சந்தானத்தை கைது செய்ய சொல்லும் போஸ்டரிலும் பாஜக கிளுகிளுப்ப பாருங்கப்பா!
சென்னை : சந்தானத்தை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அவர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை போட்டு கிளுகிளுப்படைந்துள்ளனர்.
திருமண மண்டபம் கட்டித் தரும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்தை நடிகர் சந்தானம் தாக்கியதாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். நிலப் பிரச்னை தொடர்பாக சமரசம் பேசச் சென்ற போது நீ யார் என்று கேட்டு நடிகர் சந்தானம் மூக்கில் குத்தியதோடு 4 முறை அடித்ததாக பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரேம் ஆனந்த் தாக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓயமாட்டேன்
இதில் பிரேம் ஆனந்த் மூக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு பாதிக்கப்பட்டதாகவும் சந்தானத்தை கைது செய்யும் வரை ஓய மாட்டேன் என்றும் கூறி வருகிறார். நடிகர் சந்தானத்திடம் அடி வாங்கிய பிரேம் ஆனந்த் பாஜகவின் தென்சென்னை மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார். நடிகர் சங்கத்தினரின் அழுத்தம் காரணமாக சந்தானம் கொடுத்த புகார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக பிரேம் ஆனந்த் கூறியுள்ளார்.

முன்ஜாமின் கோரிய சந்தானம்
இதனிடையே பிரேம் ஆனந்த் தன்னை தாக்கியதாக நடிகர் சந்தானமும் போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரியும் சந்தானம் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கண்டன விளம்பரம்
இந்நிலையில் பிரேம் ஆனந்த் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சந்தானத்தின் மீது காவல்துறை உடனடியாக கைது நடவடிக்கை செய்ய வலியுறுத்தி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் தாக்குதலுக்கு ஆளான பிரேம் ஆனந்தின் புகைப்படமும் இதில் இடம்பெற்றுள்ளது.

விமர்சனம்
இது எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் நடிகர் சந்தானம் பெண் வேடத்தில் ரொமான்ஸாக லுக் விடும் புகைப்படத்தை கண்டன விளம்பரத்தில் போட்டுள்ளனர் பாஜகவினர். இதற்கு கைது செய்ய சொல்லி அடிச்ச கண்டன போஸ்டரலயே கிளுகிளுப்ப காட்டுனது இதுதான் பர்ஸ்ட் டைம் என்று முகநூலில் பலரும் கேலி செய்துள்ளனர்.