும், பாரதிய ஜனதாவும் தப்பித்து விட முடியாது. அந்த இரு கட்சிகளும் செய்தது பாவங்கள் என்றால், அதிமுகவும், பாரதிய ஜனதாவும் தமிழக மக்களுக்கும் செய்தது நம்பிக்கை துரோகமாகும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014 ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அப்போது முதல் தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட இருபதாவது நாள் முதல் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் நடந்து வருகிறது.

முதல்வர் என்ன ஆனார்?

முதல்வர் என்ன ஆனார்?

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவோ, அதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தரவோ அதிமுக அரசு துரும்பைகூட கிள்ளிப்போடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து தமது அரசு பின்வாங்காது என்று கூறிய முதலமைச்சர் அதன்பின் என்னவானார்? என்பதே தெரியவில்லை. ஆந்திரத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவின் சொந்த ஊரான நரவாரிப்பள்ளியில் அவரது வீட்டிற்கு அருகிலேயே உச்சநீதிமன்றத் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

சந்திரபாவு நாயுடுவிடமிருந்து கற்றுகொள்ளுங்கள்

சந்திரபாவு நாயுடுவிடமிருந்து கற்றுகொள்ளுங்கள்

இப்போட்டிகள் நடத்த போது சந்திரபாபு நாயுடு அவரது சொந்த ஊரில் இருந்திருக்கிறார். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதற்காக யார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தமிழகத்தில் மறத்தமிழர் பன்னீர்செல்வம் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் காளைகளை கைது செய்து வீரத்தைக் காட்டியுள்ளது காவல்துறை. மக்களின் உணர்வுகளை மதித்து ஆட்சி செய்வது எப்படி? என்பதை சந்திரபாபு நாயுடுவிடமிருந்தாவது கற்றுக்கொள்ள பன்னீர்செல்வம் முயல வேண்டும்.

தமக்கு தாமே பாராட்டு விழா

தமக்கு தாமே பாராட்டு விழா

இன்னொருபுறம், தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணன் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் என கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே கூறி வந்தார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டவுடன் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பாராட்டு விழாக்களை நடத்தி தமக்குத் தாமே மகிழ்ச்சியடைந்தார். ஆனால், கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

மன்னிப்பு கேட்டுவிட்டு பதுங்கினர்

மன்னிப்பு கேட்டுவிட்டு பதுங்கினர்

காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்பதை அவருக்கு பலமுறை சுட்டிக்காட்டிய போதும், அதை பொருட்படுத்தாமல், ‘‘ஜல்லிக்கட்டு நடக்கிறதா... இல்லையா பாருங்கள்'' என்று அறைகூவல் விடுத்தார். கடந்த ஆண்டு வரை சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேக்கர் முதல் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்கள் வரை அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று கூறி வந்தனர். ஆனால், கடந்த இரு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை என்றதும் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்கள் அனைவரும் பதுங்கிக் கொண்டனர்.

நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா?

நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா?

தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரலாம். தெரிந்தே செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு மன்னிப்பு உண்டா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமும் போராட நினைப்பதாகவும், மத்திய அமைச்சர் பதவி தான் தடுப்பதாகவும் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான் தங்களின் விருப்பம்; அதற்காக தடையை மீறுவதில் கூட தவறில்லை என்று பாரதிய ஜனதா தலைவர்கள் கூறிவருகின்றனர்.

பாஜக தலைவர்கள் செய்வார்களா?

பாஜக தலைவர்கள் செய்வார்களா?

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.இராஜா அவரது வீட்டுக் காளையை அவிழ்த்து விட்டு தடையை மீறியிருக்கிறார். அவர்கள் கூறுவது நடிப்பல்ல... உண்மையெனில் அடுத்த சில வாரங்களிலாவது ஜல்லிக்கட்டு நடத்த என்ன செய்யப் போகிறார்கள்? மக்களின் உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்... அவர்கள் செய்வார்களா? இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder accuses DMK and congress for the ban of Jallikattu in Tamilnadu. He wants BJP leaders to protest against Central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X