For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் அடுத்த சதி... எச்சரிக்கும் அன்புமணி

கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்திற்கு துரோகம் செய்ய மத்திய அரசு தயாராகி விட்டது என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரிப் பிரச்சினையை தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டே செல்ல வேண்டும், தமிழகத்திற்கு ஒருபோதும் நீதி கிடைத்துவிடக் கூடாது என்பது தான் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

Cauvery issue: Anbumani slams central government

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நிலையில், தமிழகத்திற்கு எதிரான அடுத்த சதியை கர்நாடகம் தொடங்கியுள்ளது.

நடுவர் மன்றத் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு தமிழகத்திற்கு தர வேண்டிய நீரின் அளவை குறைக்கும்படி நீதிமன்றத்தைக் கோரப்போவதாக கர்நாடகம் அறிவித்துள்ளது.

காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களின் கூடுதல் வாதங்களை எழுத்து மூலம் தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

Cauvery issue: Anbumani slams central government

இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமனுடன் டெல்லியில் நேற்று கலந்தாய்வு நடத்திய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளவாறு தமிழகத்திற்கு காவிரியில் 192 டி.எம்.சி தண்ணீர் தர முடியாது என்று கூறினார்.

மாறாக, ஆண்டுக்கு 100 டி.எம்.சி. முதல் 102 டி.எம்.சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலும் என்றும், அதற்கேற்ற வகையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மாற்றியமைக்கும்படி உச்சநீதிமன்றத்தைக் கோரப் போவதாகவும் பாட்டீல் தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சரின் இந்த கருத்தின் மூலம் இரு உண்மைகள் வெட்ட வெளிச்சமாகி விட்டன. முதலாவதாக, மேகேதாட்டு என்ற இடத்தில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கர்நாடகம், அந்த அணை கட்டப்பட்டாலும் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் தடையின்றி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று இப்போது கூறுவதன் மூலம், தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை என்பதும், அதற்காகத் தான் மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்டுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு முன்வைத்த வாதங்களையும், இப்போது கர்நாடக அரசு முன்வைக்கும் வாதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு, கர்நாடக அரசு ஆகிய இரண்டின் வாதமுமே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை சிதைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது.

காவிரிப் பிரச்சினையை தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டே செல்ல வேண்டும், தமிழகத்திற்கு ஒருபோதும் நீதி கிடைத்துவிடக் கூடாது என்பது தான் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Cauvery issue: Anbumani slams central government

மத்திய அரசும், கர்நாடக அரசும் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் நோக்கத்தை கண்டறிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை. இதற்கெல்லாம் அரசியல் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜகவும் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசும் துடித்துக் கொண்டிருக்கின்றன.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அந்த இரு கட்சிகளும் தலைகீழாக நின்றாலும் எதையும் சாதிக்க முடியாது. எனவே, தங்களுக்கு சாதகமான கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்திற்கு துரோகம் செய்ய மத்திய அரசு தயாராகி விட்டது.

அதனால் தான் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தது. கர்நாடகத்தை ஆளும் காங்கிரசும் வழக்கமான காரணங்களுக்காக தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சிதைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒன்றாக கை கோர்த்து செயல்படும் நிலையில், இதை தமிழக அரசு திறமையாக செயல்பட்டு முறியடிக்க வேண்டும். பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வழக்கில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு காவிரி தொழில்நுட்பக் குழு மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

English summary
PMK leader Anbumani Ramadoss has slamed central government high drama in Cauvery water issue in Supreme court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X