For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக்காக கொல்லப்பட்டாரா ராமஜெயம்? குற்றவாளிகளை கண்டுபிடிக்குமா சி.பி.சி.ஐ.டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிய இன்னும் சில வாரங்களே உள்ளதால் சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் இரண்டு உள்ளங்கைகளிலும் கருப்பு மை காணப்பட்டதாகவும், அது, அவரது விரல் ரேகைகளைப் பதிவு செய்வதற்காக செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதான் விசாரணை வேறு கோணத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

"ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளிகளை நெருங்கிட்டோம்... ஆனாலும் அவகாசம் வேண்டும்... இதுதான் சி.பி.சி.ஐ.டி ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வைக்கும் கோரிக்கை. சி.பி.சி.ஐ.டி சார்பில் கேட்கப்படும் கால அவகாசத்தைப் பார்த்து கடுப்பான நீதிபதியே, இனியும் டைம் தர முடியாது... ஜூலை 24தான் கடைசி தேதி என்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் கொடுத்த கெடு முடியை இன்னும் 26 தினங்களே உள்ளது, அதற்குள் ராமஜெயத்தை கொடூரமாக கொன்ற கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அன்புவின் முன் உள்ள சவால்.

கடந்த 2012 மார்ச் 29ம் தேதியன்று காலையில் வாக்கிங் போன ராமஜெயம் வராமலே போவார் என்று அவரது மனைவிக்கு தெரியாது. காணமல் போன ராமஜெயம் காவிரிக்கரையோரம் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் திருச்சியின் பிரபல தொழிலதிபர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி என்று தெரிந்தும் பிகொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தடுமாறியது. இதனையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டிபோலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும் பிரயோஜனம் இல்லை. இதோ, அதோ என்று இழுத்தடித்து ஆண்டுகள் மூன்று கடந்து விட்டன. தனது கணவரை கொன்றவர்களை காப்பற்ற நினைக்கின்றனர் எனவே வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தில் ஆஜரான சி.பி.சி.ஐ.டி போலீசாரோ, குற்றவாளியை நெருங்கிவிட்டோம், ஆனால் ஆதரத்துடன் நிரூபிக்க அவகாசம் என்று பாடிய பல்லவியையே பாடி நீதிபதியையே கடுப்பேற்றியதன் விளைவு காலக்கெடு நிர்ணயித்து விட்டார் நீதிபதி.

கொலை நடந்த சில மணிநேரங்களில் கண்டுபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை சில போலீஸ் அதிகாரிகளே தவற​விட்டுள்ளனர். அதுதான் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த வழக்கையே சிதைக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாம்.

அறிவியல் பூர்வமான விசாரணை

அறிவியல் பூர்வமான விசாரணை

இந்தக் கொலை வழக்கை அறிவியல்பூர்வமாக சிபிசிஐடி விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்றம், சுட்டிக்காட்டிய பிறகும், உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட அறிவியல்பூர்வ விசாரணை நடவடிக்கை எதையும், இதுவரை இந்த வழக்கில் அதிக சந்தேகத்துக்குரிய நபர்களிடமோ, ராமஜெயத்தின் உறவினர்களிடமோ சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடத்தவில்லை எனத் தெரிகிறது.

கறுப்பு மை வந்தது எப்படி

கறுப்பு மை வந்தது எப்படி

கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் இரண்டு உள்ளங்கைகளிலும் கருப்பு மை காணப்பட்டதாகவும், அது, அவரது விரல் ரேகைகளைப் பதிவு செய்வதற்காக செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, விரல் ரேகை பதிவு என்பது சொத்து பரிவர்த்தனைக்காகவே மேற்கொள்ளப்படும். எனவே, ராமஜெயத்தின் கொலை சொத்துகளுக்காக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பு அதிகம் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

விசாரணை வளையத்தில் யார்? யார்?

விசாரணை வளையத்தில் யார்? யார்?

சொத்துகளுக்காக நடந்த கொலை என்றால், ராமஜெயத்தின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும்கூட கொலையை செய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், ராமஜெயத்தின் உறவினர்களிடமோ அல்லது அவரது நண்பர்களிடமோ இந்தக் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தவில்லையாம்.

சி.பி.ஐ விசாரணை

சி.பி.ஐ விசாரணை

இந்த வழக்கில் ராமஜெயத்தின் மனைவி லதா மட்டுமே தனது கணவர் கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்கக் கோரியும், சி.பி.ஐ விசாரணை கேட்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், அவரது உறவினர்கள் பலர் இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

மறுபடியும் முதல்ல இருந்து

மறுபடியும் முதல்ல இருந்து

இது ஒருபுறம் இருக்க ராமஜெயம் வழக்கை விசாரித்த போலீஸ் உதவி ஆணையர்களான ஜெயச்சந்திரன், மாதவன், சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், மரகதம் ஆகியோரை மீண்டும் விசாரிக்கப் போகிறதாம் சி.பி.சி.ஐ.டி. கொலை நடந்தபோது கன்ட்ரோல் ரூம் ஏ.சி-யாக இருந்தார் ஜெயச்சந்திரன். அவர் இந்த வழக்கில் நேரடியாகத் தனிப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தவறவிட்டாரா மாதவன்

தவறவிட்டாரா மாதவன்

அதேபோல திருச்சி நில அபகரிப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்த மாதவன்

ராமஜெயம் கொலை செயப்பட்ட தினத்தன்று தில்லை நகரில் உள்ள தெருவில் ராமஜெயத்தின் பையில் இருந்த ரயில் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களையும் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்ததாகக் கட்டுக்கம்பிகளையும் கண்டெடுத்தவர்.

அவர்களாக இருக்குமோ

அவர்களாக இருக்குமோ

ராமஜெயம் கொலைக்குப் பிறகு வெளியூர்வாசியாக மாறிவிட்ட திருச்சி உறையூர் பகுதியில் வசிக்கும் பெண் வழக்கறிஞர் ஒருவரின் கணவரையும் போலீசார் சந்தேக வலையத்தில் கொண்டு வந்துள்ளனர். அதேபோல ராமஜெயத்தினால் நெருக்கடிக்கு ஆளாகி உயிரிழந்த கான்ட்ராக்டரின் ஆதரவாளர்கள் மீதும் ஒரு கண்பதிந்துள்ளது.

உறவினர்களிடம் விசாரணை

உறவினர்களிடம் விசாரணை

மேலும் ராமஜெயத்தின், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது உறவினர்கள் அல்லது அவருக்கு நம்பிக்கையாக இருந்தவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏனெனில் அவரது சடலத்தில் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் காணப்படுவதால், இந்தக் கொலை சொத்துக்காக நடந்ததாகவே தெரிகிறது என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

திசை திருப்ப முயற்சியா?

திசை திருப்ப முயற்சியா?

அதே நேரத்தில் ராமஜெயம் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தது போன்ற ஆவணங்கள் அல்லது பதிவு செய்யாத சொத்து பரிவர்த்தனை ஆவணங்களை எழுதிக் கொடுத்ததுபோல், சொத்துகளை எழுதி வாங்கிய பிறகு அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், சொத்துகளை எழுதி வாங்க கட்டைவிரல் ரேகையை பதிவு செய்தால் போதும். உள்ளங்கை உள்ளிட்ட கையின் பிற இடங்களில் கருப்பு மை இருந்தது, போலீஸை திசை திருப்புவதற் காககூட செய்திருக்கலாம் என்பதும் போலீசார் எழுப்பும் சந்தேகமாகும்.

மூன்றாண்டு கால தேடுதல்

மூன்றாண்டு கால தேடுதல்

எது எப்படியோ ராமஜெயம் கொலை வழக்கு இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினால் எங்களின் மூன்று வருட உழைப்பு வீணாகிவிடும்' என்று கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான போது சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அன்பு நீதிபதியிடம் கூறவே அதை ஏற்ற நீதிமன்றம் ஜூலை 24 வரை அவகாசம் கொடுத்தது. காலக்கெடு முடிய இன்னும் சில வாரங்களே இருப்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர் சி.பி.சி.ஐ.டி.போலீசார். குற்றவாளியை கைது செய்து விடுவார்களா? அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்து விடுவார்களா என்பதே ராம ஜெயம் கொலை வழக்கு பற்றி பலருக்கும் எழுந்துள்ள கேள்வியாகும்.

English summary
The Madras High Court Bench Madurai directed CB-CID Superintendent of Police T.S. Anbu to be present in the court on July 24 to assist it in taking a decision on the plea made by the wife of the deceased to transfer the investigation to CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X