For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் கோழைகள் அல்ல.. ராத்திரியில் வந்து ஃபேஸ்புக்கில் கொந்தளித்த தமிழிசை!

காவிரி பிரச்சனையில் ஓடி ஒளியவில்லை என இரவில் ஃபேஸ்புக்கில் கொந்தளித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்கள் கோழைகள் அல்ல..கொந்தளித்த தமிழிசை!- வீடியோ

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று சொன்ன தமிழக பாஜக தலைவர்கள் எங்கே என சிலர் கேட்கிறார்கள்... காணாமல் போகவும் ஓடி ஒளியவும் தமிழக பாஜக தலைவர்கள் கோழைகள் அல்ல என ஃபேஸ்புக்கில் கொந்தளித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

    உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை மத்திய பாஜக அரசு. இதனால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    கடந்த 6 வார காலமாக மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என பேசிவந்த பாஜக மூத்த தலைவர்கள் நேற்று மாலை முதலே கருத்து எதுவும் தெரிவிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

    BJP will solve Cauvery crisis, says Tamilisai Soundararajan

    இந்த நிலையில் நேற்று இரவு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். அதில் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    தமிழிசை சவுந்தரராஜனின் ஃபேஸ்புக் பதிவு:

    காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக பாஜக முனைப்பாக இருக்கிறது, தொடர்ந்து எங்களது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் இல கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து நமது உரிமையை வலிமையாக எடுத்துரைத்திருக்கிறோம். மத்திய அரசும் உச்சநீதிமன்றம் என்ன வலியுறுத்தியதோ அதை நிச்சயம் நிறைவேற்றும், நீதி மன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்கு கிடையாது. ஆனால் இந்த பிரச்சனை 120 ஆண்டு கால பிரச்சனை, மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும், பின்பு இருவருமே கூட்டாக மத்திய அமைச்சகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்த போதும் கர்நாடகாவில் கூட்டணி காங்கிரஸ் தமிழகத்தில் அதன் கூட்டணி கட்சி திமுக இருந்தும், தீர்க்கப்படாத பிரச்சனை. அவர்கள் தான் செய்யவில்லை என்று தெரியுமே பின்பு ஏன் அவர்களைக் கேட்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம், அவர்களை ஏன் குறை கூறுறீர்கள் எனக் கேட்கலாம். ஆனால் நோய் முற்றி ஓர் நோயாளி வரும் பொது மிகவும் சிக்கலாயிருக்கும் நோய் முற்றியதற்கு முந்தய மருத்துவர்கள் தான் காரணம்,

    BJP will solve Cauvery crisis, says Tamilisai Soundararajan

    நோய் ஆரம்ப காலத்திலே குணப்படுத்தியிருந்தால் இன்று இந்த சிக்கல் தோன்றியிருக்காதே என்பதை சொல்லும் உரிமையும், காரணத்தை சுட்டிக்காட்டும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. காவிரியில் மேலாண்மை வாரியமோ அல்லது உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதாக நம்பப்படும் குழுவோ அமைக்கப்போவது பாஜக தான் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது இரண்டு மாநிலப் பிரச்சனை, இன்று செய்ய வேண்டிய இடத்தில மத்திய அரசு இருக்கிறது என்று சொல்பவர்கள் மத்தியில் சென்ற ஆட்சி காங்கிரஸ் இருந்தபோது திமுகவின் துணை இல்லாமல் ஆட்சி நிலைத்திருக்க முடியாது என்ற சூழ்நிலை இருந்தபோது ஆட்சியை கவிழ்க்கும் துருப்பு சீட்டை கையில் வைத்திருந்த திமுக ஏன் அதை வலியுறுத்தவில்லை? ஆக இது நெடுநாளைய சிக்கலான பிரச்சனை உடனே தீர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. அதனால் தான் எங்களது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 6 வாரத்தில் முடியுமா என்று கேட்டிருந்தார்.

    நிச்சயம் காவிரியின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் ஆனால் அதே நேரம் இதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு தமிழகம் துண்டாடப்படும் போராட்டக்களமாகும் என்ற அபாயகரமான சூழ்நிலையை இதை வாய்ப்பாக வைத்து தமிழக மக்களின் அமைதியை குலைக்கும் வார்த்தைகளை நங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இரண்டு மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பாஜகவுக்கு இல்லை. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்கள் தமிழகத்திற்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. மறுபடியும் சொல்கிறேன் காவிரி மேலாண்மை அமைய வேண்டும், அது பாஜக வால் தான் முடியும்.

    இன்று தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது என கூறுபவர்கள் தமிழகத்தை நெடுநாள் வஞ்சித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது அவர்களும் மறுக்க முடியாது. இன்று குறை காணும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸின் முதல் 5 ஆண்டு கால ஆட்சிக்கு முட்டுக்கு கொடுத்தார்கள், ஆக காவிரியை கொடுக்கவில்லை என்றல் அவர்கள் அன்று அவரகள் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாம், தமிழகத்தை அன்றே வஞ்சித்தவர்கள் கம்யூனிஸ்டுகளும் தான்.

    அடுத்த 5 ஆண்டுகள் திமுக இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்திருக்காது ஆக அன்று தமிழகத்தை வஞ்சித்தது திமுக, இன்று கூக்குரலிடும் வைகோ, திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் அன்றே காவிரிக்கு அழுத்தம் தராமல் அன்றே தமிழகத்தை வஞ்சித்தவர்கள் இவர்கள். ஆக இன்று காவிரியைப் பற்றி பேச இவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. காவிரி ஆணையமோ குழுவோ அமைப்போம் என்று சொன்ன தமிழக பாஜக தலைவர்கள் எங்கே என சிலர் பேசுகிறார்கள், எங்கேயும் காணாமல் போவதற்கோ, ஓடி ஒளிவதற்கோ பாஜக தலைவர்கள் கோழைகள் அல்ல இன்றும் சொல்கிறோம் நீங்கள் அனைவரும் கிடப்பில் போட்ட காவிரி பிரச்சனையை நிச்சயம் பாஜகவால் தான் தீர்க்கப்படும், ஆணையம் அமைக்கப்பட்டாலும் அதுவும் பாஜக வால் மட்டுமே முடியும், செய்யப்போவதும், காவிரி உரிமையையும் பாதுகாக்கப் போவதும் பாஜக தான் என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன்.

    ஆக என்றுமே ஆக்கப் பூர்வமான தீர்வில் தான் பாஜக நம்பிக்கை உள்ளதே தவிர ராஜினாமா செய்கிறோம், தற்கொலை செய்கிறோம், கண்டனம், தூண்டிவிடுதல் போன்ற நாடக அரசியலில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையே பாஜகவின் நம்பிக்கை, ஆக தமிழகத்தின் உரிமையை பாஜக தான் மீட்டெடுக்கும் என தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். மற்றவர்களால் ஆண்டாண்டு காலம் காலதாமதம் ஆனதை, நல்ல தீர்வுக்காக சில நாட்கள் காலதாமதம் ஆனாலும், எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம், தமிழக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். தமிழக அரசியலில் மற்றவர்கள் தொலைத்த உரிமையை நங்கள் மீட்டெடுப்போம்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    English summary
    TamilNadu BJP president Tamilisai Soundarajan said that her party will solve the Cauvery crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X