For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட் ஊழல்: ஒ.பி.எஸ் மனச்சாட்சி இருந்தால் பதவி விலகட்டும்– டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது. முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அதன் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவையாகும்.

கிரானைட் கொள்ளை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கை வெளியானதுமே இது குறித்து நடுவண் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் இப்பிரச்னை தீவிரமடைந்ததையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கிய சகாயம் நேற்று இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார்.

சகாயம் அறிக்கை:

சகாயம் அறிக்கை:

அவரது அறிக்கையில், விசாரணையில் உதவுவதற்காக நான் கோரிய ஜெயசிங் ஞானதுரை என்ற அதிகாரியை அனுப்பாமல் தமிழக அரசு தாமதம் செய்தது. கடந்த 9ஆம் தேதி தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. விசாரணைக்குழுவின் செலவுக்காக அரசிடமிருந்து பணம் பெறுவதில் பல தடைகள் இருந்தன. இந்த ஊழல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் நான் பல தகவல்களை கோரியிருந்தேன். ஆனால், அவர்கள் இதுவரை அந்த தகவல்களைத் தரவில்லை. இதனால் விசாரணை மிகவும் தாமதம் ஆனது'' என்று சகாயம் குற்றஞ்சாற்றியிருந்தார்.

உயர்நீதிமன்றம் கண்டனம்

உயர்நீதிமன்றம் கண்டனம்

கிரானைட் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘‘மதுரை மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடித்து விட்டனர். அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. இதுகுறித்து விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். உச்ச நீதிமன்றம் காட்டிய வழியில் தமிழகத்திலுள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்து விடுவோம்'' என்று எச்சரித்துள்ளார்.

மூடி மறைப்பதா?

மூடி மறைப்பதா?

தமிழகத்தின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் தன்மை கொண்ட கிரானைட் ஊழலை மூடி மறைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விடுத்த எச்சரிக்கை சாட்டை அடி ஆகும்.

கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருந்தால், இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ, அதை செய்யாமல் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே தீவிரம் காட்டி வந்தது.

நீதிமன்றம் அபராதம்

நீதிமன்றம் அபராதம்

ஒரு கட்டத்தில் தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்ததுடன், ரூ.10,000 அபராதமும் விதித்தது. இதையடுத்து தான் வேறு வழியின்றி சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது, மதுரையில் சகாயம் தங்கியிருந்த இடத்தை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தது, அதிகாரிகள் மூலம் சகாயத்தை அவமதித்தது என அரசுத் தரப்பில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

அரசு விருந்தினாரா?

அரசு விருந்தினாரா?

கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதற்கு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கிரானைட் ஊழல் வெளியானபோது அதற்கெல்லாம் காரணமானவர் என்று கூறி கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் இப்போது அரசின் விருந்தினரைப் போன்று கவனித்துக் கொள்ளப்படுவதற்கும், கிரானைட் கொள்ளை தொடர்பாக அண்மையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் அவரது பினாமிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மட்டும் கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் காரணம் என்ன? என்பதை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும். அவரைக் காப்பாற்றுவதற்காக கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கிடப்பில் போடவும் தமிழக அரசு தயாராகிவிட்டது.

கர்நாடக அமைச்சர்கள்

கர்நாடக அமைச்சர்கள்

கர்நாடத்தில் 2006 முதல் 2010 வரையிலான 4 ஆண்டுகளில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா இந்த கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருந்தற்காக பின்னாளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பதவி விலகட்டும்

பதவி விலகட்டும்

கிரானைட் ஊழலுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆட்சியாளர்களின் செயல் எடியூரப்பா மீதான குற்றச்சாற்றுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has asked the CM not to continue in the office in the granite scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X