For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ்ணு பிரியா மரணத்தை காதலைக் காரணம் காட்டி திசை திருப்பும் போலீஸ்... குற்றம்சாட்டும் வக்கீல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடிப்பது காவல்துறையினரின் பணி. அதுவே ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த தற்கொலைக்காக பலவித கோணங்களில் ஆராய்வதும் காவல்துறையினரின் கடமைதான். ஒரு காவல்துறை அதிகாரியின் தற்கொலையை கடமை உணர்வோடு விசாரிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே வழக்கை திசை திருப்ப முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியான உடனேயே விஷ்ணுபிரியாவின் பெற்றோரும் அவரது தோழியும் டி.எஸ்.பியுமான மகேஸ்வரியும் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினர். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா, உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவும், கொலையாளி யுவராஜின் மிரட்டல் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படவே இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

CBCID police forces me to tell lies, says Vishnupriya's lawyer

விஷ்ணுபிரியா உபயோகித்த செல்போனை ஆராய்ந்த சிபிசிஐடி அதிகாரிகளோ, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. விஷ்ணுபிரியா மரணிக்கும் முன்பாக மூன்று பேரிடம் அதிக நேரம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் அர்ச்சகாக பணியாற்றிய விஜயராகவன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக பணிபுரியும் மாளவியா, ஆகிய இரு ஆண்களும் அடக்கம்.

மாளவியாவிடம் விசாரணை

கடந்த 28ம் தேதி வழக்கறிஞர் மாளவியாவிற்கு சம்மன் அனுப்பி 8 மணிநேரம் விசாரித்துள்ளனர் சிபிசிஐடி போலீசார். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மாளவியாவோ, டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுடன் தான் காதலில் இருந்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், தன்னை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

CBCID police forces me to tell lies, says Vishnupriya's lawyer

கடும் நெருக்கடி

டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ள மாளவியா, கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டு, வழக்கிற்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் வற்புறுத்தினர் என்றும், அதனால் விஷ்ணுப்ரியா நெருக்கடிக்கு ஆளானார் என்றும் தெரிவித்தார்.

விஷ்ணுபிரியாவின் குமுறல்

இந்த துறைக்கு வந்து எதை செய்யக் கூடாது என்று நினைத் தேனோ அதை செய்ய சொல்கின் றனர் என்று விஷ்ணுபிரியா என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு மட்டுமல்லாமல் குமாரபாளையம் ஜெகநாதன் கொலை வழக்கில் தனக்கு கடுமையான நெருக்கடி வந்ததாகவும் கூறினார்.

மாமுல் வசூல்

இதுதவிர மாதம்தோறும் பணம் வசூல் செய்து கொடுக்க சொல்லி தன்னை அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், டாஸ்மாக் கடையில் சோதனை செய்யக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து காவல் ஆய்வாளர் ஒருவர் மூலம் பணம் வசூல் செய்து கொடுக்க கூறியுள்ளனர். ஏடிஎம் கொள்ளை வழக்கிலும் தன்னை தரக்குறைவாக திட்டிவருவதாகவும் கூறினார்.

சிபிஐ விசாரணை தேவை

விஷ்ணுபிரியாவின் தற் கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியும், அதிகாரிகள் தரக் குறைவாக பேசியதுமே காரணம். குடும்ப பிரச்சினை என்பதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த வழக்கு திசை மாற்றப் பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். சிபிஐ விசாரணை கோரவும் தயாராக உள்ளோம் என்று மாளவியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎஸ்பி மகேஸ்வரியின் ஆதங்கம்

விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டதில் இருந்தே நாமக்கல் எஸ்.பி செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டிவரும் டிஎஸ்பி மகேஸ்வரியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர். உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்? என்ன விஷயங்களை ஷேர் செய்தார் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர். அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு, தற்கொலைக்குக் காரணம் எஸ்.பி-தான். அதைச் சொல்லி விஷ்ணுப்ரியா அழும் ஆடியோ என்னிடம் இருக்கிறது' என்று அதையும் கொடுத்தாராம் மகேஸ்வரி, ஆனால், அதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் காதல் பிரச்னை, அது, இது என்று புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் மகேஸ்வரி.

விஜயராகவனிடம் விசாரணை

இதனிடையே விஷ்ணுப்ரியாவுக்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது என்றும் அதுதான் தற்கொலைக்குக் காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. விஷ்ணுப்ரியாவும், விஜயராகவனும் செல்போனில் அடிக்கடி பேசி இருக்கிறார்கள் என்பதுதான் போலீசார் தெரிவிக்கும் காரணம். இதுநாள்வரை தலைமறைவாக இருந்த விஜயராகவன் இப்போதுதான் சிபிசிஐடியின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். அவரிடம் நேற்று 9 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது சிபிசிஐடி போலீஸ்.

CBCID police forces me to tell lies, says Vishnupriya's lawyer

காதலுக்கு எதிரியில்லை

விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவியோ, தன் மகளுக்கு யாருடனும் காதல் கிடையாது என்கிறார். அப்படி இருந்திருந்தால் நிச்சயமாக என்னிடம் சொல்லியிருப்பாள் என்றும் தெரிவிக்கிறார். அவள் சம்மதத்துடன் நான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தேன் என்றும் கூறியுள்ளார். அவளுக்கு பெருமாள் சாமி மீது அதீத நம்பிக்கை உண்டு. அதனால்தான், சிவகங்கையில் பயிற்சியில் இருக்கும்போது திருகோஷ்டியூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வாள். அப்போது அங்குள்ள குருக்கள் விஜயராகவனிடம் பேசுவாள். இதை வைத்து, காதல் விவகாரம் என்று ஒரு முடிச்சுப் போட்டு வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். தவறு செய்தவர்களை ப்ரியாவின் ஆன்மா சும்மா விடாது என்ற நம்பிக்கையோடு சொல்கிறார் விஷ்ணுபிரியாவின் தந்தை.

கொலையும், தற்கொலையும்

காதல் விவகாரத்தினால் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது ஒருபுறம் விசாரணையில் இருக்க, அந்த கொலை வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியாவின் தற்கொலையை காதல் விவகாரம் என்று ஊத்தி மூடப் பார்க்கிறார்கள் இந்த வழக்குகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பார்களா? அல்லது அப்பாவி யாரையாவது சிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
DSP Vishnupriya's lawyer Malviya has said that he is forced by the CBCID policeto tell lies about late Vishnupriya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X