For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவசமாக கொடுக்கப்பட்ட மடி வற்றிய மாடுகள்: தமிழகத்தில் குறைந்து போன பால் உற்பத்தி..!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகரிக்கும் பன்றி காய்ச்சல் ! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்-வீடியோ

    சென்னை: சமீபத்தில் தான் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி மக்கள் மனதில் 'பாலை வார்த்திருக்கிறது' தமிழக அரசு.

    பால் தூய்மையின் அடையாளம், பசு தெய்வாம்சம் என்றெல்லாம் போற்றுகின்றனர். ஆனால் பாலில் கலப்படம் செய்து ஊழல் செய்தவர்கள், இலவசமாக கொடுத்த கறவை மாடுகளிலும் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தமிழக அரசு சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவசமாக கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில், தரம் குறைந்த பசு மாடுகள் வாங்கப்பட்டதாக, தணிக்கை அறிக்கை பகீர் தகவலை வெளியிட்டது.

    இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் நேரடி பங்கேற்புடன், ஆண்டுக்கு, 12 ஆயிரம் பசு மாடுகள் வாங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி கடந்த மூன்றாண்டுகளில் 36 ஆயிரம் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 10 லிட்டர் பால் தரும் அளவுக்கு தரமான மாடு வாங்கப்படும் என்றார்கள். ஆனால் 36 ஆயிரம் மாடுகள் மூலம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆவினுக்கு பால் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. காரணம் இலவச பசுக்கள் கறக்கும் பாலை தனியாருக்கு விற்பனை செய்வதுதானாம்.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    மாடுகளை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட, சிறப்பு குழுக்களின் அறிக்கையில், 'கலப்பின ஜெர்சி பசுக்களை வாங்க, ஆந்திர மாநிலம் ஏற்ற இடமல்ல' என்று தெரிவித்தும், அதை புறக்கணித்து விட்டு, ஆந்திராவில் உள்ள, புங்கனுார், பலமனேர், பீலேரு சந்தைகளில், பசு மாடுகளை வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டு இலக்கை அடைவதற்காக, தரம் குறைந்த மற்றும் வயதான பசு மாடுகளை வாங்கியுள்ளனர்.

    தரம் குறைந்த மாடுகள்

    தரம் குறைந்த மாடுகள்

    வாங்கப்பட்ட மொத்த கறவை மாடுகளில், 3 சதவீதம் மட்டுமே தரம் குறைந்தவை; அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிலேயே இருப்பதாக, அரசு சப்பை கட்டு கட்டியது. ஆனால், இயக்குனரகம் அளித்த விவரங்களை, ஆய்வு செய்த தணிக்கைத் துறை மாநிலம் முழுவதும், இத்திட்டத்திற்காக வாங்கப்பட்ட, மாடுகளில், 44 சதவீதம், தரம் குறைவான மாடுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    பால் கறக்காத பசுக்கள்

    பால் கறக்காத பசுக்கள்

    ஒரு நாளைக்கு குறைந்தது, 10 லிட்டர் பால் தரும் பசுக்களை, தொடர்ந்து மூன்று வேளை கறந்து சரிபார்த்து வாங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தணிக்கையில் நடத்தப்பட்ட கள ஆய்வில், பசுக்களை வாங்குவதற்கு முன், ஒரு தடவை கூட, பால் கறந்து சரி பார்க்கவில்லை என, 364 பயனாளிகளில், 235 பேர் தெரிவித்தனர்.

    எத்தனை லிட்டர் பால்

    எத்தனை லிட்டர் பால்

    மேலும், 383 பயனாளிகளில், 19 சதவீத பயனாளிகள், 3 லிட்டருக்கு குறைவாகவும், 65 சதவீதம் பேர், 3 முதல் 7 லிட்டர் வரை கிடைத்ததாகவும் தெரிவித்தனர். 61 பேர் மட்டும், ஏழு லிட்டருக்கு மேல், பால் கிடைத்தது என்று கூறியுள்ளனர்.

    நிறைவேறாத நோக்கம்

    பயனாளிகளை தேர்வு செய்வதில், வெளிப்படை தன்மை இல்லாததால், திட்டத்தில் கூறப்பட்ட பலன்கள், தேவையும், தகுதியும் உடைய பெண் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. தகுதியான நபர்களுக்கு வழங்கப்படாமல், 60 வயதுக்கு அதிகமான சிலருக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டன. முறையான ஆய்வின்றி அவசர அவசரமாக தரம் குறைந்த மற்றும் அதிக வயதுடைய கறவை மாடுகள் வாங்கப்பட்டதால், எதிர்பார்த்த அளவு பால் கிடைக்கவில்லை, என மத்திய தணிக்கை அறிக்கை தோலுரித்துக் காட்டிவிட்டது.

    பால் உற்பத்தி அதிகரிக்கவில்லை

    பால் உற்பத்தி அதிகரிக்கவில்லை

    கறவை மாடுகளை வாங்கும் முறையில் குறைபாடு இருந்ததால், தரம் குறைந்த மாடுகள் மற்றும் குறைந்த அளவு பால் தரும் மாடுகள் வாங்கப்பட்டன. இதனால், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள, ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் மற்றும் மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கம் நிறைவேறவில்லை. இவ்வாறு, தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்முதல் அதிகரிக்கவில்லை

    கொள்முதல் அதிகரிக்கவில்லை

    பால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்ற புகார் ஒருபுறம் இருக்க மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பாலின் உற்பத்தியைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்ட 'விலையில்லா கறவை மாடுகள்' திட்டத்தால் ஆவின் நிறுவனத்திற்கு எந்த பலனும் இல்லையாம். இலவச கறவை மாடுகள் திட்டத்தால், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல், எந்த அளவிலும் அதிகரிக்கவில்லை எனவும் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தனியாருக்கு விற்பனை

    தனியாருக்கு விற்பனை

    இலவச கறவை மாடுகள் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது, 1.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், இந்த பால், ஆவின் நிறுவனத்திற்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம், ஆவின் கொள்முதல் விலை குறைவு என்பதுதானாம். இதன் காரணமாக, இலவச கறவை மாடுகளை பராமரித்து வருபவர்கள், தனி நபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், பாலை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தின் மூலம், ஆவின் நிறுவனத்திற்கு, எந்த லாபமும் இல்லை. கிருஷ்ணகிரியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதானாம்.

    தமிழகத்தில் குறைந்து வரும் பால் உற்பத்தி

    தமிழகத்தில் குறைந்து வரும் பால் உற்பத்தி

    பால் உற்பத்தியில் இந்தியாவில் 7-வது இடத்தில் இருந்த கர்நாடகா இன்று 2-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வோர் ஆண்டும் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இப்போது ஆவினில் மட்டும் தினமும் 23 லட்சம் லிட்டர் பால்தான் உற்பத்தி ஆகிறது. முந்தைய ஆட்சியில் 27 லட்சம் லிட்டர் வரை உற்பத்தி ஆனது. பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. 2012-2013-ம் ஆண்டில் 24.36 லட்சம் லிட்டராகக் இருந்த ஆவின் பால் உற்பத்தி, 2013-2014-ல் 23.22 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது என்கின்றனர்.

    பால் விலை உயர்வு ஏன்?

    பால் விலை உயர்வு ஏன்?

    இந்த நிலையில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதால்தான் வாங்குவோர்க்கு 10 ரூபாய் விலை ஏறுகிறது என ஆவின்பால் விலை ஏற்றத்திற்கு நியாயம் கற்பிக்கிறது தமிழக அரசு. மாடுகளுக்குத் தேவையான தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் அதிக கொள்முதல் விலை கொடுக்கும் தனியாருக்கு பாலை விற்கின்றனர்.

    மறைமுக ஊக்குவிப்பு

    மறைமுக ஊக்குவிப்பு

    இன்று வரை ஆவின் பாலுக்கும் - தனியார் பாலுக்கும் உள்ள வித்தியாசம் லிட்டருக்கு 13 ரூபாய். ஆவின் விலை ஏற்றத்திற்குப் பிறகு அதாவது நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு இது வெறும் 3 ரூபாயாகத்தான் இருக்கும். இதனால் ஆவின் பால் வாங்கியவர்கள் தனியார் பால் வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதன் மூலம் ஆவின்பால் விற்பனை குறைய வாய்ப்புள்ளது.

    ரூ.2000 கோடி ஊழல்

    ரூ.2000 கோடி ஊழல்

    ஆவின் பால் விற்பனை குறைவது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தினந்தோறும் 2 லட்சம் லிட்டர் ஆவின் பாலைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டு, அதே அளவு கெமிக்கல் தண்ணீரைக் கலந்து 12 வருடமாக, ஆண்டுக்கு 150 கோடிக்கு மேல் சுருட்டி, சுமார் 2000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். இந்த ஊழலை ஈடுகட்ட இப்போது பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளனர்.

    தாய்பாலுக்கு நிகரானது

    தாய்பாலுக்கு நிகரானது

    மக்களுக்கு, தரமாகவும் மலிவாகவும் பால் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1981-ம் வருடம் தொடங்கப்பட்டதுதான் ஆவின் நிறுவனம். 12000-க்கு மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், 20 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய உறுப்பினர்கள் என குறுகிய காலத்தில் ஆலமரம் போல் வளர்ந்தது. கறந்தது கறந்தபடி, சொட்டுத் தண்ணீர் கூடக் கலக்காமல் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு பாலைக் கொண்டு வந்தார்கள் விவசாயிகள். அந்தப் பாலை அதே தூய்மை - தரத்துடன், வீடுவரை கொண்டு வந்து சேர்த்தனர். இப்படித்தான் தாய்ப்பாலுக்கு நிகரான மதிப்பைப் பெற்றது ஆவின் பால். ஆனால் இன்றைக்கு அதன் நிலையே தலைகீழாகி வருகிறது.

    அரசின் நடவடிக்கை என்ன?

    அரசின் நடவடிக்கை என்ன?

    ஒருபுறம் தரமற்ற மாடுகள், மறுபுறம் இலவச கறவை மாடுகள் கறக்கும் பாலை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்காமல் தனியாருக்கு கொடுக்கும் இலவச மாடுகள் வாங்கிய மக்கள் என பால் உற்பத்தியில் பின் தங்கியுள்ளது தமிழக அரசு. ஆவின் நிறுவன ஊழலை களைவதோடு பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    English summary
    The latest CAG report said the State Government not only purchased the cows in haste, but also procured over-aged cattle which resulted in the death of 770 cows since July 2011 when the project was launched across the State. Procurement of 12,000 cows was targeted every year with direct involvement of beneficiaries with a requirement of 1,000 cows every month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X