For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”சற்றும் மனம் தளராமல்”- குமரியில் 7வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

|

நாகர்கோவில்: வரும் பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் 7ஆவது முறையாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதை நம்பி ஒவ்வொரு தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

1991 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியில் கட்சியின் இப்போதைய மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வருகிறார். இதுவரை 6 முறை களம் கண்ட பொன்.ராதாகிருஷ்ணன் 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த போது தான் வெற்றியை பெற்றார். அதோடு மத்தியில் அமைந்த வாஜ்பாய் அரசில் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

BJP Radhakrishnan to contest in Kanyakumari again

அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டென்னிசை விட 1 லட்சத்து 45 ஆயிரத்து 643 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிக் கனியை பறித்தார். அப்போது அவர் பெற்ற மொத்த ஓட்டு 3 லட்சத்து 7 ஆயிரத்து 319 வாக்குகள் ஆகும்.

அதன்பின்பு 2004, 2009 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. இதனால் இம்முறை அவர் களம் இறங்குவாரா? அல்லது பாரதிய ஜனதா கட்சியின் வேறு நிர்வாகிகள் போட்டியிடுவார்களா? என்ற சந்தேகம் நிலவியது.

இதுபற்றி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, கட்சியின் அகில இந்திய தலைமை விரும்பினால் மட்டுமே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கன்னியாகுமரி தொகுதியில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியே களம் இறங்கும் என்று கூறப்படுகிறது. பாரதிய ஜனதா போட்டியிடும் பட்சத்தில் அதன் வேட்பாளராக மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே 7-வது முறையாக களம் இறங்குவார் என தெரிகிறது. இதனை கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்தார்.

பத்மநாபபுரத்தில் நடந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசும்போது, குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு கேட்டு செல்லும் போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள் என்று கூறுங்கள், மக்களுக்கு அவர் பணியாற்றவும், இம்மாவட்டத்தில் விடுபட்ட திட்டங்களை நிறைவேற்றவும் அவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று கூறுங்கள். இதன் மூலம் இங்கு பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதை மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

இல.கணேசன் பேச்சு மூலம் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது உறுதி என தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சுவர் விளம்பரங்கள் செய்யவும், பிரசாரத்தில் ஈடுபடவும் தொடங்கி விட்டனர்.

இதுபற்றி தொண்டர்கள் கூறும் போது, "கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற போது மத்திய அமைச்சர் ஆனார். இம்முறையும் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். அதில் பொன்.ராதாகிருஷ்ணன் நிச்சயம் இடம் பிடிப்பார். குமரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்" என்று அவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

English summary
TN BJP president Pon.Radhakrishnan is expected to contest in Kanyakumari, for a record 7th time in coming lokshabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X