For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு அணுகுமுறைக்கு டெசோ கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ கலந்துரையாடலில், கச்சத்தீவு பிரச்சினைக்கு மத்திய அரசு அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில், இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் "டெசோ" அமைப்பின் உறுப்பினர்கள், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சிறப்பு அழைப்பாளர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., ரவிக்குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, கவிஞர் கலி பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bring back Katchatheevu, Teso urges Manmohansingh

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

அமெரிக்க தீர்மானம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை மற்றும் இன அழிப்பு கொடுமைகளைக் கண்டித்து வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009லிருந்து உலக தமிழ்ச் சமுதாயம் வலியுறுத்தி வருகிறது.

சர்வதேச விசாரணை தேவை

அமெரிக்கா கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று அந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் இலங்கையில் நடந்த இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் என்று உறுதியளித்துள்ளார்.

தொடரும் இனப்படுகொலை

சர்வதேச மன்னிப்பு அவை தொடர்ந்து இலங்கையில் நடந்த இனப் போராட்டத்தைக் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றது. தற்போதும் அங்கு சிங்கள அரசாங்கமே திட்டமிட் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியதோடு சுதந்திரமான சர்வதேச விசாரணைதான் இதற்கு தீர்வு என்றும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க தமிழ் அமைப்புகள்

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழுமம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய அமைப்புகள் கடந்த 22.1.2014 அன்று கலைஞருக்கு எழுதிய வேண்டுகோள் கடிதத்தில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசை தலைவர் கலைஞர் வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளன.

இலங்கை அதிபரின் செயலாளர்

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலாளர் லலித் மெவீரதுங்கா அமெரிக்காவினால் முன்மொயப்படும் தீர்மானத்தை முறியடிக்க ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்ட, தங்கள் நாட்டு பிரதிநிதிகள் வெவ்வெறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது மனித உரிமையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்

இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்குத் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு, சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிய வேண்டுமென்று இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

வடக்கு மகாணத்திற்கு அதிகாரம்

இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற போது முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், மாகாண கவுன்சில் உறுப்பினர்களும் - அங்குள்ள மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் வேண்டுமென்றும், 13வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி நியாயமாக வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள்கூட மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி, தமிழ் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட வேண்டிய, நில நிர்வாகம் - காவல்துறை நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான நிர்வாக உரிமைகள் வழங்கப் படவில்லை. மேலும், மாகாண கவுன்சிலைக் கூட்டுவதற்கும், கலைப்பதற்கும் ராஜபக்சே அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது. மாகாண கவுன்சில் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும்கூட மாகாண ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது.

பொது வாக்கெடுப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும், இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்திடவும் இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மீனவர்களுக்கு பாதுகாப்பு

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் வாடிக்கையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் பற்றிய தமிழர்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியதோடு, பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தலைவர் கலைஞரின் வேண்டுகோளையும் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு

அப்போது பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், அந்த மீனவர் பிரதிநிதிகளிடம் ஜனவரி 20-ஆம்தேதி வாக்கில் இரண்டு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமென்று உறுதி அளித்தனர்.

இறுதியாக, 27.1.2014 அன்று இருநாட்டு மீனவர்களின் கூட்டம் நடைபெற்று எந்த முடிவிற்கும் வராமல் வெறும் விவாதத்தோடு கூடிக் கலைந்தது.

மீண்டும் கைதாகும் மீனவர்கள்

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் 30-1-2014 அன்று 38 இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி நிரந்தரமான தீர்வுக்கு வழிவகை செய்யாதது வருந்தத்தக்கதும், தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைப்பதுமாகும் என இக்கூட்டம் கருதுகிறது.

கச்சத்தீவு உரிமை

சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று தொடர்ந்திருக்கும் வழக்கில் தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வாறு டெசோ கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

English summary
Tamil Eelam Supporters’ Conference (TESO) held in Chennai Anna Arivalayam. TESO meet passed resolution bringing back the Katchateevu island under India’s control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X