For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோகுல்ராஜ் கொலைவழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 17பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Google Oneindia Tamil News

நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ,23. தலித் இளைஞரான இவர் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தார். ரயில் விபத்தில் கோகுல்ராஜ் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் காவல் துறையினர் விசாரணையை துவக்கினர். எனினும், கோகுல்ராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என, அவரது பெற்றோர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து கோகுல்ராஜ் சம்மந்தப்பட்ட வழக்கு திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தவிர, அந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுப்பிரியா நியமனம் செய்யப்பட்டார்.

அதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யுவராஜ் தலைமறைவானர். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்தது. போலீசாரால் தேடப்பட்ட யுவராஜ், வாட்ஸ்அப், டிவி பேட்டி என போலீசாருக்கு சவால் விட்டு வந்தார்.

சரணடைந்த யுவராஜ்

சரணடைந்த யுவராஜ்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். யுவராஜின் கார் டிரைவர் அருணும் சரணடைந்தார்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

சிறையில் உள்ள யுவராஜ் மீது, ஏற்கனவே ஈமு கோழி வளர்ப்பு மோசடி, அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு என, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் யுவராஜை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, கடந்த டிசம்பர் 3ம் தேதி யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து யுவராஜ், கார் டிரைவர் அருண் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காவல் நீட்டிப்பு

காவல் நீட்டிப்பு

யுவராஜின் நீதிமன்றக் காவல் புதன்கிழமை முடிவடைந்தது. ஆனால், அவரை நாமக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் பாதுகாப்புச் சிக்கல் இருப்பதை உணர்ந்த காவல் துறை, காணொலிக் காட்சி மூலம் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தியது. இதையடுத்து, யுவராஜிடம் புதன்கிழமை மாலை காணொலிக் காட்சி மூலம் நாமக்கல் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மலர்மதி விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு அவரது காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு 700 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் யுவராஜ் உள்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இனி கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Crime Branch-Criminal Investigation Department on Thursday filed the charge sheet in the sensational murder of Gokulraj, in a judicial magistrate court Namakkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X