For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவரை "திமுக" போல இருந்த நடிகர் சங்கம்.. இனி "அதிமுக" போல செயல்பட வாய்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: பருப்பு விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு, டோல்கேட் பிரச்சினை, தாத்ரி பிரச்சினை என சகல பிரச்சினைகளையும் தமிழக மக்கள் கண்ணிலிருந்து கடந்த பல நாட்களாக மறைக்க உதவிய, நேற்று முற்றிலுமாக பிளாக் அவுட்டே ஆனது போன்ற நிலையை ஏற்படுத்தி விட்ட நடிகர் சங்கத் தேர்தல் ஓய்ந்து விட்டது. இந்தத் தேர்தல் சில பாடங்களை நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நமது கண்ணில் பட்டது.

தென்னிந்திய நடிகர்கள் ஒன்றாக சென்னையிலிருந்து தொழில் செய்தபோது உருவான இந்த தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது புதிய நிர்வாகிகளைக் கண்டுள்ளது. ஆனால் பல காலத்திற்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தலைவர் பொறுப்பில் அமர்ந்திருப்பவர் அந்த அளவுக்கு பலமானவராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Can Nasser work independently?

ராதாரவி தலைவராக இருந்த காலத்தில் சங்கத்தை தனது கைப்பிடிக்குள் வைத்திருந்தார். அவர்தான் அத்தாரிட்டியாக இருந்து வந்தார். அவர் சொல்வதே விதி, அவர் எடுப்பதே முடிவு என்ற நிலை இருந்தது.

அதன் பிறகு அவரது ஆசியுடன் விஜயகாந்த் தலைவரானார். ராதராவி அவருக்கு அடுத்த நிலைக்கு வந்தார் ராதாரவி. கூடுதலாக சரத்குமாரும் இணைந்தார். இப்போதும் "தலைவர்" விஜயகாந்த்தான் ஆல் இன் ஆலாக இருந்து வந்தார். சிறப்பாக செயல்பட்டார் என்பது சாதாரண பாராட்டு, தலைவர் பதவியில் கலக்கி விட்டார் விஜயகாந்த் என்பதே பொருத்தமானது.

விஜயகாந்த்துக்குப் பின்னர் அவரது ஆசியுடன் தலைவரானவர் சரத்குமார். விஜயகாந்த்தைப் போலவே இவரும் சிறப்பாகவே செயல்பட்டார். ஒரு தலைவராக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார். முடிவுகளை எடுப்பதிலும் தலைவராக தனது அதிகாரத்தை யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் செயல்படுத்தினார் என்றும் சொல்லலாம்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது இதுவரை திமுக போல (அங்கு அதிகாரமிக்க பதவி தலைவர் பதவிதான்.. பொதுச் செயலாளர் அல்ல) இருந்து வந்த நடிகர் சங்க நிர்வாகம்.. முதல் முறையாக அதிமுக போல மாறியுள்ளது (இங்கு பொதுச் செயலாளர் பதவிக்குத்தான் அதிகாரம்.. தலைவர் பதவியே இங்கே இல்லை)

அதிகார அளவில் பார்த்தால் நடிகர் சங்கத்தின் தலைவர் தான் உயர்ந்தவர். அடுத்த இடம்தான் பொதுச் செயலாளர் பதவிக்கு. ஆனால் நாசரால் எந்த அளவுக்கு சுயேச்சையாக ஒரு சிறந்த தலைவராக, அத்தாரிட்டியுடன் கூடிய தலைவராக, தனித்துவத்துடன் செயல்பட முடியும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

Can Nasser work independently?

காரணம், "நாசர் அணி" என்று யாருமே இதை ஒருபோதும் அழைத்ததில்லை. "விஷால் அணி" என்றுதான் அத்தனை பேரும் கூறி வந்தனர். அதை விட காமெடி, கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலுமே நாசர் வெற்றி பெற்றதை பெரிதாக சொல்லவில்லை. விஷால் வெற்றி பெற்றதைத்தான் போட்டுத் தாக்கியுள்ளனர். அந்த அளவுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விஷால் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவ்வளவு ஏன், தானும், தன்னுடைய அணியினரும் பெற்ற வெற்றிக்குக் காரணம் விஷால்தான் என்று நாசரே கூறி விட்டார்.

நாசர் ஒரு விஜயகாந்த் போல, ராதாரவி போல, சரத்குமார் போல நிச்சயம் தனித்துவத்துடன் செயல்பட வாய்ப்பே இல்லை. இதற்கு என்ன காரணம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதே இல்லை, விளக்கவும் தேவையில்லை. காரணம், நிச்சயம் விஷாலின் ஆளுமையிலிருந்து நாசரால் தப்ப முடியாது.

அதை விட மேலும் சில "இன்ப்ளூயன்ஸ்"களையும் அவர் சந்திக்க வேண்டி வரும். அதையும் வெளிப்படையாக விளக்கத் தேவையில்லை. அனைவரும் எளிதாக ஊகிக்க கூடியதுதான் அது.

விஷால் முதல் கார்த்தி வரை, கருணாஸ் முதல் ஸ்ரீமன் வரை பலரையும் கலந்து ஆலோசித்துத்தான் அவர் எந்த முடிவையும் எடுக்க முனைவாரே தவிர தனித்துவத்துடன் திகழ அவர் நிச்சயம் முயல மாட்டார் என்பதில் சந்தேகம் இல்லை.

கலந்து ஆலோசிப்பதில் நிச்சயம் தவறு இல்லைதான்.. ஆனால் முடிவு "கலந்த சாதம்" போல மாறி விடும் வாய்ப்புள்ளது என்பதுதான் இங்கு கவனிக்கக் கூடியதாகும்.

ஒரு தலைவராக நாசர் எப்படி செயல்படுவார் என்பது மிகுந்த கவனிப்புக்குரியதாக உள்ளது. மேலும் சரத்குமார் தரப்பு சோடையாக தோற்கவில்லை. கம்பீரமாகவே தோற்றுள்ளனர்.. "நாட்டாமை" இன்னும் பல நடிகர்களின் மனதில் இருக்கிறார் என்பதையும் அவர்கள் நிரூபித்துள்ளனர். எனவே நாசர் அன் கோவின் ஒவ்வொரு அடியையும் அவர்கள் ரொம்ப நெருக்கமாக பின் தொடர்ந்து வருவார்கள், சரியான வாய்ப்பு கிடைக்கும்போது மடக்கி முடக்கிப் போட முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நாசர் தரப்பு தான் அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது தெரியவில்லை. பூச்சி முருகன் வழக்கைத்தான் சரத்குமார் முக்கியமாக கூறி வந்தார். பூச்சி முருகேன், நாசர் குரூப்பில்தான் இருக்கிறார். எனவே அவர் வழக்கை வாபஸ் பெறுவதில் பெரிய பிரச்சினை இருக்காது. ஆனால் அது தொடர்பான சட்டப் பிரச்சினைகள், நாடக நடிகர்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகள் என பல சவால்கள் அவர்களுக்குக் காத்துள்ளன.

இதில் எது தாமதமானாலும், அது நிச்சயம் சரத்குமார் மீண்டும் வலுப்பெற உதவும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

பொறுத்திருந்து பார்க்கலாம்...!

English summary
Many believe that Nasser cannot work independently as the President of the Nadigar sangam, like his predecessors. Because Vishal has overshadowed him in many aspects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X