தில்லையில் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆளும் மன்னனுக்கு கேடு... சொல்கிறார் ஹெச். ராஜா
சிதம்பரம்: தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் ஆளும் மன்னனுக்கு கேடு. ஜனநாயக காலத்தில் தமிழகத்தில் மன்னன் முதல்வர்தான் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். பாஜக தொண்டர்கள், இந்து உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராடி இங்கு தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19ஆம் தேதி ஞாயிறன்று தேரோட்டமும், திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5ஆம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் பங்கேற்றனர்.
க.அன்பழகன் நூற்றாண்டு.. 'உடன்பிறப்புகளுக்கு' முதல்வர் ஸ்டாலின் உருக்கமான மடல்

சிதம்பரத்தில் தேரோட்டம் ரத்து
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிலை அபகரிக்க முயற்சி
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதாகட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று வருகை தந்தார். அவரை கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, சிதம்பரத்தில் 19 தேதி நடராஜர் கோயில் தேரோட்டமும், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. தீயசக்திகள் இந்த கோயிலை எப்படியாவது அபகரிக்க பல தடவை முயற்சி செய்துள்ளது. அரசு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. காரணம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 26-ன் படி சம்பிரதாய பிரிவுகளை பாதுகாக்க தனி சட்டப்பிரிவு உள்ளது.

தலையிட காரணம் என்ன
சிதம்பரத்தில் சட்டப்படி மத விழாக்களுக்கு அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் தனியார் கோயிலான இங்கு தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி கிருஸ்துமஸ் வருகிறது. சர்ச்சுகளில் கிருஸ்துமஸ் விழாவிற்கு தடை விதிக்க முடியுமா? சிதம்பரத்தில் தலையிட காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

சிதம்பரம் தேரோட்டம்
தில்லை நடராஜரை பீரங்கி வைத்து தகர்ப்போம் என சொன்ன தீயசக்திதான் காரணம். தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் பாஜக தொண்டர்கள், இந்து உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராடி இங்கு தேரோட்டத்தை நடத்த வேண்டும்.

தேரோட்டம் நடக்காவிட்டால் கேடு
தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் ஆளும் மன்னனுக்கு கேடு. ஜனநாயக காலத்தில் தமிழகத்தில் மன்னன் முதல்வர்தான். இந்து விரோத நடவடிக்கைகளை அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். சேலத்தில் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடலாம். ஆனால் இங்கு கூடக்கூடாதா? என்று கேட்டார்.

ஆக்கிரமிப்பு
தமிழ்நாட்டில் உள்ள இந்து விரோத தீயசக்திகள் அனைத்து இந்து கோயில்களையும் அழித்துவிட வேண்டும் என மும்மரமாக உள்ளது. திமுவின் இந்து விரோத ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை இடித்துள்ளது. தமிழகத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள் இடிக்கப்படவில்லை. காஞ்சிபுரத்தில் பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை இடித்துள்ளார். அதே காஞ்சிபுரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் இடத்தில் 22 ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கிருஸ்துவ வணிக ஸ்தாபனத்தை 4 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாடகை தொகை ரூ.9.50 கோடியை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 6 மாதமாகியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்றும் ஹெச் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.