புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கலில் அதிமுகவினர் அமளி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மற்ற கட்சியினரை விடாமல் தடுத்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் நகராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நேற்று, அதிமுக வேட்பாளர் ராஜசேகர் என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று அதிமுகவினர் வேறு யாரையும் மனுத் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து நகராட்சி அலுவலகத்தின் கதவுகளை மூடிவைத்து பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், அதுவரையில் மற்ற எந்தக் கட்சியினரையுமே வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுகவினர் அனுமதிக்கவில்லை. இதனால் கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் அதிமுக தொண்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுவரையில் மற்ற கட்சியினர் யாரும் மனுத்தாக்கல் செய்யாத காரணத்தினால் ராஜசேகர்தான் நகராட்சி தலைவர் என்று அதிமுக ஆதரவாளர்கள் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.